disalbe Right click

Wednesday, December 20, 2017

இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1988

நாட்டில் உள்ள பல அரசு துறைகளில் லஞ்ச-ஊழல் பெருகியதைக் கண்டு, அதனைக் கட்டுப்படுத்த வேண்டி நாட்டிலுள்ள  சமூக சிந்தனையாளர்கள் ஒன்றுகூடி உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேசிய அளவில் லஞ்ச-ஊழலை கட்டுப்படுத்துவதற்கு மத்தியிலும், மாநிலங்களிலும் லோக்ஆயுக்தா அமைப்பை  அமைக்க வேண்டும். அந்த அமைப்பு தன்னாட்சியுடனும் சுதந்திரந்துடன் செயல்படும் வகையில் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். அந்த  அமைப்பிற்கு தலைவராக இருப்பவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும் என்பது  போன்ற விதிமுறைகளுடன் கூடிய திட்ட வரைவு தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட்ட, பல சிபாரிசுகளை, குறிப்பிட்டு  1983ம் வருடத்தில் தீர்ப்பு வழங்கி  உறுதி செய்தது. உச்சநீதிமன்ற நீதிமன்ற வழிகாட்டுதல் படி தேசிய அளவில் பொருந்தும் வகையில் மத்திய அரசால், இந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 இயற்றப்பட்டது.
வரையறை என்ன?
இந்தச் சட்டத்தின்படி ஒரு பொது ஊழியர், தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப் பூர்வமான வேலைக்கு சட்டப்படி பெற வேண்டிய சம்பளத்தைத் தவிர கைக்கூலி பெறுவது, பொது ஊழியம் செய்பவர் மறுபயன் இல்லாமல் விலை மதிப்புள்ள பொருட்களை தன்னுடைய அலுவல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஒருவரிடம் வாங்குவது குற்றமாகும். ஆனால், இதன்படி ஒரு பொது ஊழியர் லஞ்சம் வாங்குவது குற்றம் என கருதப்பட கீழ்கண்ட அம்சங்களும் இருக்கவேண்டும்.
➽ சம்பந்தப்பட்டவர் பொது ஊழியராக இருத்தல் வேண்டும்.
 அவர் செய்யும் வேலை அதிகாரப் பூர்வமாக இருக்க வேண்டும்.
 ஒரு பொது ஊழியர் தான் செய்ய வேண்டிய பணியை  செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்கோ சட்டத்திற்குப் புறம்பாக பணம் பிறரிடம் கேட்டல்  அல்லது பெறுதல்.
 பொது ஊழியர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சலுகை அளித்து பண மதிப்பு கொண்ட அனுகூலம் பெறுவது, . ஒரு குடிமகனிடம் இருந்து ஒரு பொது ஊழியர் அதிகாரப் பூர்வமான பணியைச் செய்வதற்காக மறுபயனின்றி விலை மதிப்புள்ள பொருளைப் பெறுவதும் லஞ்சம் பெறுவது ஆகும். 
➽ அந்த பொது ஊழியர் நேரடியாகவோ அல்லது வேறு ஒரு புரோக்கர் மூலமாகவோ லஞ்சம் பெற்றால் அந்தப் பொது ஊழியரும், அவருக்கு லஞ்சம் வழங்குபவர்களும் குற்றவாளிகள் ஆவார்கள். 
➽ ஒரு பொது ஊழியர் தனது வருமானத்திற்கு பொருந்தாத விதத்தில் அதிகமாக சொத்துக்களைக் சேர்த்தலும் சட்டத்தின் படி குற்றம் என இந்த சட்டத்தில் வரையறை செய்யப்பட்டிருக்கிறது.
என்ன தண்டனை கிடைக்கும்?
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக தனி நபரோ அல்லது அரசு தரப்பில் லோக்ஆயுக்தாவில் ஒரு புகாரைஅளித்தால், அதை விசாரணை நடத்தி புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் வழக்கு பதிவு செய்யப்படும். சம்மந்தப்பட்ட பொது ஊழியர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு தனியாக  குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக்குழு முழுமையாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தலைமையிடம்  தாக்கல் செய்யும். அந்தக் குற்றப்பத்திரிக்கையின் மீது வாதி, பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வாதம் செய்வார்கள். வாதங்கள் அடிப்படையிலும், சாட்சிகள் அடிப்படையிலும் இறுதியாக நீதிபதி வழங்கும் தீர்ப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின்படி தவறு செய்த அந்த பொது ஊழியருக்கு குறைந்த பட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.   நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பொது ஊழியர்  மேல்முறையீடு செய்யவும் அனுமதி உண்டு.
ஊழல் ஆணையம் (Central Vigilance Commission)  
நமது நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு மத்திய அரசு மத்திய விழிப்புணர்வு ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் உள்ள ஊழல் குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு குழுவும் மாநில அரசுத் துறைகளில் உள்ள ஊழல் குறித்த வழக்குகளை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம்
சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்வர் 6 வரை ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஊழல் குறித்து புகார் செய்வது எப்படி?
ஊழல் குறித்து புகார் செய்யும் போது புகார்தாரர் தனது பெயர் மற்றும் முகவரியை தெளிவாகக் கூற வேண்டும். மத்திய அரசுத் துறை சம்பந்தமான புகார்  என்றால் மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கும், மாநில அரசுத் துறை சம்பந்தமான புகார் என்றால் ஊழல் தடுப்பு இயக்குநருக்கும் புகார் செய்யலாம்http://cvc.nic.in  என்ற இணையதளம் மூலமாகவும் புகார் செய்யலாம். உங்கள் புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும், புகார் அளித்த பின்னர்  உங்களுக்கு கொடுக்கும் பதிவு எண் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இணைய தளத்தில் இது குறித்த முழுமையான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தவறாக புகார் கொடுத்தால் தண்டனை உண்டு
ஒரு பொது ஊழியர் குறித்துப் பொய்யான புகார் தருவது இந்திய தண்டனைச் சட்டம்- பிரிவு 182 -ன் படி தண்டனைக்குரியது ஆகும். பெயரில்லாத சரியான முகவரியில்லாத புகார்கள் தள்ளுபடி செய்யப்படும். ஊழலில் சிக்கிய அதிகாரிகள் பற்றிய தகவல்களை மத்திய விழிப்புணர்வு ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தனித்தொகுப்பாக வெளியிட்டு வருகிறது.
************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 20.12.2017

No comments:

Post a Comment