disalbe Right click

Monday, February 12, 2018

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு

தமிழகத்தில் இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே பத்திரப் பதிவு
தமிழகத்தில் 13.02.2018 முதல் முழுமையாக இணைய வழியில் மட்டுமே பத்திரப் பதிவு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக மாநிலங்கள் முழுவதிலுமுள்ள மாவட்டப் பதிவாளர்கள், சார்- பதிவாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள், பொதுமக்கள், வழக்குரைஞர்கள், கட்டுமானம் மட்டும் ரியல் எஸ்டேட் துறையினர் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் பத்திரப் பதிவில் நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதற்காகவும், பத்திரப் பதிவை விரைவாக செய்து முடிக்கவும், மக்களின் அலைச்சலைத் தவிர்க்கவும் பதிவுத்துறையில் "ஸ்டார் 2.0' என்ற மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதற்கென்று tnreginet.gov.in என்ற புதிய  இணையதளம் சிறப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பதிவுக்கு 42 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பதிவுக்குப் பின் அந்த பத்திரம் பட்டா மாறுதலுக்காக வருவாய் துறைக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த சாப்ட்வேர் 176 கோடி ரூபாய்க்கு தமிழக அரசால் வாங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தாங்களாகவே இந்த இணையதளத்தினுள் சென்று பத்திரங்களை பதியலாம். முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாகவே பொதுமக்கள் செலுத்தலாம். இனி 13.02.2018 முதல் நூறு சதவீதம் ஆன்லைன் மூலமாக மட்டுமே பத்திரங்கள் பதிவு செய்யப்படும்.
என்ன செய்ய வேண்டும்?
இணையதளம் மூலமாக பத்திரம் பதிவு செய்ய இருப்பவர்கள்,  இந்த இனையதளத்தினுள் சென்று முதலில் தங்களது சுய விபரத்தை  பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பத்திரங்களை ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த ஆவணங்கள் கிடைத்ததும், அதனை அங்குள்ள இளநிலை உதவியாளர் ஆய்வு செய்து சார்-பதிவாளருக்கு அனுப்புவார். சார்பதிவாளர் அவர்கள் பரிசீலித்து ஆவணத்தைப் பதிவு செய்யலாம் என உத்தரவிடுவார்.
அந்த உத்தரவு கிடைத்தவுடன் எந்த நாளில், எந்த நேரத்தில் பத்திரத்தை பதிவு செய்யலாம் என்பதை சொத்து வாங்குபவர் முடிவு செய்து அதனை ஆன்லைன் மூலமாகவே தெரிவித்து, குறிப்பிட்ட நேரத்தில் பதிவு அலுவலகத்துக்கு சொத்து வாங்குபவர் நேரில் வந்தால் 10 நிமிடங்களில் ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த அன்றே பதிவான பத்திரங்களையும் பெற்றுச் செல்லலாம். பத்திரப் பதிவின் செயல்களின் நிலை குறித்தும் பதிவு செய்பவர்களுக்கு குறிஞ்செய்தியாகவும் அவரது செல்போனுக்கு அனுப்பப்படும். 
ஆவணங்கள் உரிமம் மாற்றம் செய்யப்படும்போது, சொத்தின் பழைய உரிமையாளருக்கு செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பப்படும். சொத்து மதிப்பீடு, கட்டட மதிப்பீடு குறித்து வேறுபாடுகள் இருந்தால், அதுகுறித்தும் அவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இதுவரை மாவட்ட அளவில் சேமிக்கப்பட்டு வந்த பத்திரப் பதிவு ஆவண தகவல்கள், இனி சென்னையில் உள்ள மத்திய தொகுப்பிலும் சேமிக்கப்பட இருக்கிறது.. இதனால் ஆவணங்களின் பாதுகாப்பு மேலும் அதிகரித்துள்ளது. 
இந்த ஆன்லைன் பத்திரப்பதிவு குறித்த சந்தேகங்களை 1800 102 5174 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளலாம்.
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 13.02.2018 

No comments:

Post a Comment