disalbe Right click

Monday, November 13, 2017

குழந்தையின் எதிர்காலத்திற்கு சேமிப்பு

Image may contain: 1 person
‘‘க்ளையன்ட் ஒருவர், ‘பிள்ளைக்கு ஸீட் வாங்கறதுக்குள்ள படாதபாடா இருக்கு. மினிஸ்டர் லெவல் ரெகமெண்டேஷன் போனாலும் முடியல!’ என்று புலம்பினார்.
எந்த காலேஜ்ல..?’ என்றேன். ‘அட, பிரீ.கேஜி. அடிமிஷன்ங்க!’ என்றார். ‘குழந்தைக்கு என்ன வயசு?’ என்றேன். `ஒன்றரைதான் ஆகுது. அடுத்த வருஷ அட்மிஷனுக்கு இப்போவே வேலைகள் பார்த்து வெச்சாதானே?!’ என்றார்.
நான் அதிர்ச்சியாகவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் இது சகஜமே! ஆனால், இந்த அக்கறையை பெற்றோர் தங்கள் குழந்தைக்கான எதிர்கால சேமிப்பில் காட்டுவதில்லை. அதை ஊக்குவிக்கத்தான் இந்தக் கட்டுரை!’’
வாசிக்கத் தூண்டும் முன்னுரையுடன் தொடங்கினார், சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் டாக்டர் ராதாகிருஷ்ணன். குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்கள் குறித்த தெளிவான புரிதல் ஏற்படுத்தியது
அவர் வழங்கிய ஆலோசனைகள்!
‘‘பலரும் நினைப்பது போல, தனியார் வங்கிகளைவிட, அரசு வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு பாதுகாப்பானதே. அங்கு வழங்கப்படும் குழந்தைகளுக்கான முக்கிய சேமிப்புத் திட்டங்களைப் பார்ப்போம்...
`செல்வமகள்சேமிப்புத் திட்டம்!
‘‘பெண் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்தில் பொருளாதாரத் தடுமாற்றம் வராமல் தடுக்க, அவர்களின் சமூக நலன் கருதி மத்திய அரசு இந்த வருடம் அறிமுகப்படுத்திய செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை சேர்க்கலாம் (அறிமுக சலுகையாக 2.12.2003-லிருந்து 1.12.2004 வரை பிறந்த பெண் குழந்தைகளையும் இதில் சேர்க்கலாம். இதற்கான காலக்கெடு 1.12.2015). மாதம் 1,000 ரூபாயிலிருந்து வருடத்துக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை இதில் சேமிக்க முடியும். தொகையை இடையில் எடுக்கவோ, திட்டத்தை இடையில் முடிக்கவோ முடியாது. பெண்குழந்தைக்கு 18 வயதாகும்போது ஒரு முறை சேமிப்புத் தொகையை எடுத்து படிப்பு செலவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். 18 வயதாகும்போது மேற்படிப்புச் செலவுக்காக சேமித்த தொகையில் 50% எடுத்துக்கொள்ளலாம். 21-வது வயதில் மொத்தத் தொகையையோ, 18 வயதில் எடுத்த தொகை போக மீதித் தொகையையோ எடுத்து திருமணத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிகபட்ச வட்டி 9.1% என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சம்.

பிற சேமிப்புகள்!
பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் சேமிப்புக் கணக்கில், ஒரு மாதத்துக்கு 500 ரூபாய் முதல், வருடத்துக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். இதற்கான வட்டி, 8.7%.

அரசின் முத்தான மற்றுமொரு திட்டம்
தேசிய சேமிப்புப் பத்திரம் (national savings certificate - NSC). 
இது 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய் என பாண்ட் வடிவில் கிடைக்கிறது. இதை ஐந்து வருடத்துக்கு ஒரு முறை `ரோல் ஓவர்செய்துகொண்டே இருக்க வேண்டும். ஒரு வருடத்துக்கு 100 ரூபாய் செலுத்தினால், பத்து வருடங்கள் கழித்து 234.35 ரூபாய் கிடைக்கும். அதாவது சேமிக்கும் பணம் இரண்டேகால் மடங்குக்கும் கூடுதலாக கிடைக்கும். இதன் வட்டிவிகிதம், 8.8%.

ரெக்கரிங் டெபாஸிட் (recurring deposit - RD)
மாதாந்திர வைப்பு நிதித் திட்டம், குழந்தைகளுக்கான பள்ளி, கல்லூரி மற்றும் மேற்படிப்புக்கு பெரிதும் பயன்படும். இதில் வட்டிவிகிதம் கூடுதலாகவே இருக்கும். மாதம் 10 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். இதற்கான லிமிட்டேஷன் பீரியட் 5 வருடம். அஞ்சலக சேமிப்பு என்றால் 8.4 சதவிகிதமும், வங்கியாக இருந்தால் 8-லிருந்து 9 சதவிகிதம் வரையும் வட்டி கிடைக்கும்.

ரிஸ்க் எடுக்க தைரியமுள்ள பெற்றோர்கள், பங்குச்சந்தை சார்ந்த `மியூச்சுவல் ஃபண்ட்டான டைவர்சஃபைடு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் (diversified equity mutual fund) சேமிக்கலாம். இதில் மாதம் 500 ரூபாய் முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம். பங்குச் சந்தை யின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து, இந்தத் தொகை யானது மாறலாம். அதாவது, மார்க்கெட்டின் ஏற்ற, இறக்கங்களைப் பொறுத்து வளர்ச்சியில் மாற்றம் ஏற்படலாம். இதில் 10- லிருந்து 15 சதவிகிதம் வரை ரிட்டர்ன்ஸ் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.. பொறுமையுடன் காத்திருந்தால், 10 வருடங்களில் நல்ல தொகை கைகளில் கிடைக்கும்’’ என்று விளக்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன், பிள்ளைகளின் சேமிப்பு விஷயத்தில் பெற்றோர் கவனிக்க வேண்டிய, தவிர்க்க வேண்டியவற்றையும் கூறினார்.
‘‘குழந்தை பிறந்த உடனே சேமிப்பைத் தொடங்குங்கள். அவர்களின் பள்ளிப் படிப்பு டொனேஷன், மேற்படிப்பு, திருமணம் என்று எந்த நிலையிலும் உங்களுக்குப் பொருளாதாரத் தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க, அது கைகொடுக்கும். குழந்தைக்கான சேமிப்பைத் தொடங்கும்போது, குறுகிய காலத்துக்கானதாக இல்லாமல், ஐந்து வருடங்கள், 10 வருடங்கள், 15 வருடங்கள் என்று நீண்டகால யோசனையுடன் செயல்படுங்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்துக்குச் சேமிக்கிறேன். அதனால் அவர்கள் பெயரில்தான் சேமிப்பை ஆரம்பிக்க வேண்டும்என்ற எண்ணம் முற்றிலும் தவறு. உங்கள் குழந்தை உங்களைச் சார்ந்திருக்கும் வரை உங்கள் பெயரிலேயே சேமிப்பைத் தொடங்க வேண்டும்.
எப்போதும் ஆயுள் காப்பீட்டை உங்கள் பெயரிலேயே எடுங்கள். அதுதான் சிறந்தது. உங்களுக்குப் பின் காப்பீட்டுத் தொகை உங்கள் பிள்ளைகளுக்குச் சேரும். குழந்தைகளுக்கான எதிர்கால சேமிப்பு, உங்கள் வருமான வரிவிலக்குக்கும் பயன்படும்படி திட்டமிடுங்கள்.
காப்பீடு, தபால் நிலைய சேமிப்பு, வங்கி சேமிப்பு என்று, யார் யார் பெயரில் என்னென்ன எடுத்திருக்கிறீர்கள் என்ற தகவல்களை, கணவன், மனைவி இருவருக்கும் பொதுவான டைரியில் குறித்து வையுங்கள். அது வேறு யார் கண்களிலும் பட்டுவிடாதபடி கவனமாக இருங்கள்’’ என்றவர்,
‘‘குழந்தையின் எதிர்காலத்துக்கு பணத்தைச் சேமிப்பதுடன், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுத்தால்... நாட்டுக்கு ஒரு நல்ல மகனை, மகளை உருவாக்கிக் கொடுத்த பெருமையும் சேரும் உங்களுக்கு!’’ என்று அழகாகச் சொல்லி முடித்தார், டாக்டர் ராதாகிருஷ்ணன்!
வே.கிருஷ்ணவேணி 
நன்றி : அவள் விகடன் - 28.07.2015 

No comments:

Post a Comment