disalbe Right click

Friday, November 24, 2017

கண்மாயில் அரசு கட்டிடங்கள்



காணாமல் போன கண்மாய்களும்,
கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அரசு கட்டிடங்களும்!
இயற்கையாக மழைநீரை தேக்கி வைக்கும் விளைநிலங்கள், வீடாக மாற்றப்படும்போது மழைநீர் செல்ல வழி இல்லாமல் வீட்டுக்குள் வெள்ளமாக வருவதை தடுக்க முடியாது. இயற்கைக்கு எதிரான போர் இப்படித்தான் முடியும். சென்னையில் மழை நீர் வடியாமல் நிற்க முக்கிய காரணம் நீர்நிலைகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மட்டுமல்ல; மழை நீரை தேக்க விவசாய விளை நிலங்கள் சென்னையில் இல்லை என்பதும் ஓர் காரணம்.
தமிழக அரசு, 'மழை நீரை சேமிப்போம்' என்று மக்களுக்கு அறிவுரை வழங்குவதை விட, மழை நீரை சேமிக்கும் நீர் நிலைகளை மூடாமல் இருப்பதும் அவசியமான ஒன்று. மழை வெள்ளப் பாதிப்பிற்கு பல கோடி நிதி கேட்கும் தமிழக அரசு, நீர் நிலைகளை எந்த அளவிற்கு பாதுகாத்துள்ளது என்பதை மக்களிடம் சொல்ல முடியுமா..? வெள்ள நிவாரணம் வழங்கவே, நீர்நிலைகளை அரசு கண்டுகொள்ளவில்லையோ என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.
மதுரை மாவட்டத்தில் தப்பிப் பிழைத்த பெரும்பாலான கண்மாய்கள் தூர்ந்து போய் உள்ளன. பயனற்ற குப்பை கொட்டும் இடமாக, மக்களும் தங்கள் பங்கிற்கு கண்மாயை மூடும் வேலையை 'அதிக கவனமாக' செய்து வருகின்றனர்.
நீர்நிலைகளை அரசு அழித்துள்ளது. எடுத்துக்காட்டாக மதுரையில் இருந்த பல ஊரணிகள் , கண்மாய் களின் இன்றைய நிலையைப் பார்ப்போம்...
அன்றும் இன்றும்...
1.வலைவீசித் தெப்பம் - பெரியார் பேருந்து நிலையம்.
2. உலகனேரிக் கண்மாய் - உயர் நீதி மன்றக் கிளை
3.செங்குளம்- மதுரை மாவட்ட நீதி மன்றம்
4.வண்டியூர் கண்மாய் - மாட்டுத் தாவணி பேருந்து நிலையம், பூ ,நெல் மார்கெட்
5.தல்லாகுளம் கண்மாய் - மதுரை மாநகராட்சி, சட்டக் கல்லூரி.
6.புதூர் கண்மாய் - மாவட்ட வருவாய் அலுவலர்கள் குடியிருப்பு.
7. கோச்சடை கண்மாய் - தனியார் குப்பை கொட்டும் கிடங்காக உள்ளது.
8.வில்லாபுரம் கண்மாய் - அரசு வீட்டு வசதி வாரியக் குடி இருப்புகள்.
9. அவனியாபுரம் கண்மாய் - திடக் கழிவுக் கிடங்கு.
10.பீபி குளம் கண்மாய் - சுங்கத் துறை, தபால் நிலையமாக உள்ளது.
11. மானகிரிக் கண்மாய் - வக்பு வாரியக் கல்லூரியாக உள்ளது.
இப்படி பல நூறு கண்மாய்கள் மதுரை மாவட்டத்தில் தடம் தெரியாமல் போய் விட்டன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீர் நிலைகளின் மேல அரசு தொடுத்த போர், இன்று வரை ஓயவில்லை. ஒரு பக்கம் மத்திய அரசிடம் வெள்ளம், வறட்சி நிவாரணம் கேட்கும் அரசு, மறுபக்கம் நீர்நிலைகளை அழிப்பதும், மழை நீர் சேமிக்க விளம்பரம் செய்வதும் கேலிக்குரியதாகவே உள்ளது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், வறட்சி, வெள்ள நிவாரணம் வழங்குவதில் அக்கறை காட்டி தமிழகத்தை வாழ வைப்பதாக அரசியல்வாதிகள்  பெருமையாக நினைத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். மக்களை, விவசாயிகளை வெள்ளம், வறட்சி இரண்டில் இருந்தும் காப்பதில்தான் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.
நீர் நிலைகள் மீதான இந்த அலட்சியமான போக்கு தொடர்ந்தால், வருங்காலத்தில் மொத்த தமிழகமும் வெள்ளத்தில் மூழ்கி நிவாரணம் கொடுக்க / வாங்க ஆள் இல்லாமல் போய் விடும் என்பதே அபாயகரமான உண்மை.
- எஸ்.அசோக் (விகடன் செய்திகள் - 24.11.2015)

No comments:

Post a Comment