disalbe Right click

Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Thursday, November 3, 2016

திருப்பதிக்கு திடீர் பயணம்


திடீர்ன்னு திருப்பதிக்கு கெளம்புறீங்களா - என்ன செய்ய வேண்டும்?

திருவேங்கடமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு பயணத்தை எளிதாக்க இதோ சில குறிப்புக்கள்:

• திருமலையை மேல் திருப்பதி என்றும் திருப்பதியை கீழ் திருப்பதி என்றும் அழைப்பார்கள். திருமலை திருப்பதிக்கு ஒருநாளைக்கு 50,000 முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்குமேல் வருகை புரிகிறார்கள்.

• சுவாமியை தரிசனம் செய்வதற்கு, 'சர்வதரிசனம்', 'திவ்ய தரிசனம்' (கீழ்திருப்பதியிலிருந்து நடந்தே மலையேறிச் சென்று தரிசிப்பது), ஸ்பெஷல் தரிசனம் என மூன்று வழிமுறைகள் இருக்கின்றன.

• சர்வ தரிசனத்தில், தரிசனம் செய்வதற்கு சாதாரண நாட்களில் 4 மணி முதல் 8 மணிநேரம் ஆகும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில், 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஆகும். திவ்ய தரிசனத்தில் சர்வ தரிசனத்தை விட 2 மணி நேரம் குறைவான நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம்.

• 'சிறப்பு தரிசனம்' என்பது எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல்,  ஆன்லைன் மூலமாக புக் செய்துவிட்டு 300 ரூபாய் டிக்கெட் எடுத்துச் சென்று தரிசனம் செய்யும் முறையாகும். ஒரு நபருக்கு மட்டும் அனுமதி. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் முந்தைய தினமே முன்பதிவு செய்துவிட்டு புறப்படுவது நல்லது. வார நாட்கள் என்றால்  மலைக்குச்சென்று அங்குள்ள விற்பனைப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.

• உங்கள் திருமலை யாத்திரையை விடுமுறை அல்லாத நாட்களில் தொடர்வது நல்லது. திருமலைக்கு செல்லும் முன்பே ரயில் மற்றும் பேருந்து டிக்கட்டுகள், தங்கும் வசதிகள் மற்றும் சேவை டிக்கட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

• தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.ஓ அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.ஓ. அலுவலத்துக்கு பக்கத்தில் உள்ள பயணிகள் தங்குமிடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.

• தகவல்களை  அறிந்துகொள்ள, ரயில்நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்டா ரயில்நிலையத்தில்  உள்ள தகவல் மையங்களை அணுகலாம்.

• திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ,  மலைப்பாதையில்  பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

• திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி ரயில்நிலையத்திலிருந்து அலிபிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

• நடந்து செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக  திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

• திருமலை யாத்திரையை பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் இல்லாமல், வார நாட்களில் பயணம் இருப்பது போல் திட்டமிட்டுக்கொண்டால், எளிதாக சுவாமி தரிசனம் செய்து, பயணத்தை இனிதானதாக ஆக்கலாம்.

• திருப்பதிக்குச் செல்ல ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள், திருமலையில் தங்கும் அறை வசதிகள் மற்றும் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகளுக்கு, ஆன்லைனில் 90 நாட்களுக்கு முன்பாகவும், தேவஸ்தான அலுவலகங்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

• தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருமலையில் அறை எடுத்து தங்கும் வசதியைப் பெற, கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும். 
தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.

• திருமலையில் அறைவசதி கிடைக்காவிட்டாலும்,  நாம் கொண்டு செல்லும் பொருட்களை வைப்பதற்கு ஆயிரக்கணக்கான இலவச லாக்கர் வசதிகள் உள்ளன. அதில்  நமது பொருட்களை வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.

• கீழ்த்திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருட்களை வைத்து விட்டு, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு, மேல் திருப்பதியில், சுவாமி வெங்கடாசலபதியை வழிபடுவதற்கு முன், சுவாமி புஷ்கர்ணி தீர்த்தத்தில் புனித நீராடி வராகப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும்.

• கோயிலின் விதிமுறைகளைப் பின்பற்றி, கடவுளை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டும்.கோயில் வளாகத்தில் எச்சில் துப்பவோ அல்லது எந்த விதத்திலும்  மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யவோ கூடாது.

• கோயிலின் விதிமுறைகளுக்கும் வழக்கங்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. கோயில் வளாகங்களில் புகைபிடிக்கக் கூடாது. கோயில் வளாகங்களில் காலணிகளை அணியக்கூடாது.

• தங்களது அறையிலோ, வாகனங்களிலோ காலனிகளை விட்டுவிட்டு வெறுங்கால்களுடன்தான் பிரகாரங்களை வலம் வர  வேண்டும்.  மறந்து அணிந்து வந்து விட்டால், அருகாமையிலிருக்கும் காலணிகள் பாதுகாப்பு மையத்தில் விட்டுச் செல்லலாம்.

• சுவாமி தரிசனம் செய்யச் செல்லும்போது உங்களது செல்போன்களை  சைலண்ட் மோடில் போட்டு அறையிலேயே விட்டுச் செல்வது நல்லது. இல்லாவிட்டால், தரிசனம் முடித்துவிட்டு, லட்டு கௌண்டருக்குச் சென்று லட்டு வாங்கி முடித்துவிட்டு, பிறகு செல்போன் பாதுகாப்பு மையத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு நீங்கள் நிறையவே அலைய வேண்டியிருக்கும்.

• திருமலை யாத்திரையின்போது அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ உடன் எடுத்துச்செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் கேட்கக் கூடாது. முன்பின் அறியாதவர்களை உங்கள் அறையிலும் தங்க வைக்கக்கூடாது.

• கோயில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்றைத் தொடர்பு கொள்வது அல்லது http://www.tirumala.org/ இணையதளத்தின் வழியாக அறியலாம்.

------------------------------------------------------------------------------------------------எஸ்.கதிரேசன்

நன்றி : விகடன் செய்திகள் -15/10/2016

Saturday, September 24, 2016

திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து


திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்கள் 
என்ன செய்ய வேண்டும்?

புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே வைணவ பக்தர்களுக்கு, குறிப்பாக திருப்பதி வெங்கடேசப் பெருமாள் பக்தர்களுக்கு பாத யாத்திரை செல்வது, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து திருமலைக்கு மலையேறிச் சென்று மலையப்ப சுவாமியை தரிசிப்பதென உற்சாகப் பெருவெள்ளம்தான்

திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்ல இரண்டுவிதமான பாதைகள் இருக்கின்றன. திருப்பதி பஸ்-ஸ்டாண்டில் இருந்து 5.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபிரி வழியாகச் செல்வது ஒரு வழி. 

மற்றொன்று சீனிவாச மங்காபுரத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீ வாரிமெட்டு வழி. பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் அலிபிரி வழியைத்தான் தேர்வு செய்கிறார்கள்.

இந்தப் பாதையே நீண்ட நெடுநாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீ ஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன்முதலில் அமைத்தவர். 

அலிபிரியிலிருந்து பெருமாள் குடிகொண்டிருக்கும் கோயில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 3,800 படிக்கட்டுகள் உள்ள இந்த வழியாக முதல் மலையில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து வர குறைந்தது 4  முதல் 6 மணி நேரம்  ஆகும். 

இப்படியாக நடைபாதை வழியாக நடந்து வருபவர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகத்தால் அளிக்கப்படும் தரிசனம்தான் திவ்ய தரிசனம். நடைபாதையில் பாதி தூரத்தில் கோயில் ஊழியர்களால் வழிபாட்டுக்குச் செல்வதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. இதை எடுத்துச்சென்று பக்தர்கள் சிறப்பு வழியில் சென்று வழிபடலாம்.

* மலையேறிச் சென்று மலையப்பசுவாமியை தரிசனம் செய்வதென முடிவு செய்துவிட்டால், முதல் நாளே கீழ்திருப்பதி வந்து, தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ‘சீனிவாசன் காம்ப்ளக்ஸிலோ’, ‘விஷ்ணு நிவாஸிலோ’ அறையெடுத்துத் தங்கி அலமேலுமங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் தரிசனம் முடித்து இரவு ஓய்வெடுத்து மறுநாள் அதிகாலையில் மலையேறுவது மிகுந்த உற்சாகத்தைத் தரும்.

* பஸ்-ஸ்டாண்டிலிருந்தும், ரெயில் நிலையத்திலிருந்தும் 5 நிமிடத்துக்கு ஒரு பஸ் என்கிற ரீதியில் பஸ்கள் செல்கின்றன. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தேவஸ்தான இலவசப் பேருந்துகளும் செல்கின்றன.

* அலிபிரியில் நம்முடைய லக்கேஜ்களை சிறிய பூட்டு போட்டு பூட்டி தேவஸ்தான அலுவலகத்தில் கொடுத்து விட்டால் போதும். அவர்கள் வழங்கும் ரசீதைக் காண்பித்து, அவற்றை நாம் மலையின் மீது சென்று பெற்றுக்கொள்ளலாம். லக்கேஜ் பைகளில் விலை உயர்ந்த பொருட்கள் ஆபரணங்களை வைக்க வேண்டாம்.

* இந்த மலைப் பாதையில்  2,400 படிக்கட்டுகள் ஏறி முடித்ததும், ‘காலி கோபுரம்’ என்னும் இடம் வரும். இங்குதான் சுவாமி தரிசனம் செய்வதற்குரிய அனுமதிச்சீட்டு வழங்கப்படும். அங்கேயே அன்னப்பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் பிறகு 1,400 படிக்கட்டுகள் கொண்ட 9 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டும். 

* மலையேறி வந்ததும், திருமலை பஸ்-ஸ்டாண்டுக்கு எதிரில் உள்ள மாதவ நிலையத்தில் ரெஸ்ட்ரூம் செல்லவும், குளிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு  நமது உடைமைகளை அங்குள்ள ஃப்ரீ லாக்கரில் வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யச் செல்லலாம்.

* மலைப்பாதை முழுவதும் 24 மணிநேரமும் பாதுகாப்பு வசதிகள், ஆம்புலென்ஸ் வேன் மற்றும் ரோந்துப் பணியாளர்கள் உண்டு. இரவிலும் பக்தர்கள் செல்லும்விதமாக விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகாலை நேரத்தைத் தேவுசெய்வதே நல்லது.

* பாதி தூரம் வந்ததும் ஏறுவதற்கு உடல் நலம் முடியாமல் போனால் ஆங்காங்கே உட்கார்ந்து பொறுமையாக வரவேண்டும் அப்போதும் முடிய வில்லையென்றால் ஒரு சில இடங்களில் உள்ள இணைப்புச் சாலைகளின் வழியாக வந்து பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். 

ஆனால் திவய தரிசனத்துக்கான அனுமதி கேன்சலாகிவிடும். பிறகு நாம் சர்வதரிசனத்திலோ சிறப்பு தரிசனத்திலோ சாமி தரிசனம் செய்யலாம்.

 * மலைப்பாதை முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மற்றும் டாய்லெட் வசதிகள் உண்டு. அங்காங்கே சின்னச்சின்ன பெட்டிக்கடைகளும் உண்டு. பொதுவாக நாம் பழங்கள் மற்றும் கேரட் வெள்ளரி சாலட் வகைகள் எலுமிச்சைப்பழம் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்லாம்.  

* நாராயண ஸ்தோத்திரம், ஹனுமன் சாலிசா, போன்ற பக்திப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே செல்லலாம் அல்லது கோவிந்தனின் நாமத்தை உரக்க உச்சரித்துக்கொண்டும் செல்லலாம். பயணம் களைப்பில்லாமல் உத்வேகத்துடன் செல்லலாம்.

* ஏழுமலைகளும் எம்பெருமான் வாசம் செய்யும் புனித ஸ்தலமென்பதால் காலணிகள் அணியாமல், மது, சிகரெட், மாமிசங்களைப் புறக்கணித்து பயபக்தியுடன் சென்று இறைவனை வழிபடுவது நல்ல பலனை அளிக்கும். 

* வருடத்தின் எந்த மாதத்திலும் மலை யேறிச்சென்று வழிபடலாம் என்றாலும், ஏப்ரல், மே  போன்ற கோடை கால மாதங்களையும் அக்டோபர், நவம்பர் போன்ற மழைக்கால மாதங்களையும் தவிர்ப்பது நல்லது. 

* குடும்ப உறுப்பினர்கள், ஒருமித்த சிந்தனையுள்ள நண்பர்கள் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டால், பயணமும் இனிமையாகும், சோர்வாகவும் இருக்காது. தனி நபராக இருந்தால் மக்களோடு மக்களாக பயணம் செய்யுங்கள்.

---------------------------------------------------------------------------------------------- எஸ்.கதிரேசன்

நன்றி : விகடன் செய்திகள் - 23.09.2016


Saturday, June 11, 2016

உங்கள் குழந்தையுடன் வெளிநாட்டுக்கு பயணமா?


உங்கள் குழந்தையுடன் வெளிநாட்டுக்கு பயணமா?
என்ன செய்ய வேண்டும்?
வெளிநாடுகளுக்கு கைக்குழந்தையுடன் பயணம் மேற்கொள்ளப்போகும் பெற்றோரா நீங்கள்? அப்படியானால் நிச்சயம் இங்கிருக்கும் டிப்ஸ்களை படித்துவிடுங்கள் என்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த பிருந்தா. பலமுறை வெளிநாட்டு பயணம் தந்த அவருடைய அனுபவத்தில் இருந்து குறிப்புகள் சில…

1. தட்பவெட்பம்

நீங்கள் பயணம் மேற்கொள்ளப் போகும் நாட்டை பற்றி வெப்சைட்டில் நன்கு தேடி, படித்துப் பாருங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைக்கு அங்குள்ள தட்பவெட்பத்தை சமாளிக்க என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், கூடாது என்று கணிக்க முடியும்.

2. பாஸ்போர்ட்

குழந்தை பிறந்தவுடன் பாஸ்போர்ட் எடுத்திருந்தால், அவர்களுக்கு ஐந்து வயது பிறப்பதற்கு முன்னர் பாஸ்போர்ட்டை புதுப்பித்து விடுங்கள். விசா அப்ளை செய்யும் முன், குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னர் வெளிநாடு செல்லும் அனைவரின் பாஸ்போர்ட்டையும், அதன் புதுப்பிக்கும் தேதியையும் பார்த்து விடுவது நல்லது.

3. விசா (Visa)

விசா என்பது ஒரு நாட்டிற்கு செல்ல நமக்கு கொடுக்கப்படும் அனுமதிச் சீட்டு. அதை முறையாக பாஸ்போர்ட்டுடன் அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு நாட்டுக்கு செல்லும் முன்னர் ஜெனரல் அல்லது ஆன் தி அரைவல் விசா வாங்கிச் செல்ல வேண்டும். தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு செல்லும்போது விமான டிக்கெட், பாஸ்போர்ட் இருந்தால் போதுமானது. அங்கே சென்று இறங்கியவுடன் நம் பாஸ்போர்ட்டை காண்பித்து பணம் கொடுத்து விசா வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த முறை எல்லா நாடுகளுக்கும் பொருந்தாது. எனவே பயணம் மேற்கொள்ளும் முன்னர் அந்த நாட்டு விசா முறையை பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள். விசா கிடைப்பதற்கு குறைந்தது 3 முதல் 4 வாரங்கள் வரை ஆகும்.


4. ஃப்ளைட் டிக்கெட் (Flight Ticket)

விமானத்தில் பயணிக்க, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிக்கெட் வாங்கியாக வேண்டும். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் விலையில் பத்து சதவிகிதத்தை நாம் டிக்கெட்டாக கட்டணமாக செலுத்த வேண்டும். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட்டுக்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். டிக்கெட் எடுக்கும் போது பயணக் காப்பீடு (இன்சூரன்ஸ்) அவசியம் எடுத்துக் கொள்வது நல்லது. கைக்குழந்தையுடன் பயணம் மேற்கொள்கிறவர்கள் டிக்கெட் புக் செய்யும்போது, குழந்தையை படுக்க வைக்கும் வசதி கொண்ட இருக்கையாக பார்த்து புக் செய்யவும். பொதுவாக இது போன்ற இருக்கைகள் 2 அல்லது 3 மட்டுமே ஒரு ஃப்ளைட்டில் இருக்கும். எனவே முதலில் முந்துபவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும்.

5. மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையுடன் பயணம் மேற்கொள்ளும்போது தாய்க்கு சிரமம் இருக்கதான் செய்யும். அதைத் தடுக்க முறையான திட்டமிடல் அவசியம். உங்கள் குழந்தையை கவனித்த டாக்டரிடம் இருந்து குழந்தைக்கு தேவையான மருந்து எழுதிய பிரிஸ்கிரிப்ஷன், தடுப்பூசி போட்டதற்கு ஆதாரமான அட்டை, அவர்கள் பிறந்தபோது கொடுத்த மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தை பிறந்து 15 நாட்களுக்குப் பிறகு, மருத்துவரின் அனுமதிச் சீட்டோடு விமானத்தில் பயணிக்கலாம். சில நாடுகளில் இது செல்லாது. பிறந்து 3 மாதங்கள் பூர்த்தியான குழந்தையோடு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டில் போடப்படுகிற தடுப்பூசியை உங்கள் டாக்டரிடம் சொல்லி, 5 வாரங்களுக்கு முன்பே உங்களுக்கும் குழந்தைகளுக்கும் போட்டு விடுங்கள். இல்லையென்றால் நாம் சென்று இறங்கியதும், நம்மை தனிமைப்படுத்தி ஆயிரம் கேள்விகள் கேட்டு, ஒருவழியாக்கி விடுவார்கள். தடுப்பூசிபோட்டதற்கான நகல் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.

6. முதல் உதவிப்பெட்டி

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முதல் உதவிப் பெட்டி, காய்ச்சல், ஜலதோஷ மருந்து, சைனஸ் பிரச்னைகளுக்கான மருந்து போன்றவற்றை உரிய மருந்து சீட்டுடன் வைத்துக் கொள்வது நலம்.

7. ஸ்நாக்ஸ்

பயண செலவினங்களை ஓரளவுக்கு கணித்து, அதற்கேற்ப அந்த நாட்டு பணத்தை மாற்றி வைத்துக் கொள்வது நலம். குழந்தையுடன் செல்லும்போது பலவித அடுக்குகளைக் கொண்ட ஷோல்டர் பையை அவசியம் வைத்துக் கொள்ளுங்கள். அதில் டயப்பர், வெட் டிஷ்யூ பேப்பர், பிடித்த பொம்மை, சின்ன போர்வை, குடை, பால் பாட்டில், பால், பால் பவுடர், தண்ணீர், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஒரு செட் அவசியம் இருக்கட்டும். சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வாழைப்பழம், பிஸ்கட், ஆப்பிள், உலர்ந்த பழங்கள் என்று உங்கள் குழந்தையை சமாளிக்கும் உணவு பொருட்களை அவசியம் வைத்துக் கொள்ளுங்கள். எந்த விமானத்தில் பயணிக்கிறீர்களோ அந்த விமானத்தின் சேவை கையேட்டை பல முறை நன்கு படித்துவிடுவது நல்லது.

8. விமானத்தில் உதவி

விமானத்தில், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுடுதண்ணீர் தருவது, அழுது கொண்டே இருக்கும் குழந்தையை நடந்து கொண்டே தட்டிக் கொடுக்க நம்மை அனுமதிப்பது, குழந்தை வாந்தியெடுத்தால் அதை வந்து க்ளீன் செய்து விடுவது போன்ற உதவிகள் செய்வார்கள். எனவே கவலை வேண்டாம்.

9. அவசிய தேவைகள்

குழந்தைகளுக்கான பொருட்களை அதிக அளவில் எடுத்துச் சென்று உங்கள் சுமையை அதிகரிக்க வேண்டாம். அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்றவறை எல்லா நாட்டிலும் தாராளமாக கிடைக்கிறது. குளிர் பிரதேசங்களுக்கு செல்லும் போது ஷூ, சாக்ஸ், ஜெர்கின் அல்லது ஓவர் கோட், டிரஸ், சன்ஸ்க்ரீன் லோஷன், நீச்சல் உடைகள், ஸ்விம்மிங் டயப்பர், சோப்பு, ஷாம்பு என்று அனைத்தும் இருக்கட்டும். குழந்தைகளுக்கான ஆடைகள் பளிச்சென்று இருந்தால், கூட்டத்தில் எளிதில் உங்கள் குழந்தையை அடையாளம் கண்டு கொள்ளலாம். அதிக கனமான ஆடைகளை தவிர்க்கவும்.

10.  தங்கும் விடுதிகள் (Hotels)

நீங்கள் சுற்றி பார்க்கும் இடத்துக்கும் உங்கள் தங்கும் விடுதிக்கும் அதிக தூரம் இருக்க வேண்டாம். குழந்தை அழுது கொண்டே இருந்தால் மறுபடியும் தங்கும் விடுதிக்கு வர அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத அளவுக்கு விடுதிகளை தேர்ந்தெடுங்கள். விடுதி அதிக தூரத்தில் இருந்தால் அதுவே குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு அசதியை தரும்.

11. கைடு புத்தகம் கட்டாயம்

சுற்றுலா செல்லும் பட்சத்தில், பல இடங்களை தேர்வு செய்து குழந்தைகளை சோர்வாக்கிவிடாமல், அவர்களுக்கு செளகரியமான இடத்திற்கு அழைத்து செல்லுங்கள். அதற்கு முன் அந்த நாட்டின் கைடு புத்தகம், மேப், இன்பர்மேஷன் சென்டர் பற்றிய விவரம் போன்றவற்றை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்.

12. உணவில் கவனம்

உணவுகளை பொறுத்தவரை நாம் விரும்பும் உணவு வெளிநாட்டில் கிடைக்காமல் போகலாம். எனவே பிரெட் போன்ற அதிகம் தொல்லை தராத உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் பிரச்னைகள் வராது.

நன்றி : விகடன் செய்திகள் - 06.06.2016

Friday, June 10, 2016

ரயிலில் பைக்குகளை கொண்டு செல்ல


ரயிலில் பைக்குகளை கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும்?

பணி மாறுதல் உள்ளிட்ட சூழல்களில் கையுடன் மோட்டார்சைக்கிள்களையும் எடுத்துச் செல்லும் நிலை பலருக்கு ஏற்படுகிறது. குறைந்த தூரம் என்றால் ஆம்னி பஸ்களில் அல்லது பார்சல் சர்வீஸ் மூலமாக எடுத்துச் செல்ல முடியும்.

 ஆனால், வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ரயில்களே சிறந்த வழியாகவும், விரைவான வழியாகவும் இருக்கும். இந்தநிலையில், ரயில்களில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை எடுத்துச் செல்வதற்கான சில வழிமுறைகளை இங்கு காணலாம்.

இரண்டு வழிகள்

ரயில்களில் இருசக்கர வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு இரு வழிகள் உள்ளன. அதாவது, பயணியுடன் சேர்த்து எடுத்துச் செல்லும் விதத்திலும், தனி பார்சலாகவும் அனுப்ப முடியும். இதற்கிடையே, ரயில்வே பார்சல் அலுவலகத்திற்கு சென்று, கட்டணம், ஆவணங்கள், குறிப்பிட்ட இடத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு நாட்களாகவும் போன்ற தகவல்களை கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

பேக்கிங்

ரயில்வே சரக்குப் பிரிவிலும் பேக்கிங் செய்வார்கள். ஆனால், ரயில்வே பார்சல் அலுவலங்களுக்கு வெளியில் சில தனியார் அல்லது தனி நபர்கள் சிறந்த முறையில் பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். இதற்கு கட்டணம் சிறிது கூடுதலாகும் என்றாலும், பைக்கை ரயிலில் ஏற்றும்போது, இறக்கும்போது கீறல்கள் விழாமல் தவிர்க்கும்.


விண்ணப்பம் 

ரயில் சரக்குப் பிரிவில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில், பைக்கின் தற்போதைய விலை மதிப்பு, எஞ்சின் மற்றும் சேஸீ நம்பர்கள் உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

கட்டணம் 

தூரத்திற்கும், பைக்கின் எடைக்கும் தக்கவாறு கட்டணம் நிர்ணயிக்கப்படும். மேலும், புறப்படும் நிலையத்திலும், சென்றடையும் நிலையத்திலும் பேக்கிங் மற்றும் கையாளுதல் பணிகளுக்காக ரூ.150 முதல் ரூ.200 வரை தனித்தனியாக வசூலிக்கப்படும். அத்துடன், நீங்கள் குறிப்பிடும் பைக்கின் மதிப்பில் ஒரு சதவீதம் காப்பீடுக்காக வசூலிக்கப்படும். ஆனால், ரூ.10,000 குறைவான மதிப்புடைய வாகனங்களுக்கு இந்த கட்டணம் இல்லை.

தனி பார்சலாக... 

தனி பார்சலாக அனுப்பும்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவல் நேரத்தில் சரக்கு கையாளும் பிரிவில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதேபோன்று, இதே வேலை நேரத்தில் மட்டுமே சென்றடையும் இடத்திலும் டெலிவிரியும் பெற முடியும்.


பயணியுடன் சேர்த்து...

பயணிக்கும்போதே, பைக்கையும் எடுத்துச் செல்லும் வசதியும் உள்ளது. அதாவது, கையுடன் எடுத்துச் சென்று டெலிவிரி பெறும் முறை இது.

முன்பதிவு நேரம்

பயணிக்கும் குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு முன் 2 மணிநேரத்திற்கு முன்பாக சரக்கு கையாளும் பிரிவை அணுக வேண்டும்.

உரிமையாளர் இல்லையெனில்... 

பைக்கின் உரிமையாளர் பயணிக்கவில்லை எனில் அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் அல்லது ஏஜென்ட் பைக்கின் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் பயணிக்கும் ரயிலிலேயே, உங்களது இருசக்கர வாகனம் ஏற்றப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

டெலிவிரி 

பயணியுடன் சேர்த்து பைக்கை எடுத்துச் செல்லும்போது சென்றடையும் இடத்தில் 24 மணிநேரமும் டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம். சிறிய ரயில்நிலையங்களில், பைக்கை இறக்குவதற்கான வசதி இல்லையெனில், அருகிலுள்ள பெரிய ரயில் நிலையங்களுக்கு முன்பதிவு செய்து டெலிவிரி பெற முடியும்.


ஆவணங்கள் 

ரயிலில் அனுப்பும்போது, இருசக்கர வாகனத்தின் ஒரிஜினல் ஆர்சி புக் அல்லது வாகனத்தின் பதிவு ஸ்மார்ட் கார்டை முன்பதிவு அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும். அத்துடன் ஒரு நகரை அவர்களிடம் தர வேண்டும். அதேபோன்று, வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் பிரதியும் கொடுக்க வேண்டும்

பொது விதிமுறைகள் 

பெட்ரோல் டேங்க் முழுவதுமாக காலி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கவர் 

இருசக்கர வாகனத்தை ரயில்வே விதிகளின்படி பேக் செய்ய வேண்டும். பாலித்தீன் கவர் அல்லது சாக்குப் பைகளால் பேக் செய்யலாம்.

லேபிள் 

ரயிலில் ஏற்றுவதற்கு முன்னர் ரயில்வே துறை அதிகாரிகளால் அடையாள எண்கள் ஒட்டப்படும்.

ரசீதுகள் பத்திரம் 

முன்பதிவு செய்யும்போது கொடுக்கப்படும் கட்டண ரசீதின் நகலை, டெலிவிரி பெறும்போது கொடுக்க வேண்டும். அத்துடன், கையுடன் எடுத்துச் செல்லும்போது, பயணச் சீட்டையும், சரக்கு கட்டண சீட்டு என இரண்டையும் காண்பிக்க வேண்டும்.


முழுமையாக சேதமடைந்தால்... 

ஒருவேளை தீ விபத்து உள்ளிட்ட காரணங்களால் உங்கள் இருசக்கர வாகனம் முழுவதுமாக சேதமடைந்துவிட்டால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மதிப்பிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.


டிப்ஸ்

ரயிலில் எடுத்துச் செல்லும்போது பெட்ரோல் முழுவதுமாக காலி செய்யப்பட்டு விடும் என்பதால், டெலிவிரி பெற செல்லும்போது சிறிய கேனில் பெட்ரோலை வாங்கிச் செல்வது நலம். ரயில் நிலைய வளாகத்திற்குள் வண்டியை ஓட்ட முடியாது. வெளியில் வந்தவுடன் பெட்ரோலை ஊற்றி எடுத்துச் செல்ல முடியும். கையுடன் எடுத்துச் செல்பவர்கள் வாய்ப்பு இருந்தால் நண்பர்கள், உறவினர்களை பெட்ரோலை வாங்கி வரச்சொல்லலாம்.

நன்றி :  டிரைவ் ஸ்பார்க் - 07.03.2016