disalbe Right click

Tuesday, May 9, 2017

ஆசிரியர் மீதான வழக்கு ரத்து 'சஸ்பெண்ட்' காலத்திற்கு சம்பளம்

ஆசிரியர் மீதான வழக்கு ரத்து
'சஸ்பெண்ட்' காலத்திற்கு சம்பளம்
உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: ஆசிரியர் மீதான குற்ற வழக்கை நீதிமன்றம் ரத்து செய்ததால், அவர் 'சஸ்பெண்ட்'டில் இருந்த 7 ஆண்டுகளுக்குரிய சம்பளம் வழங்க, அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மணப்பாறை அப்துல் பஷீர் தாக்கல் செய்த மனு:மணப்பாறை வையம்பட்டி அருகே, தொப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தேன்.
எனது மனைவி 2006ல் தற்கொலை செய்தது தொடர்பாக, மணப்பாறை போலீசார் என் மீது வழக்குப் பதிவு செய்தனர்.என்னை 2006 நவ.,4 முதல் 'சஸ்பெண்ட்' செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
கீழமை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில், கீழமை நீதிமன்றஉத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 2013ல் ரத்து செய்தது.
இதனடிப்படையில் நான் பணியில் சேர்வதற்கான தடையில்லாச் சான்றை மணப்பாறை போலீசார் வழங்கினர். 2013 டிச.,12ல் பணியில் சேர திருச்சி மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் அனுமதி வழங்கினார்.
என் மீதான வழக்கு முடிவுக்கு வந்து விட்டதால், 'சஸ்பெண்ட்' காலத்திற்கு முழு சம்பளம் பெற தகுதி உள்ளது. அதற்காக அடிப்படை விதிகளில் வழிவகை உள்ளது.2006 நவ.,4 முதல் 2013 டிச.,12 வரையிலான 'சஸ்பெண்ட்' காலத்தை பணியில் இருந்ததாகக் கருதி, சம்பளம் வழங்கக்கோரி திருச்சி மாவட்ட துவக்கக் கல்வி அலுவலருக்கு மனு அனுப்பினேன்; நிராகரித்தார். அதை ரத்து செய்து, சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அப்துல் பஷீர் மனு செய்திருந்தார்.
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவு:
பள்ளிக் கல்வித்துறை செயலர், திருச்சி மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் மனுவை பரிசீலித்து சம்பளம் வழங்குவது பற்றி, சட்டத்திற்குட்பட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 09.05.2017

No comments:

Post a Comment