disalbe Right click

Friday, December 15, 2017

பத்திர எழுத்தர் ஆவதற்கு.....?

சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்துக்களையும், மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில் சங்கங்கள், அறக்கட்டளைகளையும் நாம் பதிவு செய்கிறோம். அதற்கு வேண்டிய முத்திரைத் தாள்கள், நீதிமன்றக் கட்டண வில்லைகள் (கோர்ட் பீ ஸ்டாம்ப்) ஆகியவற்றை வாங்குவதற்கு அந்த அலுவலகங்களின் வளாகத்தினுள்ளோ அல்லது அதன் அருகிலோ இருக்கின்ற பத்திர எழுத்தர்களிடம் நாம் செல்கிறோம். அவர்கள் அதற்கு ஒரு குறிப்பிட்ட கமிஷனைப் பெற்றுக்கொண்டு, உங்களைப் பற்றிய விபரங்களை ஒரு லெட்ஜரில் பதிந்து கொண்டு , உங்களது கையெழுத்தை அதில் பெற்றுக் கொண்டு, தங்களது பதிவு எண்ணை எழுதி, உங்களுக்கு அவற்றை விற்பனை செய்வார்கள். இந்தத் தொழில் செய்வதற்கு தகுதி என்ன? இதற்கான உரிமம் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி கீழே காணலாம்.
ஆரம்ப காலத்தில்
நில ஆவணங்கள் உள்ளிட்ட, பத்திரப் பதிவு தொடர்புடைய பணிகளை செய்து வருகின்றவர்கள் தமிழக ஆவண எழுத்தர்கள் சட்டத்தின்படி, முறைப்படி தமிழக அரசிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில், கன்னியாகுமரி, நீலகிரி போன்ற கேரள எல்லை மாவட்டங்களில் உள்ளவர்கள், மலையாள மொழியை மட்டும் படித்துவிட்டு, மலையாள மொழியில் தமிழக சொத்து ஆவணங்களை எழுதி வந்தனர். தமிழ் மொழியில் ஆவணங்கள் எழுதும் பழக்கம் நடைமுறைக்கு வந்த பின்னர், மலையாள மொழியை முதன்மை பாடமாக படித்தாலும், தமிழ் மொழி தேர்வு, கூடுதலாக எழுதி அந்த தொழிலை செய்து வந்தனர்.
10ம் வகுப்பு தேர்ச்சி
ஆனால், தற்போது "உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் தமிழ் மொழியை முதல் பாடமாக அல்லது இரண்டாவது மொழி பாடமாக படித்து, 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உத்தரவிட்டுள்ளது. 2013 - பிப்., 15க்கு முன், உரிமம் பெற்றவர்கள் அல்லது உரிமம் புதுப்பித்தவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே அமலில் இருந்த வணிக வரித் துறை மற்றும் பதிவுத்துறை சட்டத்தில், திருத்தத்தை ஏற்படுத்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான ஆணை ஒன்றும் அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வும் எழுத வேண்டும்
தமிழக அரசின் பதிவுத்துறை பத்திர எழுத்தர், நகல் எழுத்தர் உரிமங்கள் பெறுவதற்கு தேர்வுகளையும் நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு சிறிய பயிற்சியும் வழங்கப்படும் அதில் தேறிய நபர்களுக்கு உரிமம் தருவார்கள். அதனை வைத்துக்கொண்டு சொந்தமாக தொழில் செய்யலாம்.
நல்ல வருவாய் தரக்கூடிய தொழில் இதுவாகும். பத்திரங்கள் மற்றும் கோர்ட் ஃபீ ஸ்டாம்புகள் விற்பது, பத்திரங்களைப் பதிவு செய்து தருவது, வில்லங்கச் சான்று மற்றும் பத்திர நகல்கள் பெற்றுத்தருவது, பத்திரங்கள் இதர ஆவணங்களை தட்டச்சு செய்து தருவது ஆகிய வேலைகளை சிறிய அலுவலகம் ஒன்றின் மூலமாகவே செய்து தர முடியும்.
வழக்கறிஞர்கள்
வழக்கறிஞர்களும் பத்திரங்களை எழுதலாம். வழக்கறிஞர்கள் எழுதுகின்ற பத்திரங்களில் அவர்களைப் பற்றிய ரப்பர்ஸ்டாம்ப் முத்திரை கண்டிப்பாக இடவேண்டும்.
இணையதளம் மூலமாக பத்திரப்பதிவு
இணையதளம் மூலமாக ஆவணங்கள் பதிவு செய்யும் திட்டம் விரைவில் தமிழ்நாட்டில் அமலாக்கப்பட உள்ளது. அதற்காக கடந்த 18.11.2017 அன்று பத்திர பதிவுத் துறை சார்பில், சென்னை பல்லாவரத்தில் கூடுதல் பதிவுத் துறைத் தலைவர் அங்கையற்கண்ணி அவர்கள் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட சார் பதிவாளர்கள், பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், கட்டிட நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 15.12.201

1 comment:

  1. தேர்வு எப்படி பதிவு செய்ய வேண்டும் சார்

    ReplyDelete