disalbe Right click

Saturday, May 6, 2017

அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் - அரசு விதிமுறைகள்

அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் - அரசு விதிமுறைகள்
சென்னை:அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரன்முறை செய்வதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் மூலம், ஏரி, குளம், கால்வாய் மற்றும் கோவில் நிலத்தில் வீடுகள் கட்டவும், விவசாய நிலத்தை வீட்டு மனையாக மாற்றவும், தடை விதிக்கப் பட்டு உள்ளது. இது தொடர்பான, இரண்டு அரசாணைகளை, உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு, நேற்று தாக்கல் செய்தது.
தமிழகத்தில், அங்கீகாரமற்ற வீட்டு மனை களை பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம், 2016 செப்., 9ல், தடை விதித்தது. இதையடுத்து, மனைகள் வரன்முறை திட்டம், விவசாய நிலங்கள் பயன்பாடு மாற்றம் தொடர்பான புதிய விதிமுறைகளுக்கு, மே, 2ல் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், தர்மேந்திர பிரதாப் யாதவ், இரண்டு அரசாணைகளை, நேற்று வெளியிட்டார். அவற்றை, உயர் நீதிமன்றத் தில், தமிழக அரசு தாக்கல் செய்தது.முதலாவது அரசாணை யில், அங்கீகாரமற்ற மனைகளை, வரன்முறை செய்வதற்கான, விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அங்கீகார மின்றி உருவாக்கப்பட்டு, 2016 அக்., 20க்கு முன், விற்பனை பத்திரம் பதிவு செய்த மனைகளை, வரன்முறை செய்யலாம். இதில், விண்ணப்ப தாரர் பெயரில், பத்திரம் பதிவாகி இருக்க வேண்டும். 'பவர்' பத்திரம் பெற்றவர்களுக்கு, வரன்முறையில் விண்ணப் பிக்க தகுதி இல்லை.
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், வரன் முறைக்கு, மனை உரிமையாளர்கள் விண்ணப் பிக்க வேண்டும். தவறினால், குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும்;
பத்திரப்பதிவு, கட்டட அனுமதிக்கு தடை விதிக்கப்படும்.இந்த வரன்முறை, நிலத்துக்கு மட்டும் தான்; அதில், அனுமதியின்றி கட்டிய கட்டடங்களை வரன்முறைபடுத்தியதாக ஆகாது.நீர் வழித்தடம், கால்வாய், குளம், ஆறு உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து உருவாக்கப் பட்ட மனைகளை வரன்முறை செய்ய முடியாது. அரசு புறம்போக்கு நிலம் ஏற்கப் படாது.ஓ.எஸ்.ஆர்., எனப்படும், திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலத்தில், உருவாக்கப்பட்ட மனை யாக இருக்ககூடாது.
உத்தேச சாலைகள், ரயில் பாதைகள், புற வழிச்சாலைகளில் இருக்கக் கூடாது. பொது பாதையை ஆக்கிரமித்த மனைகளுக்கு, வரன்முறை கிடையாது. இவ்வாறு முதல் அரசாணையில் கூறப்பட்டு உள்ளது. இரண்டாவது அரசாணை மூலமாக, விவசாய நிலத்தை வீட்டு மனையாக மாற்ற,அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்பதை, அரசு கட்டாயமாக்கி உள்ளது.
கட்டணம் எவ்வளவு?
* பரிசீலனை கட்டணம்:
ஒரு மனைக்கு, 500 ரூபாய்; வரன்முறை கட்டணம், மாநகராட்சிகளில் ஒரு சதுர மீட்டருக்கு, 100 ரூபாய்; நகராட்சிகளில், 60; பேரூராட்சி, ஊராட்சிகளில், 30 ரூபாய்
* வளர்ச்சி கட்டணம்:
மாநகராட்சிகளில் ஒரு சதுர மீட்டருக்கு, 600 ரூபாய்; நகராட்சிகளில், 250 - 350; பேரூராட்சிகளில், 150; ஊராட்சிகளில், 100 ரூபாய்
* ஓ.எஸ்.ஆர்., கட்டணம்:
மொத்த பரப்பளவில், 10 சதவீத அளவுக்கு, பதிவுத்துறையின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், செலுத்த வேண்டும்
* இதில், 2012 மார்ச், 31க்கு முன், பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு, 2007 ஆக., 1ன் படியான வழிகாட்டி மதிப்பும், அதற்கு பிந்தைய மனைகளுக்கு, தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டி மதிப்பும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
வரன்முறை அதிகாரம்
* தனிபட்ட மனைகளை வரன்முறை செய்ய, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி களின் நிர்வாகங்களுக்கு, அதிகாரம் வழங்கப் படுகிறது
* மனைப்பிரிவு வரன்முறையில் முடிவு எடுக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், நகர், ஊரமைப் புத் துறை இயக்குனருக்கு, அதிகாரம் வழங்கப் படுகிறது
* தகுதிகள்முழுமையாக இருந்து,சம்பந்தப்பட்ட அதிகாரி வரன்முறை செய்ய முடியாது என நிராகரித்தால், சென்னையில் இருப்பவர்கள், அரசிடமும், இதர பகுதிகளில் இருப்பவர்கள் நகர், ஊரமைப்பு துறையிடமும், மேல் முறையீடு செய்யலாம்.
விவசாய நிலங்களை மாற்ற அரசு புதிய கட்டுப்பாடு
விவசாய நிலங்களை அடிப்படையாக கொண்ட புதிய மேம்பாட்டு திட்டங்களுக்கு, கலெக்டர், நகரமைப்பு துறை இயக்குனரிடம், முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பான புதிய அரசாணை மற்றும் அறிவிக்கையை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், தர்மேந்திர பிரதாப் யாதவ், நேற்று வெளியிட்டார்.
அதன் விபரம்:
* திட்டமில்லா பகுதிகளில், விவசாய நிலத்தை வேறு தேவைக்கு பயன்படுத்த, உள்ளூர் திட்ட அமைப்பிடம் விண்ணப்பிக்கும்போது, 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்; இது, திருப்பி தரப்பட மாட்டாது.
* உள்ளூர் திட்ட அமைப்பு, அந்த விண்ணப் பத்தை பரிசீலித்து, அனுமதி வழங்கும் முன், நகரமைப்புத்துறை இயக்குனரின் முன் அனுமதியை பெற வேண்டும்.
* நகரமைப்பு இயக்குனர் முன் அனுமதி அளிக்கும் முன், அந்த நிலம் நஞ்சையா, விவசாயம் செய்ய ஏற்றதா என்பது குறித்து, கலெக்டர், வேளாண் இணை இயக்குனர் ஆகியோரிடம் அறிக்கை பெற வேண்டும்
* அதற்கு முன், அந்த நிலத்தின் தன்மை, பயன்பாடு, ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்து, கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்
* வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படை யில், நிலத்தின் உரிமை, உண்மை தன்மை ஆகிய விபரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்
* இவை அனைத்தும் திருப்தி அளித்தால் மட்டுமே, நகரமைப்புத்துறை இயக்குனர் முன் அனுமதி அளிப்பது குறித்து, முடிவு எடுக்க வேண்டும்.
* முன் அனுமதி அளிக்கும்போது, நிலத்தின் சந்தை மதிப்பில், மூன்று சதவீத தொகையை, பயன்பாடு மாற்ற கட்டணமாக வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள், நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவின் அடிப்படையில் அமலுக்கு வரும். இதன்படி, விவசாய நிலங்களை, உரிய முன் அனுமதி இன்றி, வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.05.2017
Image may contain: text
தினமணி நாளிதழ் - மதுரை பதிப்பு - 06.05.2017 - பக்கம் 7

No comments:

Post a Comment