disalbe Right click

Thursday, November 16, 2017

நெல்லிக்கனி

No automatic alt text available.
கணியன் பூங்குன்றனார் காலம் முதல் இன்றைய கம்ப்யூட்டர் காலம் வரை, ஒரு கனி நம் வீட்டிலும் தோட்டத்திலும் காட்டிலும் உறவாடிவருகிறது என்றால், அது நெல்லி.
ஏகப்பட்ட விதைகளுடன் இருந்த வாழைப்பழத்தின் பல வகைகள், மரத்தில் காய்க்கும் ஐஸ்கிரீம் போல விதை காணாமல் போன ‘ஹைபிரிட்’ ரகமாகிவிட்டன.
கும்பகோணத்துப் புளிப்பு மாதுளை, காபூல் இனிப்பு மாதுளையாகிவிட்டது. மரத்தில் இருந்து விழுந்தால், சிதைந்துவிடும் மெல்லிய தோல் சிவப்புக் கொய்யா, கடித்தால் பல்லை வலிக்கச்செய்யும் முரட்டுத்தோலுடன் லக்னோ கொய்யாவாகிவிட்டது.
பன்னீர் திராட்சையின் விதை பறிக்கப்பட்டுவிட்டது; நிறம் மறைக்கப்பட்டு விட்டது. நாவலும் இலந்தையும் நகர்ப்புறக் குழந்தைகள்போல, பருத்துப்போய் அடையாளத்தைத் தொலைத்துவிட்டன.
ஆனால், நெல்லி அதிகம் மாறவில்லை. ஊட்டம் பெற்ற வீரிய ஒட்டு ரகங்கள் வந்தாலும், இன்னும் பெருவாரியாகத் தன் அபூர்வ பாரம்பர்யக் குணத்தை நெல்லி தொலைக்கவில்லை.
கொஞ்சம் புளிப்புச்சுவையும் கொஞ்சம் குளிர்ச்சித்தன்மையும் கொண்ட நெல்லிக்கு, புளிப்பைத் தாண்டி, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு சுவைகளும் உண்டு. நெல்லியைச் சுவைத்து பின் நீரை விழுங்க, ஓர் இனிப்புச்சுவையை நாம் ரசித்திருப்போமே, அந்தச் சுவைக்கு வெறும் மகிழ்ச்சி மட்டும் அல்ல… மருத்துவக் குணமும் உண்டு.
சித்த, ஆயுர்வேத மருந்துகளின் முன்னோடி மருந்து என்றால், அது ‘திரிபலா” என்னும் மூவர் கூட்டணி. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்றும் சேராத சித்த, ஆயுர்வேத மருந்துகள் மிகச் சிலவே. வீட்டில் முதியவர்கள் இருந்தால் திரிபலா அவசியம். மலச்சிக்கல் முதல் பல வயோதிக நோய்களுக்கு திரிபலா ஆபத்பாந்தவன். நெல்லி, கூட்டணி அமைத்து மட்டும் அல்ல, தனித்தும் சிறப்பாக இயங்கும் அற்புத மூலிகை.
உடல் மெலிய, அடிக்கடி காய்ச்சல், தலைவலி என சோம்பிப் படுக்காமல் இருக்க, இழந்த இளமையை மீண்டும் பெற எனப் பல நன்மைகள் இளங்காலையில் நெல்லிச்சாற்றை அருந்தக் கிடைக்கும். இரண்டு நெல்லிக்கனிகளை விதை நீக்கி, அரைத்து 200 மி.லி நீரில் கலந்து, ஜூஸ் தயாரித்துக் காலை பானமாகப் பருகுங்கள்.
முதுமையில் செல் அழிவை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கில்ஸை (Free radicles) கழுவிக் கரைசேர்த்து, செல் அழிவைத் தடுக்கும் ஆற்றல் நெல்லிக்கு உண்டு. அதனால்தான் நெல்லிக்கு ‘காயத்தை கல் போல் வைத்திருக்கும் காயகற்பம்’ எனும் பட்டம். இந்த ஃப்ரீ ராடிக்கிள்ஸை வெளியேற்றும் பணியை நெல்லி செவ்வனே செய்வதால், வயோதிக மாற்றங்களான தோல் சுருக்கம், கண்புரை, மூட்டுத் தேய்வு என எல்லாவற்றையும் முடிந்தவரை தள்ளிப்போட்டு ஆயுளை வளர்க்கும்.
ரத்தசோகை நீங்க, இரும்புச்சத்து நிறைவாக உள்ள பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதாது. இரும்பை உட்கிரகிக்க வைட்டமின் சி அவசியம் தேவை. மிக அதிக அளவு வைட்டமின் சி சத்தை தன்னுள்கொண்ட மூலிகை நெல்லி மட்டுமே. இதன் துவர்ப்புத்தன்மை, நோய் எதிர்ப்புச் சக்தியை உரம் போட்டு வளர்க்கும் மருத்துவக்கூறுகள் நிறைந்தது. சாதாரண சளி, இருமலுக்கான நோய் எதிர்ப்பு முதல் ஹெச்.ஐ.விக்கு எதிராகப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி வரை செயல்படும் நெல்லியின் பெருமையை, சென்னைத் தமிழில் சொன்னால், இது நெல்லி அல்ல… கில்லி.
நெல்லிக்காய் லேகியம்

நெல்லிக்காய்ச் சாறில் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, அந்தப் பாகில் அதிமதுரம், கூகை நீறு, பேரீச்சம் பழம், கிஸ்மிஸ் பழம், திப்பிலி பொடி சேர்த்து, பசுநெய்விட்டுக் கிண்டி, ஆறிய பின் தேன் சேர்க்க நெல்லிக்காய் லேகியம் தயார். இந்த லேகியத்தை சுண்டைக்காய் அளவு தினம் இருவேளை சாப்பிட, இரும்புச்சத்து கூடும். உடல் வலு குறைந்த குழந்தைகள் பலம் பெறுவர். பெரியோருக்கு வரும் நீர்ச்சுருக்கு, உடல் சூட்டுப் பிரச்னையும் இந்த மருந்தில் தீரும். நாட்டு மருந்துக்கடையில் நெல்லி வற்றல் வருடம் முழுக்கக் கிடைக்கும். பழமாகக் கிடைக்கப் பெறாதவர்கள், அந்த வற்றலை வாங்கி, கஷாயமாக்கி, பொடிசெய்தும் இதே பயனைப் பெறலாம்.

கருகரு கூந்தலுக்கு நெல்லி!

முடி வளர் கூந்தல் தைலத்துக்கும், உடல் சூட்டைத் தணிக்கும் மருத்துவத் தைலத்துக்கும் மிக முக்கியமாகச் சேர்க்கப்படும் மருந்துப்பொருள் நெல்லி. நெல்லிக்காய்ச் சாறு, சிறுகீரைச் சாறு, கற்றாழைச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, பசும்பால் ஆகியவற்றை தலா ஒரு லிட்டர், இளநீர் எட்டு லிட்டர், நல்லெண்ணெய் இரண்டு லிட்டர் கலந்து, காய்ச்சிய தைலம், உடலைக் குளிர்வித்து, கூந்தல் கருகருவென, அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர உதவும்.

No comments:

Post a Comment