disalbe Right click

Showing posts with label Cr.P.C. Show all posts
Showing posts with label Cr.P.C. Show all posts

Sunday, June 26, 2016

காவல்துறையில் புகார் அளிக்க

காவல்துறையில் புகார் அளிக்க என்ன செய்ய வேண்டும்?
நாட்டில் நடக்கின்ற அநியாயங்களைக் கண்டு கொதிப்பவர்கள், குற்றம் செய்பவர்களை தண்டணை அடையச் செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள்  முதலில் தெரிந்து கொள்ளவேண்டிய   சட்டப்பிரிவு இது. 
காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து  கடமை  ஆற்றுவது பெரும்பாலும் இந்தப்பிரிவில் இருந்துதான் தொடங்குகிறது. 
காவல்துறையினரின் கடமைகளையும், பொதுமக்களின் உரிமைகளையும் பற்றி  இதில்  தெளிவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப் பிரிவில் குறிப்பிட்டவாறு நடக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆணையிட்டாலும், காவல் துறையினர் அதனை மதித்து நடப்பதில்லை என்றாலும் இதனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்.
குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, 
(Cr. P.C) பிரிவு : 154
*** கைது செய்வதற்குரிய குற்றம் ஒன்று நி்கழ்ந்து இருந்தால், அது பற்றிய  புகார் கொடுப்பதற்கு புகார்தாரர் அதனைப் பற்றி எழுதிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
*** நடந்த சம்பவத்தை வாய்மொழி மூலமாகவே காவல் துறை அலுவலரிடம் சொன்னால் போதுமானது. 
*** காவல்துறை அலுவலர் அதனை எழுதி, புகார்தாரருக்கு வாசித்து காட்ட வேண்டும். மேலும் அதில் புகார்தாரரின் கையெழுத்தையும் வாங்க வேண்டும்.
***  காவல்நிலையத்தில் அதற்கென பராமரித்து வரும் குறிப்பேட்டில் அதனை பதிவு செய்யவும் வேண்டும்.
*** பதிவு செய்யப்பட்ட தகவலின் நகல் ஒன்று புகார் அளித்தவருக்கு உடனே  இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
*** காவல்நிலைய அதிகாரி புகாரை பதிவு செய்ய மறுத்தால், புகார்தாரர் அந்தப் புகாரை எழுதி தபால் மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
*** அந்தப் புகாரானது கைது செய்வதற்குரிய குற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மனநிறைவைத் தந்தால்  அவரே அந்தப்புகாரை புலன்விசாரணை செய்யலாம்.
*** அல்லது தமக்கு கீழ்ப்பட்ட அலுவலர் ஒருவரை புலனாய்வு செய்ய உத்தரவிடலாம். நியமிக்கப்படும் அந்த அலுவலருக்கு அந்த குற்றவிசாரணையைப் பொறுத்தவரை, ஒரு காவல்நிலைய பொறுப்பு அதிகாரிக்குள்ள அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு இருக்கும்.
உங்களுக்குள் எழுத்துத் திறமை இருக்கிறது. எழுதுங்கள், எழுதுங்கள் என்று என்னை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை ஊட்டி வருகின்ற முகநூல் நண்பர் திரு சரவண அர்விந்த் அவர்களுக்கு நான் எழுதுகின்ற இந்த  முதல் சட்டக் கட்டுரையை நன்றியுடன்  சமர்ப்பிக்கின்றேன்.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.05.2016