disalbe Right click

Sunday, November 26, 2017

கட்டுமானத்தை, உடனடியாக பேரூராட்சி இடிக்க வேண்டும்-ஐகோர்ட்.

குடியிருப்பு கட்ட பெற்ற அனுமதியில்
தொழுகை இடம் கட்ட முடியாது: ஐகோர்ட்
சென்னை, 'வீடு கட்ட அனுமதி பெற்று விட்டு, தொழுகை நடத்துவதற்கான இடம் கட்ட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டையைச் சேர்ந்த, அப்துல் அசீஸ், சாதிக் பாஷா ஆகியோர் தாக்கல் செய்த மனு:
  • முத்துப்பேட்டையில், ஜமாத் நலன்களுக்காக, கட்டடம் கட்டுவதற்கு, திட்ட அனுமதி பெறப்பட்டது.
  • அடித்தள கட்டுமானப் பணிகள் முடிந்து, தரைத்தளம் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது, பணிகளை நிறுத்தும்படி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, 'நோட்டீஸ்' அனுப்பினார்.
  • தொழுகை நடத்தும் இடத்துக்காக, கட்டுமானம் நடப்பதால், திட்ட ஒப்புதலை ரத்து செய்வதாக, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • கட்டுமானத்தில் விதிமீறல் இல்லை. திட்ட அனுமதியின்படி, கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.
  • பேரூராட்சி தரப்பில், விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, பேரூராட்சி நிர்வாக அதிகாரியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
  • முத்துப்பேட்டை பேரூராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,
  • 'தரைத் தளம் மற்றும் முதல் தளம் கட்டுவதற்கு, அனுமதி பெறப்பட்டது.
  • இடத்தை நேரில் ஆய்வு செய்தபோது, தொழுகை நடத்துவதற்கான இடமாக, கட்டுமானம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
  • 'பணிகளை நிறுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியும், கட்டுமானப் பணி தொடர்ந்து நடந்ததால், திட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது' என, கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.
பேரூராட்சி தரப்பில், சிறப்பு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அரசு வழக்கறிஞர், அகில் அக்பர் அலி ஆஜராகினர்.
மனுவை, தள்ளுபடி செய்து, நீதிபதி, வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
  • குடியிருப்பதற்கான வீடு கட்டுவதற்கு, திட்ட அனுமதி பெறப்பட்டது; ஜமாத் மற்றும் தொழுகை நடத்துவதற்கான இடம் கட்டுவதற்கு, அனுமதி பெறப்படவில்லை என, பேரூராட்சியின் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
  • வீடு கட்டுவதற்காக திட்ட அனுமதி பெற்று, தொழுகை நடத்துவதற்கான இடம் கட்ட முடியாது.
  • எனவே, பணி நிறுத்த நோட்டீஸ் அனுப்பியதும், திட்ட அனுமதியை ரத்து செய்ததும், சரி தான்.
  • கட்டடத்தை தரைமட்டமாக்க வேண்டும் என்கிற, அரசு வழக்கறிஞரின் வாதத்தில், பொருள் உள்ளது. அதனால், கட்டுமானத்தை, உடனடியாக பேரூராட்சி இடிக்க வேண்டும்.
  • இடிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, பணியில் இருந்து நீக்கப்படுவார்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 26.11.2017

No comments:

Post a Comment