disalbe Right click

Tuesday, April 11, 2017

தகுதித்தேர்வு - உயர்நீதிமன்றம் உத்தரவு



தகுதித்தேர்வு - உயர்நீதிமன்றம்  உத்தரவு

2011-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தக்கூடாது: உயர்நீதிமன்றம்
 2011-ஆம் ஆண்டுக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத கட்டாயப்படுத்தக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது கடைசி வாய்ப்பு என்றும், ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் தகுதித் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்றும், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறி, நிகழாண்டு மார்ச் 1-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தார்.
இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.சரோஜினி, எஸ்.சுதா உள்பட நான்கு ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: 
தமிழக அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு முன்பாகவே, பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தகுதி தேர்வு எழுத வேண்டியது இல்லை என, கடந்த 2013 செப்டம்பர் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையைத் தொடர்ந்து பணியில் சேரும் ஆசிரியர்கள்தான் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
எனவே, அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு இது பொருந்தாது என்று உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர் என மனுவில் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி டி.ராஜா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், கடந்த 2011-ஆம் ஆண்டு, நவம்பர் 15-ஆம் தேதிக்கு பின்பு பணியில் சேரும் ஆசிரியர்கள் மட்டுமே தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு பொருந்தும்.
மாறாக, அதற்கு முன்னர் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமல்ல. அவர்கள் தேர்வை எழுத வேண்டியது இல்லை. அவர்களை கட்டாயப்படுத்தவும் கூடாது எனக் கூறி உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நன்றி : தினமணி நாளிதழ் - 12.04.2017

12.04.2017 தினமலர் நாளிதழ் செய்தி

No comments:

Post a Comment