disalbe Right click

Friday, November 17, 2017

சொத்து சம்பந்தமான கேள்விகள் - பதில்கள்

சுய சம்பாத்தியம் என்றால் என்ன?
சுய சம்பாத்தியம் என்றால், ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் யாருடைய தயவுமின்றி சுயமாக சம்பாதித்த அல்லது வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்துமே அவரது  சுய சம்பாத்தியம் ஆகும்.
சுயசம்பாத்தியச் சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு உண்டு?
சுயசம்பாத்தியச் சொத்தில் யாருக்கு பங்கு கிடையாது. அதனை சம்பாதித்தவர் அதனை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதனை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
பூர்வீகச் சொத்து என்றால் என்ன?
ஒருவர் தனது வாழ்நாளில் சுயமாக சம்பாதித்த அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பற்றி, எந்தவித ஏற்பாடும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அவரது சொத்துக்கள் பூர்வீகச் சொத்துக்கள் ஆகும். 
பூர்வீகச் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு?
பூர்வூகச் சொத்துக்கள் பிரிக்கப்படாதவரை, அந்தப் பரம்பரையில் வருகின்ற வாரிசுகள் அனைவருக்குமே சொந்தமாகும். 
வாரிசுகள் என்றால் யார்? இவர்களில் முன்னுரிமை உண்டா?
திருமணமான ஒரு ஆணின் வழித்தோன்றல்கள் அனைவருமே அவரது வாரிசுகள்தான். இருந்தாலும், சட்டம் இவர்களில் சிலரை முன்னிலைப்படுத்தி இருக்கிறது.
முதல்நிலை வாரிசு
திருமணமான ஒரு ஆணின் சொத்திற்கு அவரது  மனைவி, மகன், மகள் மற்றும் தாய் ஆகியவர்கள் முதல்நிலை வாரிசுகளாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். 
இரண்டாம் நிலை வாரிசு
திருமணமான ஒரு ஆணின் சொத்திற்கு அவரது தந்தை இரண்டாம் நிலை வாரிசாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு  உள்ளார். 
மூன்றாம்நிலை வாரிசு
திருமணமான ஒரு ஆணின்சொத்திற்கு அவரது  உடன்பிறந்த சகோதர, சகோதரர்கள்  மூன்றாம்நிலை வாரிசுகளாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.
திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது பேரன் மற்றும் பேத்திகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்?
திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது மகன் அல்லது அவரது மகள் ஏற்கனவே இறந்து போயிருந்தால் அந்த மகன் அல்லது மகளுக்குரிய பங்கு (அவர்களின் குழந்தைகளான) அவரது பேரன் பேத்திகளுக்கு சரிசமமாக பிரித்து வழங்கப்படும்.
திருமணம் ஆகாத ஒருவரின் சொத்துக்கு, அவரது தந்தை எப்போது உரிமை கொண்டாட முடியும்?
திருமணமாகாத ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போய்விட்டார் என்றால்,  அவரது தாயாரும் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது தந்தைக்குச் சேரும்.
திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது தந்தை எப்போது உரிமை கொண்டாட முடியும்?
திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது தாயும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்களுக்கு  அவரது தந்தை உரிமை கொண்டாட முடியும். 
திருமணம் ஆகாத ஒருவரின் சொத்துக்கு அவரது சகோதர, சகோதரிகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்?
திருமணமாகாத ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போய்விட்டார் என்றால்,  அவரது தாயாரும், தந்தையும் ஏற்கனவே இறந்து போயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் அவரது சகோதர, சகோதரிகள் உரிமை கொண்டாட முடியும்.
திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது சகோதர, சகோதரிகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்?
திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில்,   அவரது தாயும் தந்தையும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள்  அனைத்திற்கும் அவரது சகோதர, சகோதரிகள் உரிமை கொண்டாட முடியும். 
Half Brother, Half Sister என்று சட்டம் யாரைக் குறிப்பிடுகிறது?
கோபால் என்ற ஒருவருக்கு இரண்டு மனைவிகள் என்று வைத்துக் கொள்வோம். கோபாலின் முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, கோபாலின் இரண்டாவது மனைவியின் மகன் Half Brother , மகள் Half Sister  ஆவார்.  
Half Brother, Half Sister-கள் எந்தச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது?
திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில்,   அவரது தாயும் தந்தையும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள்  அனைத்திற்கும் அவரது உடன்பிறந்த  சகோதர, சகோதரிகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். Half Brother Half Sister-கள் உரிமை கொண்டாட முடியாது. சட்டம் இங்கு ஒரு தாய் வயிற்று பிள்ளைகளுக்கே உரிமையை வழங்கி இருக்கிறது.
சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத திருமணம் எது?
ஒரு ஆண் முதல் மனைவி உயிருடன் இருக்கையிலேயே, அந்த முதல் திருமணத்தை சட்டபூர்வமாக ரத்து செய்யாமலேயே, இரண்டாவதாக ஒரு திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கவில்லை.
ஒரு ஆணின் சொத்தில் முறையாக திருமணம் செய்யாத இரண்டாவது மனைவிக்கு பங்கு உண்டா?
கிடையாது. ஆனால்,  அவரது குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் பங்கு உண்டு.
இரண்டாவது மனைவிக்கு கணவனின் சொத்தில் உரிமை எப்போது கிடைக்கும்?
ஒரு ஆண் தன்னுடைய முதல் மனைவி இறந்த பிறகோ அல்லது தன்னுடைய முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்த பிறகோ, இன்னொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் போது, அந்தப் பெண்ணிற்கு அவரது சட்டப்படியான மனைவி என்ற அந்தஸ்தும், கணவனின் சொத்தில் அல்லது பூர்வீகச் சொத்தில் உரிமையும் கிடைக்கும்.
இறந்து போன முதல் மனைவிக்கு ஒரு குழந்தையும், உயிருடன் உள்ள (சட்டபூர்வ) இரண்டாவது  மனைவிக்கு  இரண்டு குழந்தையும் இருந்தால், ஒருவரின் சொத்தை எப்படி பிரிக்க வேண்டும்?
இறந்து போன ஆணுக்கு சொந்தமாக ஒரே அளவுள்ள 4 வீடுகளும், வங்கியில் 40 லட்ச ரூபாய் ரொக்கமும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதனை அனைவரும் சமமாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மூத்த தாரத்து மகள்(1), இரண்டாவது மனைவி(2), இரண்டாவது மனைவியின் மகன்(3),  இரண்டாவது மனைவியின் மகள்(4)  ஆகிய நால்வரும் ஆளுக்கொரு வீடும், 10 லட்ச ரூபாயுமாக பங்கு பிரித்துக் கொள்ள வேண்டும். 
ஒரு மனையை அல்லது ஒரு நிலத்தினை அண்ணன் தம்பிகள் எப்படி சண்டையில்லாமல் பிரித்துக் கொள்வது? 
ஒரு வீடு அல்லது ஒரு நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதனை சண்டை போட்டுக் கொள்ளாமல்  சகோதரர்கள் (இருவர் மட்டும் இருந்தால்)  பிரித்துக் கொள்ள விரும்பினால், அண்ணனுக்கு மேற்கு திசையில் உள்ள இடமும், தம்பிக்கு கிழக்கு திசையில் உள்ள இடமும் என்று பிரித்துக் கொள்ளலாம். நான்கு பேர் இருந்தால், மூத்தவனுக்கு தென்மேற்கு, அடுத்தவன் வடமேற்கு, மூன்றாவது உள்ளவனுக்கு தென்கிழக்கு, கடைசியில் உள்ளவனுக்கு வடகிழக்கு என்று பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும், பெண்வாரிசுகள் இருந்தால் சகோதரர்கள் மேற்கு மற்றும் தெற்கு பக்க பங்குகளையும், சகோதரிகள் கிழக்கு மற்றும் வடக்கு பக்க பங்குகளையும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு மனையையோ அல்லது ஒரு வீட்டையோ நான்கு பாகமாக மட்டுமே பிரிக்க வேண்டும் என்றும், அந்தச் சொத்துக்கு  அதிக வாரிசுகள் இருந்தால் நான்கு நபர்கள் தவிர மற்றவர்கள் தங்கள் பங்கிற்காக பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பங்கு பிரிக்க முடியாத நிலையில் ஒரு சொத்து இருந்தால், அதனை உரியவர்கள் எப்படி பங்கிட்டுக் கொள்வது?
வேறு வழியில்லை. அதனை விற்று, அந்த ரொக்கத்தை சமமாக பிரித்துக் கொள்ள வேண்டியதுதான்.
மேற்கண்டவை இந்து வாரிசுரிமைச் சட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். 
****************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

No comments:

Post a Comment