disalbe Right click

Wednesday, September 5, 2018

கோமாவிலுள்ள கணவரின் வங்கிக்கணக்கு

கோமாவிலுள்ள கணவரின் வங்கிக்கணக்கு மனைவி பெயருக்கு மாற்ற....?
வழக்கின் சுருக்கம் :
எனது கணவர் மொகமத் ரபி அவர்கள் எந்தவித செயலும் செய்யமுடியாத, சுயநினைவில்லாத கோமா நிலையில் இருக்கிறார்.  அவருக்கு நினைவு திரும்புமா? திரும்பாதா? அவர் குணமடைய வாய்ப்புள்ளதா? வாய்ப்பில்லையா? என்பதை மருத்துவர்களால் கூட உறுதி செய்ய முடியவில்லை. இந்நிலையில் கணவரது பெயரிலுள்ள வங்கிக் கணக்கை செயல்பட வைக்கவும், அவரது பெயரிலுள்ள சொத்துக்களை விற்கவும் தன்னை காப்பாளராக நியமிக்க வேண்டும் என்று மனைவி திருமதி சாய்ரா பானு ரிட்மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்கிறார். 
காப்பாளர் நியமனம் சம்பந்தப்பட்ட வழக்கை தகுந்த அதிகார வரம்புடைய உரிமையியல் நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். இருந்தபோதிலும், வழக்கிலுள்ள அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் மனுதாரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மனுதாரர் வசிக்கும் வீட்டிற்கு அந்தப்பகுதியின் தாசில்தார் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறது.
தாசில்தாரும் ஒரு மருத்துவருடன் சென்று ஆய்வு செய்து மனுதாரர் கூறியுள்ளது உண்மைதான்!  அவரது கணவர் எந்த முடிவையும் சுயமாக எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்! அவர் மற்றவர்களை சார்ந்தே இருக்க வேண்டியதுள்ளது! என்பதை நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் தெரிவிக்கிறார். 
அறிக்கையை படித்த நீதியரசர் திரு எம்.எம்.சுந்தரேஷ் அவர்கள், மொகபத் ரபியின் வங்கிக்கணக்கை இயக்கவும், சொத்துக்களை விற்கவும் அவரது மனைவியை காப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இந்த உத்தரவு சூழ்நிலைகளின் அடிப்படையில்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், மொகமத் ரபியின் வாரிசுகள் பிற்காலத்தில் ஏதேனும் சொத்து உரிமை குறித்து கேள்விகள் எழுப்புவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என்றும் அந்த உத்தரவில் தெளிவாக தெரிவித்திருந்தார்.
சாய்ரா பானு மொகமத் ரபி Vs செயலாளர், தமிழ்நாடு குடும்ப நலத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர், நாகப்பட்டினம்
W. P. No - 28435/2015 Dt - 6.1.2016  2016-1-TLNJ-CIVIL-113     
முகநூல் நண்பரும் வழக்கறினஞருமான திரு  Dhanesh Balamurugan அவர்களுக்கு நன்றி!

***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 06.09.2018 

No comments:

Post a Comment