disalbe Right click

Thursday, September 21, 2017

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!
எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு, அருகிலுள்ள கடையில் மட்டும் தான், இந்த பொருட்களை வாங்க முடியும்.
ரூ.5,400 கோடி
வீடு மாறி செல்வோர், அந்த விபரத்தை, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் தெரிவித்து, முகவரி மாற்றம் செய்ய வேண்டும். அங்கு தரும் சான்றை, புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கி, பொருட்களை வாங்க முடியும்.
இந்நிலையில், எந்த ரேஷன் கடையிலும், உணவுப் பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உணவு மானியத்திற்காக, தமிழக அரசு, 5,400 கோடி ரூபாய் செலவிடுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் செய்யும் முறைகேடுகளால், ரேஷன் பொருட்கள், முழுமையாக மக்களை சென்றடையவில்லை. இதற்கு, காகித ரேஷன் கார்டு, பதிவேட்டில் விற்பனை விபரம் பதிவு உள்ளிட்டவை, முக்கிய காரணம்.
தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புதல், விற்பனை விபரம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு என, ரேஷன் தொடர்பான அனைத்து பணிகளும், கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
முறைகேடுகளுக்கு முடிவு
இதனால், கன்னியாகுமரியில் உள்ள, ஒரு ரேஷன் கடையில் இருக்கும் பொருட்களின் விபரத்தை, சென்னையில் இருந்து கண்காணிக்க முடிகிறது. இன்னும், 20 லட்சம் பேருக்கு மட்டும் தான், ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டி உள்ளது. அந்த பணி முடிந்ததும், யார் வேண்டுமானாலும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம் துவக்கப்படும்.
ஒரே மாதத்தில், இரு இடங்களில் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட முறைகேடுகள், இனி செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 21.09.2017 

No comments:

Post a Comment