disalbe Right click

Saturday, January 6, 2018

ஒரு பிரைவேட் கம்ப்ளைன்ட்டை

ஒரு பிரைவேட் கம்ப்ளைன்ட்டை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்ளும் போது, குற்றவியல் நடுவர் அந்த புகாரிலுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்தாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சிகளால் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை

CRL. RC. NO - 224/2016, DT - 31.3.2016, சென்னை உயர்நீதிமன்றம்

புகார்தாரரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் மற்றும் இதர சாட்சிகள் அளித்த உறுதிமொழி வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவற்றில் ஏதேனும் குற்றச் செயலுக்கான வழக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதைதான் குற்றவியல் நடுவர் பரிசீலிக்க வேண்டுமே தவிர, அந்த புகாரிலுள்ள குறைபாடுகள் மற்றும் ஆதாரங்களின் தன்மை ஆகியவை குறித்து, அந்த புகாரை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலையில், குற்றவியல் நடுவர் பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை
இது குறித்து உச்சநீதிமன்றம் "அதாலத் பிரசாத் Vs ரூஃப்லால் ஜிந்தால் (2004-4-CTC-608)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
தனிநபர் புகார் தாக்கல் செய்வதற்கு கு. வி. மு. பிரிவு 200 வகை செய்கிறது. அது தனிப்பட்ட ஒரு வழக்கு நடவடிக்கையாகும். தனிநபர் புகாரை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கு. வி. மு. பிரிவு 190(1)(a) ல் கூறப்பட்டுள்ளது. தனிநபர் புகாரின் மீது பிடிக்கட்டளை வழக்கு அல்லது அழைப்பாணை வழக்கு போன்றவற்றில் எவ்வாறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கு. வி. மு. பிரிவுகள் 200,202 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.
மேற்கொண்டு அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால், இதனை வேறு விதமாக கூற வேண்டுமென்றால் அந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச் செயலுக்கு வழக்கு முகாந்திரம் இருந்தால் குற்றவியல் நடுவர் அந்த புகாரை கு. வி. மு. பிரிவு 190(1)(a) ன் கீழ் நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொண்டு, எதிரிக்கு கு. வி. மு. பிரிவு 204 ன் கீழ் அழைப்பாணை அனுப்ப வேண்டும். அந்த புகாரில் வழக்கு முகாந்திரம் எதுவும் இல்லையென்றால் அந்த புகாரை தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை சுருக்கமாக குறிப்பிட்டு கு. வி. மு. பிரிவு 203 ன் கீழ் தள்ளுபடி செய்யலாம்.
கு. வி. மு. பிரிவுகள் 200,202 ஆகியவற்றின் கீழ் ஒரு பரிசீலனையை மேற்கொள்வற்கு குற்றவியல் நடுவர் எவற்றையெல்லாம் தன்னுடைய கருத்தில் கொள்ள வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் மேற்கண்ட "அதாலத் பிரசாத் Vs ரூஃப்லால் ஜிந்தால் மற்றும் பலர்" என்ற வழக்கில் கூறியுள்ளது.
கு. வி. மு. பிரிவு 201 நீதிமுறைக் கட்டளை பிறப்பிப்பதை தள்ளி வைப்பது குறித்து கூறுகிறது. ஒரு புகாரை பெற்றுக் கொண்ட குற்றவியல் நடுவர் அதன் மீது ஒரு கட்டளை பிறப்பிப்பதை ஒத்தி வைத்து, அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சங்கதிகள் குறித்து தாமே அல்லது காவல்துறை அதிகாரிக்கு புலன் விசாரணை செய்வதற்கு அல்லது வேறு எந்தவொரு நபராலும் புலன் விசாரணை செய்வது அவசியமென்று கருதுகிற நிலையில், அந்த புகாரில் மேற்கொண்டு கட்டளைகளை பிறப்பிப்பதற்கு சாட்சிகளின் சாட்சியத்தை மெய்யுறுதியின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். காவல்துறையினர் புலன் விசாரணை செய்து அதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை பெற்று அந்த அறிக்கையில் மேற்கொண்டு அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எந்தக் காரணங்களுமில்லை என்று தெரிய வருகிற நிலையில், அந்த புகாரை தள்ளுபடி செய்யலாம். அவ்வாறு தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை சுருக்கமாக கு. வி. மு. பிரிவு 203 ல் கூறப்பட்டுள்ளவாறு பதிவு செய்துவிட்டு தள்ளுபடி செய்ய வேண்டும்.
புகாரை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொண்டு, புகார்தாரர் மற்றும் அவருடைய சாட்சிகளை விசாரித்ததற்கு பின்னர், அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான காரணங்கள் உள்ளது என்று மனநிறைவு அடைந்தால் கு. வி. மு. பிரிவு 204 ன் கீழ் நீதிமுறைக் கட்டளையை பிறப்பிக்கலாம். கு. வி. மு. பிரிவு 204 ன் கீழ் நீதிமுறைக் கட்டளையை பிறப்பிப்பதற்கு தேவையானது அல்லது நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனை என்னவென்றால், குற்றவியல் நடுவர் புகார்தாரர் மற்றும் சாட்சிகளை தாமே விசாரித்து மனநிறைவு அடைந்திருக்க வேண்டும் அல்லது கு. வி. மு. பிரிவு 202 ல் கூறப்பட்டுள்ளவாறு, ஒரு பரிசீலனையை மேற்கொண்டு அதன் பின்னர், அந்த புகாரில் மேல் நடவடிக்கை எடுக்கலாம். இந்த இரண்டு நிலைகளிலும் எதிரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த இரண்டு நிலைகளும் ஆரம்பக்கட்ட நிலைகளாகும் அதற்கு அடுத்த நிலையில் தான் எதிரியை கேட்டறிய வேண்டும்.
எனவே ஒரு பிரைவேட் கம்ப்ளைன்ட்டை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்ளும் போது, குற்றவியல் நடுவர் அந்த புகாரிலுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்தாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சிகளால் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 224/2016, DT - 31.3.2016
P. Mani Vs V. Ganesh Kumar
(2017-2-MLJ-CRL-471)
வழக்கு குறித்த தீர்ப்பு நகலுக்கு   ghttps://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wSXA2RjY3WDFfekk/view?usp=sharing

நன்றி : முகநூல் நண்பர் வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan அவர்கள்
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 06.01..2018 




No comments:

Post a Comment