disalbe Right click

Showing posts with label விவாகரத்து. Show all posts
Showing posts with label விவாகரத்து. Show all posts

Monday, October 9, 2017

விவாகரத்தை தவிர்க்க.....?

Image may contain: one or more people, meme and text
மணமுறிவு செய்து கொள்வதற்காக யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை.
ஒன்று சிறப்பாக அமைய நாம் நேரத்தை ஒதுக்கி நிறைய முயற்சி செய்கிறோம். அவ்வாறுதான் திருமண வாழ்கையும. மண வாழ்க்கை பந்தம் தொடர்ந்திருக்க தம்பதிகள் பரஸ்பரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும்.
திருமண வாழ்க்கை எல்லாவற்றிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. வெளியிலிருந்து பார்த்தால், இருவரும் இணை பிரியா தம்பதிகளாக தெரிவர்.
ஆனால் அவர்களுக்குள் எத்தனையோ கசப்புகள் இருக்கலாம். இவற்றை களைந்து உள்ளும் புறமும் இணை பிரியாமல் இருப்பதற்கு அத்தம்பதிகள் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.
எனவே புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களே அல்லது இன்றோ நாளையோ மணமுறிவு கோரி நீதிமன்றத்தில் வழக்கிட சிந்தித்து கொண்டிருக்கும் தம்பதிகளே, உங்கள் இல்வாழ்க்கை இனிதாக எந்த இடர்படும் இன்றி தொடர இங்கு சில ஆலோசனைகளை உங்களுக்கு சொல்ல ஆசைபடுகிறோம். கடைபிடித்துப் பாருங்கள்.... உங்கள் துணை உங்கள் அன்புக்கு அடிமை ஆவது உறுதி.
1. ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள், மாறுபட்ட உணர்ச்சி கொண்டவர்கள் என்பதை முதலில் ஏற்று கொண்டு அதன்பின் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மண வாழ்க்கை இறுதி வரை சிறக்கும்.
2. சின்ன விஷயமோ பெரிய விஷயமோ, உங்கள் துணையை கலந்தாலோசித்தே எதையும் செய்யுங்கள். அவர் கூறும் கருத்தை கூர்ந்து கேளுங்கள்.
3. இருவரும் தவறுகளை செய்யக் கூடியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்தவறுகளில் இருந்து சரியானதை அறிந்து கொள்ளுங்கள். ஒருமுறை செய்த தவறை அடுத்த முறை செய்யாதீர்கள்.
4. உங்கள் துணையிடம் மனம் விட்டு பேசுங்கள், அவரின் பிரச்சனையை காது கொடுத்துக் கேளுங்கள்.
5. திருமணத்துக்கு முன்போ அல்லது அதன் பின்னரோ, மண வாழ்க்கைக்கு புறம்பான தொடர்புகளை கை விடுங்கள்.
6. எத்தகைய பிரச்சனை இருந்தாலும் அது இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கூட, இரவில் தனித்தனி படுக்கைகளில் படுக்காதீர்கள். உறங்குவதற்கு முன் அப்பிரச்சனையை தீர்க்க ஏதேனும் வழிகளை கண்டுபிடிக்க முயலுங்கள். பிரச்சனையை சுமுகமாக முடிக்கவே முயல வேண்டும்.
7. உங்களை பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அது உங்கள் துணையை சலிப்படைய செய்து விடும்.இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் அதிக அக்கறையுடன் இருப்பது நல்லது.
8. சிறு சிறு கேலியும் கிண்டலும் இருக்கலாம். ஆனால் அது வன்மமாக மாறி விடக்கூடாது. அந்தந்த கோப தாபத்தை அப்படியே விட்டுவிட வேண்டும்.
9. ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாகவும், அன்பான காதலர்களாகவும் இருங்கள்.
10. உங்கள் துணையின் நண்பர்களை உங்கள் துணையை அருகில் வைத்து கொண்டு குறை கூறாதீர்கள். குறிப்பாக உங்கள் நண்பர்களின் முன்னிலையில் உங்கள் துணையை குறை கூறாதீர்கள்.
11. உங்கள் துணையின் பெற்றோர்களை இழிவு படுத்தாதீர்கள் அல்லது குறை கூறாதீர்கள்.
12. கொடுத்து பெற்று கொள்ளுங்கள்.
13. உடலுறவு கொள்வதை ஏதோ ஒரு வழக்கமாக மேற்கொள்ளாதீர்கள். ஆசையும், காதலும் கொண்டு அணுகுங்கள்.
14. என்ன சொல்லி விடப் போகிறாள்/றார் என்ற எண்ணத்தில் செயல்படுவதை தவிர்க்கவும். அதாவது உரிமை என்ற பெயரில் அத்து மீறாதீர்கள்.
15. உங்கள் துணையர் சோர்ந்திருக்கும் போது அவரை உற்சாகப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள், நம்பிக்கை கொடுங்கள். மாறாக அவரது சோர்வை அதிகப்படுத்தி விட வேண்டாம்.
16. உங்கள் தோற்றத்தை பொலிவாக வைத்திருங்கள். ஆரோக்கியம் பேணுங்கள். அழகு படுத்திக் கொள்ளுங்கள்.
17. ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.
18. சமாதானம்தான் தீர்வு என்பதை உணருங்கள்.
19. மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
20. எதையாவது கடனாக பெற விரும்பினால், அது பற்றி உங்கள் துணையிடம் கேளுங்கள்.
21. உங்களது எல்லா தகவல்களையும் உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
22. நீங்கள் உங்கள் துணையரை அதிகம் நேசிப்பதாக அவரிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருங்கள்.
23. ஒருவருக்கொருவர் பாராட்ட பழகுங்கள். உள்ளன்போடு வாழ்த்துகளை சொல்லி மகிழுங்கள்.
24. சுகத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்ளுங்கள். குறிப்பாக துக்கத்தின் போது ஆறுதல் கூறி ஆதரவாக இருங்கள்.
25. பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
26. ஒருவருக்கொருவர் நன்றி மறவாதீர்.. உங்கள் துணையை ஒருபோதும் ஏமாற்ற முயலாதீர்கள்.
28. "என்னை மன்னித்துவிடு" என்று சொல்ல தயங்காதீர்கள்.
29. இயன்ற அளவு உங்கள் துணையை திருப்திபடுத்துங்கள். இயலாத நிலைக்கு வருத்தம் தெரிவியுங்கள்.
30. சகிப்புத்தன்மையை இருவரும் வளர்த்துக் கொள்ளுங்கள். சச்சரவுகளை கலந்து பேசி தீருங்கள். குறிப்பாக கணவன் எச்சமயத்திலும் மனைவியிடம் வன்முறையை கையாளக் கூடாது.
சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கை என்பதை அடிக்கடி நினைவில் நிறுத்தி சந்தோஷங்களை இரட்டிப்பாக்குங்கள்.
நன்றி : தினமணி நாளிதழ் - 07.10.2016  

Saturday, April 1, 2017

இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா?


இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா?

சட்டமே துணை: இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா?

இஸ்லாமியப் பெண்ணை அவரது கணவர் மும்முறை ‘தலாக்’ சொல்லியோ, மூன்று மாதங்களில் மாதம் ஒரு தலாக் சொல்லியோ விவாகரத்து செய்துவிட முடியும்.

 நொடிப் பொழுதில் முத்தலாக் சொல்லி ஒரு பெண்ணின் மண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது, பெண்ணின் அடிப்படை உரிமைக்கு ஊறு விளைவிக்கும் செயல் இல்லையா? 

இஸ்லாமிய அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்குவது திருக்குரானைக் கேள்விக்குட்படுத்துவதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு உச்ச நீதிமன்றத்தின் பேரமர்வு இந்த ஆண்டு மே மாதம் விவாதிக்க இருக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கும் விவாகரத்து உரிமை, இஸ்லாமியப் பெண்களுக்கும் உண்டா? உண்டு.

ஷெரீப்புக்கு அவரது மகள்கள் நஸ்ரினையும் நௌஷத்தையும் நன்றாகப் படிக்க வைக்க விருப்பம். நல்ல மதிப்பெண்கள் எடுத்த நஸ்ரினைச் சட்டக் கல்லூரியில் சேர்த்தார். ஆனால், கல்லூரிக்குச் சென்ற முதல் ஆண்டே நஸ்ரினுக்குத் திருமணமாகிவிட்டது.

 படிப்பை விடாமல் பட்டம் பெற்றார் நஸ்ரின். வழக்கறிஞராக வேலை பார்ப்பதற்குக் கணவர் அனுமதி தரவில்லை. அதனால் வங்கி வேலையில் சேர்ந்தார். நௌஷத் கல்லூரிக்குப் போக மாட்டேன் என்று அடம்பிடித்து, தன் முறைப் பையனைத் திருமணம் செய்துகொண்டார். வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்தார்.

இரு குழந்தைகள் பிறந்ததும் நெளஷத்தின் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் ஆசை வந்தது. 

நௌஷத்துக்கு ஓய்வு வேண்டும் என்றும் வீட்டு வேலைகளை இன்னொரு மனைவி பார்த்துக்கொள்வார் என்றும் கூறினார். 

நெளஷத்தால் மறுக்கவோ எதிர்க்கவோ முடியவில்லை. இரண்டாவது மனைவி வீட்டுக்கு வந்ததிலிருந்து தினமும் சண்டை, சிக்கல்கள் அதிகமாயின.

நௌஷத் நான்கு வருடங்களாக எல்லா இன்னல்களையும் தன் குழந்தைகளுக்காகப் பொறுத்துக்கொண்டார். தான் படிக்காமல், வேலைக்குப் போகாமல் இருந்தது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்தார். தன்னுடைய அடையாளம் தனது அழகு, அதற்கு இணை எதுவும் இல்லை என்று நினைத்ததெல்லாம் எவ்வளவு அபத்தம் என்று உணர்ந்தார். 

இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தபோதும் நௌஷத் தீர்வைப் பற்றி நினைத்ததே இல்லை.

நௌஷத் தான் ஒரு மனுஷி என்பதையும், தனக்குள்ள அடிப்படை உரிமைகள் தன்னிடமிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சம் என்பதையும் உணராமல் வளர்க்கப்பட்டதே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று கருதினார் நஸ்ரின். 

இந்தக் கொடுமையிலிருந்து மீள, விவாகரத்து ஒன்றுதான் வழி என்பதை அவர் குடும்பத்தார் ஏற்கவில்லை.

இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து எதற்கு? 

பணமும் வசதியும் உள்ள கணவன் மனைவிக்குச் சோறுபோட்டுப் பராமரித்தால், ஒரு பெண் விவாகரத்து பெற முடியாது என்றே உறவினர்கள் நினைத்தார்கள். 

சட்டப்படி விவாகரத்து பெற முடியுமா என்பதை நஸ்ரின் தெளிவுபடுத்தினார்.

1939-ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள இஸ்லாமிய விவாகரத்துச் சட்டமானது, பெண்கள் கீழ்கண்டவற்றில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களோ இருந்தால் விவாகரத்து கோரலாம் என்கிறது.

1) கணவர் எங்கு சென்றார் என்பதே தெரியாமல் நான்கு ஆண்டுகள் இருப்பது.

2) கணவர் மனைவியை இரண்டாண்டுகள் பராமரிக்காமல் இருப்பது. 

3) கணவர் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்குக் கூடுதலான சிறைத் தண்டனை பெற்றிருப்பது (தீர்ப்பு உறுதியாக்கப்பட்டால் மட்டுமே விவாகரத்து உத்தரவு பெற முடியும்). 

4) நியாயமற்ற காரணங்களைக் கூறி, குடும்பக் கடமைகளை கணவர் ஆற்றாமல் இருப்பது. 

5) இரண்டாண்டுகள் வரை மனநோயாளியாகவோ, கடும் பாலியல் நோயாளியாகவோ, தொழுநோயாளியாகவோ இருப்பது. 

6) தன் தந்தை அல்லது பாதுகாவலர் பதினைந்து வயதுக்கு முன்னரே திருமணம் செய்து கொடுத்திருந்தால், 18 வயது நிறைவடையும் முன்னர் தாம்பத்திய வாழ்க்கை தொடங்காமல் இருந்தால், அந்தத் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரலாம். 

7) கணவர் மனைவியைக் கீழ்க்கண்ட வகைகளில் கொடுமைப்படுத்தினால் விவாகரத்து கோரலாம்: 

அ. உடல் ரீதியான கொடுமைகள் இல்லாமல் இருந்தாலும், வாழச் சாத்தியமற்ற வகையில் கொடுமைப்படுத்தினால்.

ஆ. முறை தவறிய வாழ்க்கை வாழும் பெண்களுடன் உறவுகொண்டால்.

இ. நடத்தை குறைவான வாழ்க்கையை வாழும்படி கட்டாயப்படுத்தினால்.

ஈ. பெண்ணின் சொத்துகளை அவள் அனுமதியின்றி விற்றால் அல்லது பிறருக்குக் கொடுத்தால்.

உ. மத ரீதியான வாழ்க்கை முறைக்கு இடையூறு செய்தால் அல்லது தடுத்தால்.

ஊ. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டு வாழும்போது எல்லோரையும் சமமாக நடத்தவில்லை எனில், கொடுமை இழைத்ததாகக் கருதி விவாகரத்து தரலாம் என்று சட்டம் கூறுகிறது.

நௌஷத்துக்கு விவாகரத்துப் பெற போதுமான காரணம் இருந்தது. இவ்வளவு காரணங்களின் அடிப்படையில் இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருந்தாலும், விவாகரத்து செய்த பின்னர் கணவரிடமிருந்து ஜீவனாம்ச உரிமையோ அல்லது நிரந்தர வாழ்க்கைப் பொருளுதவியோ கோருவதற்கு இந்தச் சட்டம் உரிமை அளிக்கவில்லை. 

விவாகரத்து வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளலாம். அதிகபட்சம் குழந்தைக்கு இரண்டு வயதுவரை மட்டுமே ஜீவனாம்சம் தர வேண்டும் என்று 1986-ல் போடப்பட்ட இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்து உரிமைப் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது.

மற்ற மதங்களைச் சார்ந்த மனைவிகள், குழந்தைகள், பெற்றோர்களுக்கு ஜீவனாம்ச உரிமை (125 Cr.P.C) சட்டத்தின் கீழ் உள்ள உரிமைகள் விவாகரத்தான இஸ்லாமியப் பெண்களுக்கு இல்லை. 

இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்துச் சட்டம் இருந்தாலும், நிவாரணம் இன்றி அல்லலுறும் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள். 

ஆனால், இஸ்லாமியக் குழந்தைகளுக்குப் பொது ஜீவனாம்ச சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இஸ்லாமிய ஜீவனாம்ச சட்டத்தின் எல்லையை விரிவாக்கி, குழந்தைகளுக்கு ஜீவனாம்ச உரிமையை உறுதி செய்துவிட்டது.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 02.04.2017

Friday, April 10, 2015

அனைத்து மத விவாகரத்து சம்பந்தமாக ......


அனைத்து மத விவாகரத்து சம்பந்தமாக ......
******************************************************
இரு மனங்கள் ஒத்து உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்கு ஒன்று நடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் ஒன்றாக வாழ்வது தேவையில்லாதது.
‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் ‘மணவிலக்கு’ (DIVORCE) என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது. இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் விளைவிக்கும்.

ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க ‘மணவாழ்வுரிமை மீட்பு சட்டம்’ பயன்படுகிறது.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுப்பவர்களுக்கும் கீழ்காணும் சட்டம் வழிகாட்டுகிறது.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.


சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி

1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,
2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,
3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,
4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,
5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,
6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,
7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,
8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.
இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ அல்லது மனைவியோ இல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறியும் மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், 

திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன்,

1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,
2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,
3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),
4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,
5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,
7. ஆண்மையற்று இருந்தாலோ
... மனைவியானவர்  மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும் 
மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.
மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே “தலாக்” எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி
நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,
மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,
கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,
கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,
கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால் ...

...பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.

இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.
எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள். 

அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழமாகச் சிந்தித்துவிட்டு முடிவெடுங்கள்!