disalbe Right click

Monday, April 6, 2015

தமிழ்நாடு திருமணப்பதிவுச் சட்டம்- 2009

தமிழ்நாடு திருமணப்பதிவுச் சட்டம்- 2009
2009-ம் ஆண்டுக்கு முன்பு எந்தத் திருமணத்தையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசிமில்லை. அப்போது மொத்தம் மூன்று வகையான திருமண பதிவுச் சட்டங்கள் தமிழ்நாட்டில் இருந்தது. அவை,
1) இந்து திருமணச்சட்டம்
2) தனி திருமணச் சட்டம்
3) கிறிஸ்துவ திருமணச் சட்டம்.
இந்த மூன்று வகையான சட்டங்களில் ஒன்றில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறையே 2009-ம் ஆண்டுக்கு முன்பு வரை இருந்து வந்தது.
2009-ம் ஆண்டுக்கு பிறகு, இந்த மூன்று வகை திருமண சட்டங்களில் ஏதேனும் ஒன்றில் திருமணத்தை பதிவு செய்தாலும்,
மீண்டும் தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009-ன்படி கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். ஆதலால் மேற் சொன்ன மூன்று வகையான திருமண பதிவுச்சட்டங்களில் பதிவு செய்வது அவசியம் இல்லாமல் போனது. எனவே தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்2009-ன் படி மட்டுமே திருமணங்களை பதிவு செய்தால் போதும் என்ற நிலை வந்தது.
இத்திருமணங்களை எப்படி பதிவு செய்வது?
தமிழ் நாடு திருமணச் சட்டம்2009ன் படி திருமணம் நடந்த 90 தினங்களுக்குள் திருமணத்தை பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பதிவுச செய்யவேண்டும்.
திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் ரூ.100/- மட்டுமே.
திருமணம் முடிந்து 91 முதல் 150 நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத கட்டணம் ரூ.50/-ம் சேர்த்து மொத்தம் ரூ.150/- செலுத்தவேண்டும்.
திருமணம் முடிந்து 150 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு திருமணச் சட்டம்-2009-ன்படி பதிவு செய்ய முடியாது.
150 நாட்களுக்கு பிறகும் பதிவு செய்யாதவர்கள் மீது அந்த பகுதி பதிவாளர் குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்ட விதி முறை வகுக்கப்பட்டுள்ளது.
எனவே இனி திருமணம் செய்து கொள்ளும் அனைவரும் 90 நாட்களுக்குள் இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்.
திருமணம் எங்கு நடந்ததோ அந்த பகுதிக்கான பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்ய முடியும். (மூன்று வகையான திருமணச் சட்டத்தில் திருமணம் நடந்த பகுதி பதிவாளர் அலுவலகம் அல்லது பெண் வீடு அல்லது மாப்பிள்ளை வீடு உள்ள பகுதி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும் வகையில் விதி முறை உள்ளது).
திருமணத்தன்று ஆணுக்கு வயது 21-ம்,
பெண்ணுக்கு வயது 18-ம் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக கீழ்கண்ட ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.
திருமண பத்திரிக்கை.
கோவில்/சர்ச்/பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாக கொடுக்கும் ஆவணம்.
திருமணம் நடந்ததிற்கான வேறு ஆதாரங்கள் (நோட்டரி அபிடிவிட், போன்ற ஆவணங்கள்)
முகவரிக்கான ஆதாரமாக கீழ்க்கண்ட ஒன்றில் ஏதேனும் ஒன்று கொடுக்கப்படவேண்டும்.
1) வாக்காளர் அடையாள அட்டை
2) குடும்ப அட்டை
3) ஓட்டுனர் உரிமம்
4) பாஸ்போர்ட் அல்லது விசா
வயதுக்கான சான்றாக கீழ் கண்ட ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
1) பிறப்புச் சான்று
2) பள்ளிகல்லூரிச் சான்று
3) பாஸ்போர்ட்/விசா
மூன்று சாட்சிகள் கையெழுத்திட வேண்டும். சாட்சிகள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கணவன் -4, மனைவி 4 போட்டோக்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்-2009-ன் படி பதிவு செய்யத் தனியாக விண்ணப்ப படிவம் உள்ளது. http://www.tnreginet.net/english/forms.asp என்ற இணைப்பிலிருந்து 4 பக்க விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இச்சட்டத்தின் முக்கிய குறிப்பு:
இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.
இச்சட்டத்தின்படி, பதிவுத் துறைத் தலைவர் அவர்கள் தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய படிவத்தில் இல்லாத/ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்யாத/உரிய கட்டணம் செலுத்தப்படாத கோரிக்கை மனுக்கள் குறைகளை சரி செய்து மீண்டும் அளிக்குமாறு மனுதாரருக்கு திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு திருமணப்பதிவு விதிகளின்படி மணமக்களின் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் சரித்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்படின், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப்பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.
இந்த மறுப்பு ஆணைமீது சம்பந்தப்பட்ட நபர்கள் ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
அவ்வாறு செய்யப்பட்ட மேல்முறையீடு மீது மாவட்டப் பதிவாளரால் பிறப்பிக்கப்படும் ஆணை திருப்தி இல்லையெனில் இதன் மீது ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத்துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம்.
பதிவுத்துறைத் தலைவரின் ஆணையே இறுதியானது.
தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009 அமலுக்கு வரும் நாளான 24.11.2009 முதல் நடைபெறும் அனைத்து திருமணங்களும், எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும், மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதி மீறல் இருப்பதாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும்.
இணைப்பு :
திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொருந்தும்.
உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது.
இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.

எஸ்.எம்.எஸ். மூலம் மின்கட்டணம்


எஸ்.எம்.எஸ். மூலம்  மின்கட்டணம்
******************************************************

மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதியை மறந்து விட்டு இனி ‘பைனோடு‘ கட்டணத்தை செலுத்த தேவையில்லை. நுகர்வோர்களுக்கு நினைவுப்படுத்த மின்வாரியம் மெசேஜ் கொடுத்துவிடும்.

பெரும்பாலானவர்கள் மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதியை மறந்து விடுவார்கள். இதனால், மின் வாரிய ஊழியர்கள் மின் கட்டணம் செலுத்தாத வீடுகள் மற்றும் வணிக ரீதியான கட்டிடங்களுக்கு சென்று பியூஸ் கேரியரை பிடிங்கிய பின்னரே கட்டணம் செலுத்த வேண்டியது தெரிய வரும். பின், அபராதத்துடன் சென்று கட்டணத்தை செலுத்தி மின் இணைப்பை பெறுவது வழக்கம். இதனால், ஓரிரு நாட்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவதிப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில இடங்களில் பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதி குறித்து நமக்கு ‘அலர்ட்‘ மெசேஜ் அனுப்பும் புதிய வசதியை மாவட்ட மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக தற்போது அனைத்து மின் நுகர்வோர்களிடம், செல்போன் எண்களை சேகரிக்கும் பணிகளை துவக்கியுள்ளது. செல்போனில், மெசேஜ் கொடுப்பதன் மூலம் இனி அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்துவது குறைவது மட்டுமின்றி, பிரச்னைகளும் குறைய வாய்ப்புள்ளது. நுகர்வோர், மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்களுக்கு சென்று தங்களது செல்போன் எண்ணை கொடுக்கலாம். இதற்காக மின் அலுவலுகத்தில் தனியாக பதிவேடு வைக்கப்பட்டு, நுகர்வோர் தாங்களாகவே மொபைல் போன் எண்ணை பதிவு செய்யயல்லம் .

அல்லது இணையதளத்தில் பகிர்மானக் கழக இணையதளமான
,http://www.tangedco.gov.in/index1.php?tempno=-பில்லிங் சர்வீசஸ் (Billing Services) என்ற ஆப்ஷனில் சென்றால், இறுதி ஆப்ஷனாக மொபைல் நம்பர் ரெஜிஸ்ட்ரேஷன் (Mobile Number Registration) சேர்க்கப்பட்டுள்ளது. அதில் க்ளிக் செய்தால், தங்களது மின் மண்டல எண்ணை தனியாகவும், மற்ற எண்களை தனியாகவும் குறிப்பிட வழி செய்யப்பட்டுள்ளது. இணைப்பு எண்ணைப் பதிவு செய்ததும், மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

என்கவுண்டர்


என்கவுண்டர்
******************************************

என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார் அளிப்பதும் வாடிக்கையான நிகழ்ச்சிகள்.

ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்குப் பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம்.

வாழ்வின் பல்வேறு காலகட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதைப் பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது. ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?

இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, “தற்காப்புரிமை செயல்” (ACT OF PRIVATE DEFENCE) என்று சட்டம் அங்கிகரிக்கிறது. இந்த உரிமையைப் பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத் தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.
பிரிவு 96: 

*************
தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும் எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.


பிரிவு 97: 

*************
முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள உரிமை.

இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு. 

இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ – உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

பிரிவு 98: 
*************
இளமை, புரிந்து கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது போதை இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும், அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.

அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ, மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின் கருத்து. 

எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ, போதையால் பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு பார்த்தாலும் போன உயிர் திரும்ப வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும் பாதுகாப்புரிமை செயல்படவே செய்யும்.


பிரிவு 99: 

*************
1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும் என்னும் அச்சத்தை நியாயமாக விளைவிக்காத ஒரு செய்கையானது,-

(i) ஒரு பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால் அந்த செய்கையானது…

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால், அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது ஊழியரின் உத்தரவோ சட்டப்படி நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப் பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை பயன்படுத்த முடியாது.

2. எச்சமயத்தில் ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை என்றால் –

(i) ஒரு பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.

3. காக்கும் நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிட அதிகமான கேட்டை உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது. காவல்துறை அதிகாரி, பொது ஊழியர் ஆவார்.

இவர் நம்மைக் கைது செய்தால் அது நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்தச் செயல் குற்றச்செயல் ஆகாது. அந்த கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும். 

ஆனால் அந்த கைது சட்டப்படி அமைய வேண்டும். அவர் காவல் அதிகாரி என்பதையும், அவர் சட்டரீதியான நடவடிக்கையே மேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.

அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும் புரியாத நிலையில் நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும். 

வெறும் கையுடன் நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ, துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. 

ஆபத்தின் தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.


பிரிவு 100: 

**************
உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருத முடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.

1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்போது,

2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு தாக்குதலின்போது,

3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,

4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,

5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,

6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,

மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை ஏற்படுத்துவதோ குற்றமாவதில்லை.

பிரிவு 102: 
**************
உடலுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே, உடலைப் பொறுத்து தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரை தற்காப்பு உரிமையும் நீடிக்கும்.

எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாக விழுந்தால் அது நமது உயிரையே பறித்துவிடக்கூடும். 

எனவே நம்மைத் தாக்க முடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ, இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ முற்படுகிறார் எனத் தெரியும்போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். 

ஆளைக்கடத்தும் நோக்கத்துடனோ, அதன் மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ, இந்த அனைத்து நிகழ்வுகளின்போதும் பொது அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

பிரிவு 106: 
**************
மரணம் ஏற்படும் என்னும் அச்சம் உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது. 

தற்காப்புரிமையை பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20 அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று முனைந்து நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர் தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும் தற்செயலாக நிற்கின்றனர். 

துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க நேரிடினும் அது குற்றம் அல்ல. இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. 

நம்மை தாக்க வரும் நபர், நாம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக் கண்டு தப்பியோடும்போது அவரைப் பிடித்து தாக்கக்கூடாது.

நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்க முயற்சித்தால் தற்காப்புரிமையாக அவரை நாம் தாக்கலாம். ஆனால், நம்மை அவர் அடைத்து வைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை தாக்கக்கூடாது. காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை குறித்த அம்சங்களை விளக்குகின்றன.

பிரிவு 97(2): 
**************
தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.
பிரிவு 103: 
**************
கொள்ளை, இரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம் செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு மரணமாகவோ, கொடுங்காயமாகவோ இருக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ அது குற்றமாகாது.
பிரிவு 104: 
**************
பிரிவு 103ல் கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல் அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும், அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு எவ்வித காயத்தையும் விளைவிக்கலாம்.
பிரிவு 105: 
**************
சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர் அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த தற்காப்புரிமை தொடங்குகிறது.

திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும் அல்லது பொது அதிகாரிகளின் உதவி பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். 

குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது சொத்து அழித்தல் குற்றங்களை தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும்.

இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்து தொடர்ந்திருக்கும்வரை தற்காப்புரிமையும் தொடர்ந்து இருக்கும்.

பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள் கவராவண்ணம் தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம். 

ஆனால் பொருளை மீட்டபின் அக்கயவனை தாக்கக்கூடாது. இவ்வாறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும் மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும் சட்டம் குறித்த தெளிவின்மையால் அக்குற்றங்களை அனுமதிக்கிறோம்.

பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்த தற்காப்புரிமையை பரவலாக (தவறாக) பயன்படுத்துபவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான். பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.
நன்றி-The Civil Rights

ஹேக்கிங்


ஹேக்கிங்
*************************

இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.

ஹேக்கிங் என்றால் என்ன?

********************************உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.

எதற்கு இதை செய்கிறார்கள்?

*******************************************ஒரு சிலர் இதை பொழுதுபோக்காக செய்கிறார்கள், இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கணக்கை முடக்க செய்கிறார்கள். ஒரு சிலர் பணத்துக்காக செய்கிறார்கள் அதாவது நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் நீங்கள் கூறும் கணக்கை ஹேக் செய்து கொடுத்து விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் மற்றவர்களின் வங்கிக்கணக்கை ஆட்டையை போட்டு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள்.

இதை எவ்வாறு தடுப்பது?

*************************************
நான் கூறப்போவது உங்களை எச்சரிக்கை படுத்தவே நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாந்தாலும் நமது கணக்கு முடக்கப்பட்டு விடும். எனவே நான் கூறியவற்றை கூடுமானவரை பின்பற்றப்பாருங்கள்.

1. நீங்கள் கூகிள் மின்னஞ்சல் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணக்கில் சென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை httpsமுறையில் மாற்றிக்கொள்ளுங்கள் காரணம் இது அதிக பாதுகாப்பான ஒன்றாகும். http பயன்படுத்தினீர்கள் என்றால் உங்கள் கணக்கை எளிதில் முடக்க முடியும். குறிப்பாக நீங்கள் Public Wireless பயன்படுத்தினால். எனவே நீங்கள் முதல் வேலையாக இதை மாற்றி விடுங்கள். மின்னஞ்சல் கணக்கு என்றில்லை வங்கிக்கணக்கு உட்பட எந்த கணக்கில் நுழைந்தாலும் அது https ஆக உள்ளதா என்று உறுதி செய்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். https உங்கள் தகவல்களை என்க்ரிப்ட் செய்து அனுப்பும்.

2. நீங்கள் எப்போது மின்னஞ்சலை பயன்படுத்த நினைத்தாலும் நீங்களே முகவரியை முழுதும் தட்டச்சு செய்யுங்கள் எடுத்துக்காட்டாகhttps://gmail.com/ வேறு ஏதாவது சுட்டி (Link) மூலம் தயவு செய்து போகாதீர்கள். எடுத்துக்காட்டாக www.emaanthavan.com/google.com என்று இருக்கும் icon smile ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?திறந்தாலும் கூகிள் மின்னஞ்சல் கணக்கு முகப்பு பக்கம் போலவே இருக்கும். நீங்கள் கூகிள் கணக்கு என்று நினைத்து உங்கள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து செல்வீர்கள் ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது. நீங்களும் சரி! எதோ பிரச்சனை என்று மறுபடியும் நேரடியாகwww.gmail.com என்று அடித்து சென்று விடுவீர்கள் ஆனால் உங்களுக்குத் தெரியாது நீங்கள் இன்னொருவருக்கு உங்கள் கடவுச்சொல்லை தாரை வார்த்து விட்டீர்கள் என்று.

3. உங்கள் கணினியில் Windows இயங்குதளம் (Operating System) பயன்படுத்துகிறீர்கள் என்றால் Windows update மற்றும் Anti Virus update கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை தானியங்கியாக அமைத்து விட்டீர்கள் என்றால் அதுவே நீங்கள் இணையத்தை இணைத்தவுடன் Update செய்து விடும். நீங்கள் அவ்வப்போது அது சரியாக செயல்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது. இது நீங்கள் பயன்படுத்துகின்ற உலவிக்கும் பொருந்தும்.

4. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சலில் உள்ள சுட்டிகளை தயவு செய்து க்ளிக் செய்ய வேண்டாம் இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கு சந்தேகம் அளிக்கும் எந்த சுட்டியையும் க்ளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்கள் தகவல்களை எளிதாக சுருட்ட முடியும்.

5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் பற்றி கேட்டு எதுவும் மின்னஞ்சல் வந்தால் நீங்கள் தைரியமாக அதை டெலிட் செய்து விடலாம். எந்த வங்கியும் உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் (பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்) கேட்டு மின்னஞ்சல் செய்யாது. 100% நம்பலாம். உங்கள் மின்னஞ்சல் பயனர் கணக்கு பற்றிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சலும் இதே வகையை சேர்ந்ததாகும்.

6. இலவசமாக கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியாத எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாதீர்கள் அதில் Spyware என்ற உங்கள் தகவல்களை திருடும் மென்பொருளையும் இணைத்து விடுவார்கள். இது தெரியாமல் இலவசம் என்று சந்தோசமாக நிறுவினால் உங்கள் கிரெடிட் கார்ட் எண் உட்பட அனைத்தையும் சுட்டு வேட்டு வைத்து விடுவார்கள். நம்ம தான் இலவசம் என்றால் பினாயிலும் குடிப்போமே! உஷாராக இருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தேவையற்ற மென் பொருளை நிறுவுவதை தவிர்க்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது உங்கள் கணினியின் வேகமும் சிறப்பாக இருக்கும்.

7. Keylogger என்ற ஒரு மென்பொருள் உள்ளது இது மிக மிக அபாயகரமான மென் பொருளாகும். இதன் மூலம் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒரு எழுத்து விடாமல் அத்தனையையும் நீங்கள் அறியாமல் படிக்க முடியும். எளிமையாக கூறுவதென்றால் சுத்தமாக உங்களை மொட்டை அடிக்கும் மென்பொருளாகும். இது பற்றி சுருக்கமாக கூற முடியாது என்பதால் இது பற்றியும் இதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது பற்றியும் தனியாக இடுகை விரைவில் எழுதுகிறேன்.

8. எல்லாவற்றையும் விட மிக ஆபத்தான இடம் என்றால் அது பிரவுசிங் சென்டர் தான். காசு கொடுத்து ஆப்பு வாங்கும் இடம், சொந்த செலவில் சூனியம் வைப்பது ஆகும். இங்கே மேற்க்கூறிய என்னவேண்டும் என்றாலும் நடக்கலாம் அல்லது அனைத்துமே நடக்கலாம். எனவே உங்களின் முக்கியமான கணக்குகளை இதைப்போல பிரவுசிங் சென்டர்களில் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிருங்கள். தவிர்க்க முடியவில்லை என்றால் தயவு செய்து Private Browsing முறையை IE, க்ரோம் (ctrl+shift+N) மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் ல் பயன்படுத்தவும். இது உங்கள் தகவல்களை எங்கும் சேமிக்காது. ஆனால் Keylogger மென்பொருள் முறையில் உங்கள் தகவல்களை திருட முடியும். பாதுகாப்பே இல்லாமல் இருப்பதற்கு இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை என்று கூறலாம் அவ்வளவே.

9. உங்கள் சொந்தக் கணினியாகவே இருந்தாலும் உங்கள் கடவுச்சொல்லை சேமித்து வைக்காதீர்கள். எப்போது உள்ளே நுழைந்தாலும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை கொடுத்தே செல்லுங்கள் அதுவே பாதுகாப்பானது. உங்கள் உலவியில் உள்ள History,Cookies ஐ சீரான கால இடைவெளியில் நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

10. நீங்கள் என்னதான் அனைத்திலும் பக்காவாக இருந்தாலும் உங்கள் கடவுச்சொல் கஷ்டமானதாக இல்லை என்றால் விரல் சொடுக்கும் நேரத்தில் கண்டு பிடித்து விடுவார்கள். நீங்கள் எவ்வளவு சிறப்பான அல்லது எவ்வளவு கேவலமான கடவுச்சொல்லை வைத்து இருக்கிறீர்கள் என்று பின் வரும் தளங்களில் சென்று அறிந்து கொள்ளுங்கள். மொக்கை கடவுச்சொல்லாக இருந்தால் கையோடு மாற்றி விடுங்கள். தகவல் உதவி நன்றிhttp://www.vijayforvictory.com/
a) http://howsecureismypassword.net/
b) https://www.microsoft.com/protect/fraud/passwords/checker.aspx
c) http://www.passwordmeter.com/


11. அனைத்து கணக்குகளுக்கும் (Gmail, Yahoo, Hotmail, WordPress) ஒரே கடவுச்சொல்லை வைக்கக்கூடாது அப்படி நீங்கள் வைத்தால் ஒரு கணக்கை ஹேக் செய்தால் உங்கள் அனைத்து கணக்குகளும் உங்கள் கையை விட்டுப்போய் விடும். கூகிள் கணக்கை எடுத்துக்கொண்டால் அதில் மின்னஞ்சல், ப்ளாகர், கூகிள் அனலைசிடிக்ஸ், பிகாசா, காலண்டர், ஃபீட் பர்னர், ரீடர், ஆர்குட், கூகிள் சாட், கூகிள் வாய்ஸ், YouTube, Docs என்று அனைத்தும் காலி ஆகி விடும். ஒரு கடவுச்சொல் ஆனால் நீங்கள் இழப்பது எத்தனை பாருங்கள். இவை இல்லாமல் Yahoo!, Hotmail, WordPress என்று பல கணக்குகள் உள்ளன.

12. உங்களுடைய கணக்கின் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி அவசியம் கொடுக்க வேண்டி வந்தால் வேலை முடிந்தவுடன் உடனே கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள் அது எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி! இந்த விசயத்தில் யாராக இருந்தாலும் நம்ப வேண்டாம் காரணம் நாளை வேறு ஒருவர் ஹேக் செய்தால் கூட உங்கள் நண்பரை சந்தேகப்பட வேண்டி வரும். இது அனாவசிய பிரச்சனைகளை தரலாம் நட்பை முறிக்கலாம்.

மேற்கூறியவை உங்களுக்கு ஓரளவு இணைய பாதுகாப்பை அளிக்கும் இருப்பினும் இதையும் மீறி ஜாக்கிரதையாக இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது. நம் கணக்கை யாரும் இது வரை முடக்கவில்லை அதனால் நம் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஹேக் செய்பவர்கள் உங்கள் கணக்கை குறி வைக்கவில்லை என்பதே உண்மை. ஹேக் செய்பவர்கள் நினைத்தால் உங்களின் சிறு தவறு கூட அவர்களுக்குப்போதும் உங்கள் “கணக்கை” முடித்து விடுவார்கள்.

ஃபேஸ்புக்கில் வாரிசு நியமிக்கலாம்


ஃபேஸ்புக்கில் வாரிசு நியமிக்கலாம்
********************************************

வாஷிங்டன்:சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், வாரிசுதாரர் நியமன வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பல கோடி மக்களை உறுப்பினராக கொண்ட, மிகப்பெரிய சமூக வலைதளங்களில், பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது.

இந்த வலைதள நிறுவனம், பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோர் இறந்த பிறகும், அக்கணக்கை அவர்களின் வாரிசுகள், நியமனதாரர்கள் ஆகியோர் தொடர்ந்து கையாளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கி கணக்கில், வாரிசுதாரரை குறிப்பிடுவ
து போல், பேஸ்புக்கில் இணைந்துள்ள ஒருவர், தமக்கு பின், தன் கணக்கை தொடரும் உரிமையை வாரிசுக்கோ, நண்பருக்கோ வழங்கலாம்.

இதன் மூலம் ஒருவர் இறப்புக்குப் பின், அவரது பேஸ்புக் கணக்கு பயன்படுத்தப்படாமல் முடங்குவது தவிர்க்கப்படும்.

புதிய வசதி முலம் ஒருவரின் இறப்பை, அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவிக்கவும், இரங்கல் செய்திகளை பகிரவும், இறுதிச் சடங்கு படங்களை வெளியிடவும், வாரிசுதாரருக்கு வாய்ப்பு கிடைக்கும்.அத்துடன், நட்பு வட்டாரத்தையும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

இறந்தோரின் பேஸ்புக் கணக்கை சுலபமாக அடையாளம் காண்பதற்காக, அவரது பெயர் முன், 'நினைவாக' என்ற சொல்லும் இடம் பெறும் என, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
........................தினமலர் நாளிதழ் செய்தி 16.02.2015........
........

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு காவல்துறை ஆலோசனை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளைய டிப்பதும், அவற்றை தடுக்க‍வரும் பெண்களை கொலை செய்வதும் நகை பணத்துடன் தப்பி ஓடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ள‍ன.
மேலும் நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல் லும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

இதனால் காவல் துறையினர் வீட் டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க‍, அவர்களுக்கு 12 ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்
.காவல்துறையினர் வழங்கும் ஆலோசனைகள்

1. பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கமா க பூட்டி வைக்கவேண்டும். கதவை திறந்து வைத்துவிட்டு, வீட்டுக்குள்ளே வேலைகளிலேயே மூழ்கிப் போகக் கூடாது.

2. வீட்டின் வாயிற் கதவில், ”லென்ஸ்” கண்டிப் பாக பொருத்த வேண் டும். அதோடு நில்லாமல் வீட்டின் மர கதவுக்கு முன் இரும்பு கிரில் கதவுக ளை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.

3. ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள். தங்கள் கணவர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் என்பன போன்ற விஷயங்களையும், கணவர் வெளியூர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக் கூடாது.

4. தற்காப்பு கலை: வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள்தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற கலைகளை கற்றுக் கொ ண்டால் நல்லது. திடீரென்று கொள் ளையர்களாக மாறும் நண் பர்களை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். நகைகளை கொடுக்க மாட்டேன் என்று சத்தம்போட்டு ஆபத்தை வர வழைப்பதைவிட, கொள்ளையர்க ளிடம் புத்திசாலித் தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கத வை பூட்டிவிடலாம். அல்லது மிளகாய் பொடி போ ன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.

5. அறிமுகம் இல்லாத நபர்களையோ, அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ் நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக் காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடன டியாக வெளியே அனுப்பி விடுங்கள்.

6. வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களைநியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய புகை ப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள்கூட பயந்துபோய் திருடமாட்டார்கள்.

7. முதியவர்கள் : வீடுகளில் வயதான பெண் கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை வங்கி லாக்கரில் கண் டிப்பாக வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.

8. அடுக்குமாடிகள் மற்றும் பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்போடு பழக்கம் வைத்துக்கொண்டால் ஆபத்து நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.

9. ஜோதிடர்கள்: ஜோதிடர்கள், குறி சொல்ப வர்கள், போலி சாமியார் கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்கு பவர்கள் போன்ற நபர்களை, தனியாக இரு க்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. பால்காரர், பேப்பர்காரர், காய் கறி விற்ப வர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வரு பவர், சலவைகாரர் போன்றவர்களின் பெயர்கள், அவர்களது முகவ ரி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே காரியத்தை முடித்து விட்டு, அவர்களை அனுப்பி விடுவது சால சிறந்தது.

10. டெலிபோன் எண்கள் :அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண் களை, பார்வையாளர்கள் யாராவது பார் க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார் வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள்செல்ல அனுமதிக்க வேண்டும்.

11.ஒவ்வொரு வீட்டிலும் அருகிலுள்ள போலீஸ் நிலைய தொலை பேசி எண், தீயணைப்புத்துறை டெலிபோன் எண், அவசர போலீஸ் தொலை பேசி எண், அல்லது தங்களுக்கு தெரிந்த போலீஸ் துறையில் பணி புரியும் அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்திருக்க லாம். அல்லது டெலிபோன் எண்களை ஒரு பேப்பரில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருக்கலாம். ஆபத்து காலங்களில் இந்த டெலிபோன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்ப தற்கு வசதியாக இருக்கும்.

12. இதேபோல, காவல்துறையினர் சமுதாயத்தில் நடக்கும் மற்ற குற்றங் களை தடுக்கும் வழிமுறைகளையும் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க 
உள்ளனர். பொது மக்களும் அக்கரை எடுத்துக் கொண்டு, இந்த அறிவுறைகளை நோட்டீஸாக அடித்து ஒவ்வொரு வீட்டிற்கும் வினியோகிக்கலாம். 

இளைய சமுதாயம் இதில் முனைப்புடன் செயல்பட்டால் குற்றங்கள் குறையும்.
நன்றி - சென்னை மாநகர காவல்துறை