disalbe Right click

Friday, September 29, 2017

போலி ஆவணம் வாயிலாக பெயர் மாற்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்!

போலி ஆவணம் வாயிலாக பெயர் மாற்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்! 
சென்னை, மின் இணைப்பு பெயர் மாற்ற, 'போலி' ஆவணங்களை தாக்கல் செய்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது; கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்து உள்ளது
வேலுார் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவைச் சேர்ந்த, ஜெயராமன் தாக்கல் செய்த மனு:
அரக்கோணம் தாலுகா, நெடும்புலி கிராமத்தில், காசிம் சாகிப் மற்றும் அவரது மகன்களிடம் இருந்து, ஒரு பகுதி நிலம் வாங்கினேன்அதில், கிணறு, 'பம்ப் செட்' உள்ளது. நிலத்தின் மற்றொரு பகுதியை, என் தந்தை மற்றும் சகோதரர் வாங்கினார். நிலத்துக்கான மின் இணைப்பை, என் பெயருக்கு மாற்றினேன். தொடர்ந்து, மின் கட்டணம் செலுத்தினேன்.
இந்நிலையில், நிலம், பம்ப் செட் இருந்த நிலத்தை, தயாளன் என்பவருக்கு, காசிம் சாகிப் விற்றுள்ளார். அதனால், மின் இணைப்புக்கான ஆவணத்தில், என் பெயரை நீக்கி, தயாளன் பெயரை சேர்த்து விட்டனர். இந்த பெயர் மாற்றத்தை, ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தாக்கல் செய்த, அசல் விற்பனை பத்திரத்தில், ஆறு பக்கங்கள் உள்ளன. அதை, பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்ட போது, அசல் பத்திரத்தில் உள்ள நான்காவது பக்கம், பத்திரப்பதிவு ஆவணங்களில் இல்லை.
அசல் விற்பனை பத்திரத்தில் உள்ள, நான்காவது பக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான்காவது பக்கத்தை, இடைச்செருகல் செய்திருக்க வேண்டும்பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, விற்பனை பத்திரத்தின் முத்திரைத்தாள் மதிப்பு, 2,150 ரூபாய்; மனுதாரர் தாக்கல் செய்த, அசல் விற்பனை பத்திரத்தின் முத்திரைத்தாள் மதிப்பு, 2,200 ரூபாய். அதாவது, 50 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாளை, நான்காவது பக்கமாக இணைத்திருப்பதன் வாயிலாக , இந்த மதிப்பு வருகிறது.
அசல் விற்பனை பத்திரத்தில், ஒரு பக்கத்தை இணைத்து, மனுதாரர் மோசடி செய்திருப்பது தெரிகிறது. எனவே, மின் வாரியத்தின் உத்தரவில் குறுக்கிட முடியாது; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது.
அந்த தொகையை, சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள, பால குருகுலத்துக்கு அளிக்க வேண்டும். விற்பனை பத்திரத்தில் மோசடி செய்ததற்காக, மனுதாரர் மீது, கிரிமினல் புகார் கொடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.09.2017 

No comments:

Post a Comment