disalbe Right click

Saturday, September 16, 2017

768 மாணவர்களை நீக்குமாறு மருத்துவ கவுன்சில் உத்தரவு!

768 மாணவர்களை நீக்குமாறு மருத்துவ கவுன்சில் உத்தரவு!
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஏழு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் முறைகேடாக சேர்த்த 768 மாணவர்களை கல்லுாரியில் இருந்து நீக்க வேண்டும்என, இந்திய மருத்துவ கவுன்சில் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி, மூன்று சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள், நான்கு நிகர் நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.
சுயநிதி கல்லுாரிகளான வெங்கடேஸ்வரா -150, மணக்குள விநாயகர் -150, பிம்ஸ்-150 மற்றும் லட்சுமிநாராயணா, மகாத்மா காந்தி, அறுபடை வீடு, விநாயகா மிஷன் ஆகிய 4 நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லுாரிகளில் 600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு, தனியார் கல்லுாரிகளில் மொத்தமுள்ள 1050 எம்.பி.பி.எஸ்., இடங்களில், 282 இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டது. இந்த 282 இடங்கள் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ள 150 இடங்களுக்கு, 2016-17ம் கல்வியாண்டில், சென்டாக் கவுன்சிலிங் மூலம், பிளஸ் 2 மதிப்பெண் மெரிட் ரேங்க் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நிகர்நிலை மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் மீதமுள்ள 768 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, ’நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதற்காக, சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சித்ராவெங்கட்ராமன், நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கை கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார்.
நிர்வாக ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்தவர்களில், ’நீட்மதிப்பெண் அடிப்படையில் 768 பேர் கொண்ட பட்டியலை, சேர்க்கை கமிட்டி தயாரித்து, தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு வழங்கியது. ஆனால், சேர்க்கை கமிட்டி அளித்த பட்டியலில் உள்ள மாணவர்களை, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் சேர்க்காமல், ’நீட்தேர்வு எழுதாத, வெளிமாநில மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்துக் கொண்டு, எம்.பி.பி.எஸ்., சேர்க்கையை நடத்திக் கொண்டன.
மருத்துவ கவுன்சிலில் புகார்
இது தொடர்பாக பெற்றோர் - மாணவர் சங்கங்கள், அகில இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் புதுச்சேரி அரசிடம் புகார் தெரிவித்தன. மேலும், சேர்க்கை கமிட்டி தலைவர் சித்ரா வெங்கட்ராமன், கட்டண குழு தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோர், ஏழு தனியார் மருத்துவக் கல்லுாரிகளும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., இடங்களை முறைகேடாக சேர்க்கை நடத்திக் கொண்டதாக, புதுச்சேரி அரசுக்கும், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் புகார் அனுப்பினர்.
இந்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து, இந்திய மருத்துவக் கவுன்சில் புதுச்சேரி அரசிடம் கேள்வி எழுப்பியபோது, ”சட்டசபையில் விவாதித்து தனியார் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என புதுச்சேரி அரசு பதில் அளித்தது.
தேர்வு எழுத அனுமதி மறுப்பு
சுய அதிகாரம் கொண்ட நிகர்நிலை பல்கலை கழகங்கள், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு தேர்வை நடத்தி முடித்தன. ஆனால், புதுச்சேரி பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் வரும், மூன்று சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் கொல்லைப்புறமாக சேர்க்கை நடத்தியதால், ’நீட்ரேங்க் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர் பட்டியலை, பல்கலை கழகத்திற்கு வழங்கவில்லை.
இடைக்கால உத்தரவு
இதனால், கடந்த ஜூன் மாதம் நடந்த முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., தேர்வை, மூன்று சுயநிதி மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்ட 304 மாணவர்கள் எழுத அனுமதிக்கப்படவில்லை. அதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மருத்துவக் கல்லுாரிகள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இடைக்கால உத்தரவுப்படி, 304 மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டனர்.
மருத்துவ கவுன்சில் அதிரடி
இந்நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில் கூட்டம், கடந்த மாத இறுதியில் நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த சேர்க்கை கமிட்டியின் பரிந்துரையை மீறி, புதுச்சேரியில் உள்ள ஏழு சுயநிதி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரிகளில் முறைகேடாக, மாணவர் சேர்க்கை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, ’நீட்ரேங்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.
அதையடுத்து, தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., இடங்களில், சேர்க்கை இறுதி நாளான 30.09.2016ம் தேதிக்கு பிறகு, கொல்லைப்புறமாக சேர்க்கப்பட்ட 768 மாணவர்களை கல்லுாரியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில், அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் புதுச்சேரி கவர்னரின் தனி செயலர், புதுச்சேரி அரசின் நீட்நோடல் அதிகாரி, சுகாதாரத் துறை செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் அதிரடி உத்தரவால், கடந்த ஆண்டு கல்லுாரியில் சேர்ந்து, தற்போது 2ம் ஆண்டு படித்து வரும் 768 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசுக்கு 283 எம்.பி.பி.எஸ்., இடங்களைப் பெற்றோம். புதுச்சேரி மாநில ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும் தான் அரசுக்கு அதிகாரம் உள்ளது.
கடந்தாண்டு நீட்தேர்விலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்ததன்பேரில், மாநில அரசின் இடங்களை சென்டாக் கவுன்சிலிங் மூலம், வெளிப்படையாகவும், தகுதி அடிப்படையிலும் எவ்வித புகாரும் இல்லாமல், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டது.
நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கை, கல்லுாரி நிர்வாகம், மருத்துவ கவுன்சில் சம்பந்தப்பட்டது. இதனைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சித்ராவெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கையில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மருத்துவ கவுன்சில், கண்காணிப்பு குழுவிற்கு உள்ளது.
மருத்துவ கவுன்சில் கடிதத்தில், ’தனியார் மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டில் வீதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்ட மாணவர்களை நீக்க வேண்டும்என உத்தரவிட்டுள்ளது; மாணவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. இதற்கு, மாநில அரசு பொறுப்பு ஏற்காது. மாணவர்கள் நலன் கருதி, தனியார் மருத்துவ கல்லுாரி நிர்வாகத்தை அழைத்து பேச உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பெற்றோர்- மாணவர் சங்கத் தலைவர் பாலா கூறியதாவது:
தனியார் மருத்துவ கல்லுாரி நிர்வாக ஒதுக்கீட்டில், ’நீட்தேர்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி மாணவர்கள் சேர தயாராக இருந்தனர்.ஆனால், கல்லுாரிகள் ரூ.12 லட்சம், 18 லட்சம் கட்டணம் கேட்டதால், மாணவர்கள் சேரவில்லை. இதனால், ’நீட்தேர்வு எழுதாத வெளி மாநில மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்துக் கொண்டு, எம்.பி.பி.எஸ்., இடங்களை தனியார் கல்லுாரிகள் நிரப்பிக் கொண்டன.
இது தொடர்பாக சேர்க்கை கமிட்டி தலைவர் சித்ராவெங்கட்ராமன், கட்டண குழு தலைவர் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும், புதுச்சேரி அரசுக்கும், உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அனுப்பினர்.
இந்த புகார் குறித்து, புதுச்சேரி சுகாதாரத் துறைக்கு 13 நினைவூட்டல் கடிதங்களை மருத்துவ கவுன்சில் அனுப்பியது. அதற்கு, புதுச்சேரி சுகாதாரத் துறை சரியான விளக்கம் அளிக்கவில்லை. தற்போது, முறைகேடாக கல்லுாரியில் சேர்த்த மாணவர்களை நீக்குமாறு, மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய கல்லுாரி நிர்வாகம், சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி சென்டாக் அனைத்து மாணவர்- பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி கூறியதாவது:
தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். கடந்தாண்டு புதுச்சேரியை சேர்ந்த 96 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றனர்.
இவர்களை, தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்க மறுத்து, அதிக பணம் பெற்றுக் கொண்டு வெளிமாநில மாணவர்களை முறைகேடாக சேர்த்துக் கொண்டனர்.
இது குறித்து, மருத்துவக் கவுன்சில், புதுச்சேரி அரசு, சேர்க்கை கமிட்டி தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதியிடம் புகார் அளித்தோம். இந்திய மருத்துவ கவுன்சில்,இது தொடர்பாக புதுச்சேரி அரசிடம் 8 முறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
இதுவரை எவ்வித பதிலையும் அரசு தெரிவிக்கவில்லை. தற்போது, இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்து, சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்களை தவிர, மற்ற அனைவரையும் நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இப் பிரச்னையில், கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலம் கடந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப் பட்டுள்ளது. இதற்கு காரணமான சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.09.2017 

No comments:

Post a Comment