disalbe Right click

Saturday, July 15, 2017

பெங்களூரு சிறையில் நடப்பது என்ன?

பெங்களூரு சிறையில் நடப்பது என்ன? வீடியோ வெளியானதால் பரபரப்பு
பெங்களூரு:பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வீடியோ காட்சிகள், நேற்று, உள்ளூர், 'டிவி' சேனல்களில் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, கடந்த, 10ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, அ.தி.மு.க., சசிகலாவுக்கு வழங்கப் பட்ட சிறப்பு சமையல் அறை, முத்திரை தாள் மோசடி குற்றவாளி, அப்துல் கரீம்லால் தெல்கிக்கு சிறப்பு வசதி, போதை பொருளான கஞ்சா கொண்டு வருவது போன்ற முறைகேடு களை கண்டுபிடித்தார்.
இது தொடர்பாக, கைதிகளிடம் விசாரித்தார். கஞ்சா, சூதாட்ட அட்டைகள் எப்படி கிடைத்தன என்று கைதிகளிடம் கேள்வி எழுப்பினார். இது குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கைதிக ளிடம் ரூபா விசாரிப்பது, சிறை கைதிகள் சூதாடுவது போன்ற வீடியோ காட்சிகள் நேற்று மீடியாக்களில் வெளியானது. இதனால், கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், டி.ஐ.ஜி., ரூபா புகார் வெளியாகி மூன்று நாட்களுக்கு பின்னும், புகார் தொடர் பான பரபரப்பு குறையாமல் இருந்ததால், சிறை துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் பீதி அடைந்துள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.விசாரணை கமிஷன் அதிகாரிகள், சிறைக்கு செல்வர் என்பதை அறிந்த, சத்யநாராயண ராவ், நேற்று காலையில் திடீரென, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.
ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக, சிறையில் இருந்தார். சில ஆவணங்களை சரி செய்ததாக வும், நேற்று முன்தினம் இடிக்கப்பட்ட, சசிகலாவின் சமையல் அறை பகுதியை ஆய்வு செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.இவ்வளவு நாட்களாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சாதாரண உடை தான் அணிந்துள்ளார்.
பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சீருடைக்கு மாறும்படி, ஊழியர்கள் மூலம், டி.ஜி.பி., கூறியதாகவும், அதன் பின், சிறை சீருடையான, வெள்ளை சேலை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. டி.ஜி.பி., ராவ், சிறைக்கு வந்து, சில ஆவணங் களை சரிப்படுத்திய தகவலை அறிந்த டி.ஐ.ஜி., ரூபா நேற்று மாலை 4:00 மணியளவில், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தார்.
அங்கிருந்த சப் - இன்ஸ்பெக்டர் பாபு சங்கரிடம் சில நிமிடங்கள் பேசினார். பின், சிறைக்குள் சென்றார். சிறையில் தான் ஏற்கனவே பார்த்த ஆவணங்கள் சரியாகவுள்ளதா அல்லது மாற்ற பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். சிறைத்துறை டி.ஜி.பி., மற்றும் டி.ஐ.ஜி., ஒருவர் பின் ஒருவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தது சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சசியை சந்திக்க சென்றவர்களுக்கும் சிறையில் ராஜமரியாதை கிடைத்ததா?
பரப்பன அக்ரஹாரா சிறையில் இம்மாதம், 10ம் தேதி ரூபா ஆய்வு செய்தபோது, அவர் எடுத்த வீடியோ காட்சிகளை சிறை அதிகாரிகளிடம் வழங்கியிருந்தார்; அந்த காட்சிகளை தனக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டிருந்தார். அவர்கள் அனுப்பிய வீடியோ காட்சிகளை பார்த்தபோது, சசிகலா சம்பந்தமானசில முக்கியமான காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக சத்யநாராயண ராவ், உள்துறை முதன்மை செயலர், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஊழல் ஒழிப்பு படை ஆகியோருக்கு, நேற்று காலை, இரண்டாவது அறிக்கையை, ரூபா சமர்ப்பித்துள் ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சசிகலாவை சந்திக்க வருபவர்கள், நேரடியாக, அவர் அடைக்கப்பட்டுள்ள இடத்துக்கே அழைத்து செல்லப் படுகின்றனர். சசிகலாவை சந்திக்க வருபவர்கள் அமருவதற்கு, நான்கு நாற்காலிகள், ஒரு மேஜை போடப்பட்டிருந்தன. இந்த அறை முன் வைக்கப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.
சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுப்பது தொடர்பாக சிறை ஊழியர் ஒருவர், எனக்கு கடிதம் மூலம் புகார் அனுப்பியிருந்தார். எனக்கு எதிராக கைதிகள் போராட்டம் நடத்திய காட்சிகள், எப்படி வெளியானது; அதற்கு துணை புரிந்தவர்கள் யார்; அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. சிறை ஊழியர்களுக்கு தெரிந்தே, கைதிகள், சூதாட்டம் ஆடுகின்றனர்.இதுபோன்ற பல முக்கிய தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறைக்கு வெளியே சசி
ரூபாவுக்கு சிறை ஊழியர் எழுதிய கடிதத்தில், 'சசிகலா சிறைத்துறை உயர் அதிகாரி காரில், சிறை யில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்புக்கு மூன்று முறைக்கும் மேலாக சென்று வந்துள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிறையில் ரகளை கைதிகள் மீது தடியடி
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் டி.ஐ.ஜி., ரூபா நேற்று மாலையில் ஆய்வை முடித்து திரும்பிய பின், இரவு 7:30 மணியளவில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தும்படி கைதிகளை சிறை அதிகாரி கிருஷ்ணகுமார் துாண்டியதாகவும் தகவல் அறிந்து பரப்பனஅக்ரஹாரா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 20க்கும் மேற்பட்ட போலீசார் சிறைக்குள் சென்று கைதிகள் மீது தடியடி நடத்தி கலைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கையா அவசரமாக சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ரூபாவுக்கு ஆதரவாக சில கைதிகளும் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக சில கைதிகளும் கோஷம் எழுப்பினர். அவர்களை
சமாதானப்படுத்திய போரலிங்கையா நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவத்தால் சிறை பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டி.ஜி.பி.,க்கும் நோட்டீஸ்
பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறை கேடு குறித்து டி.ஐ.ஜி., ரூபா, டி.ஜி.பி., சத்ய நாராயண ராவுக்கு சமர்ப்பித்த அறிக்கை குறித்து மீடியாக்களில் பேசியதற்காக ரூபா வுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. தற்போது சத்யநாராயண ராவுக்கும் விளக்கம் கேட்டு கர்நாடக உள்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாரபட்சமின்றி அரசு செயல் படுகிறது என காண்பித்து கொள்வதற்காக, இது போன்று நடப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதி மீது தாக்குதல்?
சசிகலாவுக்கு சிறையில், சிறப்பு வசதி செய்து கொடுத்திருந்ததை அம்பலப்படுத்திய, டி.ஐ.ஜி., ரூபா, நேற்று மாலை, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தபோது, சிறை வளாகத்தில் இருந்த ராமமூர்த்தி என்ற கைதியின் மனைவி அனிதா, ரூபாவிடம் ஓடி வந்து, ''சிறையிலுள்ள என் கணவர், சிறை முறைகேடுகள் குறித்து உங்களுக்கு தகவல் அளித்து வந்ததாக கூறி, சிறை அதிகாரி கிருஷ்ணகுமார், தகாத வார்த்தையால் திட்டி, அவரை தாக்கியுள்ளார்,'' என்றார்.
இதற்கு ரூபா, ''நான் பார்த்துக் கொள்கிறேன்,'' எனக் கூறி, சிறைக்குள் சென்றார்.
இது தொடர்பாக, சிறைக்குள், கிருஷ்ணகுமாருக் கும், ரூபாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து, எலக்ட்ரானிக் சிட்டி பகுதி போலீசாரை அழைத்து, தன் பாதுகாப்புக்கு வரும்படி, ரூபா அழைத்தார். இதன் பின், அங்கிருந்து, ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு போலீசார் வந்தனர். வெளியே வந்த ரூபா, நேராக, பரப்பன அக்ரஹாரா போலீஸ் ஸ்டேஷ னுக்கு சென்றார். அங்கு, சிறை அதிகாரி கிருஷ்ண குமார் மீது, அவர் புகார் அளித்திருக்கலாம் என தெரிகிறது.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடந்துள்ள முறைகேடு விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கை வந்தவுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் அது பற்றியே, கருத்தை தெரிவித்து கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை.
-சித்தராமையா, கர்நாடக முதல்வர், காங்.,-

நன்றி : தினமலர் நாளிதழ் - 15.07.2017

சசியிடமிருந்து மாதந்தோறும் ரூ.10 லட்சம் மாமூல்

Image may contain: 4 people
சசியிடமிருந்து மாதந்தோறும் ரூ.10 லட்சம் மாமூல்
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவிடம் லஞ்சம் பெற்று சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, அத்துறையின் டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் மீதே புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ம.ஜ.த., கட்சியைச் சேர்ந்த, கர்நாடகா, 'மாஜி' முதல்வர் குமாரசாமி கூறியதாவது: சிறை அதிகாரிகள்டி.ஜி.பி.,க்கு மாதந்தோறும் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதில், 25 லட்சம் ரூபாய், டி.ஐ.ஜி.,க்கு செல்ல வேண்டும். இந்த பணத்தை வழங்காமல், டி.ஜி.பி.,யே பெற்றுக் கொண்டதால் தான், முறைகேடு வெளியே வந்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.
விதிமுறைகளை மீறி, மீடியாக்கள் முன் பேட்டியளித்த, சத்யநாராயண ராவ் மற்றும் ரூபா ஆகியோரை, விடுப்பில் அனுப்பி விட்டு, விசாரணை நடத்த வேண்டும். எனக்கு கிடைத்துள்ள தகவலின் படி, சசிகலாவிடமிருந்து இரண்டு கோடி ரூபாய் பெற்றுக் கொண்டது மட்டுமின்றி, மாதந் தோறும் 10 லட்சம் ரூபாய், 'மாமூல்' தரவேண்டு மென்றும் கூறியதாக தெரிய வந்துள்ளது.
நிர்வாகம் சரியில்லாததால் தான், அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி கொள்கின்றனர். மற்ற விசாரணை போன்று, இவ்விசாரணையிலும், 'பி' ரிப்போர்ட் வழங்கக் கூடாது. காங்கிரஸ் ஆட்சி முடியும் தருவாயில், ஒரு வழக்கிலாவது, உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.இவ்வாறு குமாரசாமி கூறினார்.
கர்நாடக அரசுக்கு 'சிம்ம சொப்பனம்' ரூபா
* கர்நாடக மாநிலம் தாவணகரேயைச் சேர்ந்தவர் ரூபா, 42; எஸ்.எஸ்.எல்.சி.,யில், மாநில அளவில், 20வது ரேங்க் பெற்றார். பி.ஏ., பட்டப் படிப்பில், தங்கப்பதக்கம் பெற்று மாநிலத்தில் முதலிடமும்; எம்.ஏ., முதுகலை பட்டப் படிப்பில், மூன்றாவது இடமும் பெற்றார்.

* கடந்த, 2000ல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தேசிய அளவில், 43வது இடத்தை பிடித்து, ஐ.பி.எஸ்., அதிகாரியானார்.
* ரூபாவின், 17 ஆண்டுகள் அரசு பணியில், உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், 30க்கும் மேற்பட்ட முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ஆரம்ப காலத்தில், வாடகை வீட்டில் தங்குவதற்கு கூட பணமில்லாமல் சிரமப்பட்டுள்ளார் யாத்கிரியில் பணியில் இருக்கும் போது, அரசு பள்ளியில் தன் மகளை சேர்த்து படிக்க வைத்தார் கலாசாரத்தை மதித்து, பண்டிகை யின் மகத்துவத்தை குழந்தைகளுக்கு விளக்கி கொண்டாடுவார்.
* பணியில் யார் குறுக்கிட்டாலும் அதை பொருட்படுத்தாமல் நினைத்ததை செயல்படுத்தியவர்.
* இரண்டு முறை, 'மிஸ் தாவணகரே' அழகி பட்டம் பெற்றதால், பல மொழி சினிமாக்களில் நடிக்க அழைப்பு வந்தும் அதை ஏற்க மறுத்து, மக்கள் நல பணியாற்றினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.07.2017

காமராஜர் கட்டாத அணைகள்

Image may contain: 1 person, text
காமராஜர் கட்டாத அணைகள்
ஒருவகையில் காங்கிரஸ் சாம்ராஜ்யத்தை அண்ணா வீழ்த்திய பிறகு இங்கு உருவான மாற்றங்கள் தமிழகத்தின் தனித்தன்மையை வளர்த்தெடுக்கவும் சுயமரியாதைமிக்க மாநில சுயாட்சிக்கான சகல திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் பெருமளவில் உதவியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் திமுக அதிமுகவின் சாதனைகளைவிட அவர்கள் ஆட்சியில் தமிழகம் கண்ட வேதனைகளே அதிகம்.
பறிபோன நீர்நிலைகள்
தமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் பாழ்பட்டுப்போய் தமிழகத்தின் நீராதாரம் இன்று வானளாவிய கேள்விக்குறியாக நிற்பதற்கு ஆற்றுப் புறம்போக்கு ஆக்கிரமிப்பு, ஏரிப்புறம்போக்கு ஆக்கிரமிப்பு, பாசனக் கால்வாய்கள் காணாமல் போன கதைகள், ஊர்நடுவே ஊருக்கு வெளியே இருந்த குளங்கள் குளக்கரைகள் ஆக்கிரமிக்கப்பட்ட அவலங்கள் நடந்தேறியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளில் முக்கியமானது மினரல் பாட்டில்களும் தண்ணீர் கேன்களும் தண்ணீர் லாரிகளும் எப்போது வருமென மக்கள் ஆலாய் பறப்பதுதான்.
வெள்ளம் இல்லாத காலத்தில் மண்ணில் ஈரம் கொஞ்சமேனும் இருக்க தன்போக்கில் இருக்கும் சீரான ஆற்றுப்பாதைகள் முக்கியம். ஆற்றிலும் மணல் எடுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுமதித்ததால், அதன் சதைகள் வெட்டப்பட்டு இன்று எலும்புக்கூடாகி, தமிழகத்தின் முக்கிய ஆறுகள் வறண்டு போயின.
வங்கிக் கணக்கும் இல்லாத முதல்வர்
இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பேச்சுக்கு, ''அந்த காலத்துல காமராஜர் ஆட்சியே தேவலாம்'' என்று சொல்வதுண்டு. காமராஜர் ஆட்சியில் ஊழலே இல்லையா? என்றும் கேட்லாம். உலக வரலாறு தோன்றிய நாளிலிருந்தே ஊழல் இல்லாத நிர்வாகமே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் காமராஜர் ஒரு முதலமைச்சராக இருந்தபோது தனக்கென்று ஒரு வங்கிக் கணக்குகூட வைத்துக்கொள்ளாதவர். அவர் இறக்கும்போது மிச்சம் இருந்தது சில வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்தான்.
அதன்பிறகு வந்த முதலமைச்சர்கள் மட்டும் அல்ல, சாதாரண அமைச்சர்களுக்குக்கூட ஒரு கல்லூரியாவது சொந்தமாக இருக்க வேண்டும். முதலமைச்சருக்கு உதவியாளராக இருந்தவருக்கே ரூ.350 கோடி சொத்து இருக்கிறது என்ற செய்தியை சர்வசாதாரணமாக இன்று நாம் ஜீரணித்துவிட்டுச் செல்கிறோம்.
இன்றைய காங்கிரஸ்
இதனால் காங்கிரஸ்காரர்கள் காமராஜர் ஆட்சியை தருவோம் என்று அடிக்கடி சொல்லி தமிழகத்தை ஆறுதல்படுத்துவதாக நினைத்து தங்களையே ஆறுதல்படுத்திக்கொள்வதுண்டு. 'மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்' என்ற வெடியை அவர்கள் அடிக்கடி பற்ற வைக்கிறார்கள்.
அது பல சமயங்களில் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் எதிர்க்கட்சியினர் மேடைகளிலும் ''டமால் டுமீல்'' என்று நகைச்சுவையாக வெடிக்கத்தான் செய்கிறது. ஆனால் காங்கிரசுக்கு தமிழகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச செல்வாக்கும் குறைந்துகொண்டு வருவது ஏன் என்பதையும் அதை எவ்வாறு சரி செய்வது என்பதிலும் அவர்களுக்கு கொஞ்சமேனும் சிரத்தை இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இன்று அதிமுகவிலும் நிறைய குழப்பம். எதிர்காலத்தில் திமுகவின் வெற்றி மதில்மேல் பூனை.
ஆனால் சைக்கிள் கேப்பில் பிஜேபியும் இங்கே நுழைந்து காலி இருக்கைகள் உருவாவதற்கான சாத்திய எதிர்பார்ப்புகளோடு முன்கூட்டியே துண்டு போடவும் பார்க்கிறது. அதற்காக சினிமா கவர்ச்சியையும் முன்னிறுத்த அவர்கள் தயங்க மாட்டார்கள் என்றுதான் தெரிகிறது. ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு பாஜகவின் கடந்த மூன்றாண்டுகால ஆட்சியை நினைக்கும்போது தமிழகம் பாஜகவை வரவேற்க சிவப்புக்கம்பளம் விரிக்குமா என்பது சந்தேகம்தான்.
என்னதான் இவர்கள் வளர்ச்சி! நல்லாட்சி! என்றெல்லாம் சொன்னாலும் உண்மையான வளர்ச்சியும் நல்லாட்சியும் காமராஜர் ஆட்சிதான். அவர் காலத்தில் தோன்றிய தொழிற்பேட்டைகளும், நூற்பாலைகளும், கல்விச்சாலைகளும், நீர்ப்பாசன அணைத்திட்டங்களும், இரும்பு ஆலை, சிமெண்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், ரப்பர் ஆலைகள், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் என நாட்டின் அஸ்திவாரம் போன்ற நிர்மாணப் பணிகளை இன்றுவரை முறியடிக்க எவராலும் முடியவில்லை. இந்தியாவை அல்ல உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த நாட்கள் திரும்பவும் வருமா என்றும் சொல்வதற்கில்லை.
கட்டாத அணைகள்
அவரது ஆட்சியின்போது சட்டமன்றத்தில் நடந்த ஒரு உரையாடலை அடிக்கடி அக்கால பெரியவர்கள் நினைவுகூர்வதுண்டு. சட்டப்பேரவையில் எதிர்வரிசையில் இருந்தவர்களில் டாக்டர் சத்தியவாணிமுத்து எழுந்து ''விவசாயத்திற்கு காமராஜரின் சாதனை என்ன'' என்று கேட்டாராம்.
அதற்கு காங்கிரஸ் உறுப்பினர் எச்.வி.ஹண்டே சொன்னதாக சொல்வார்கள், ''காமராஜர் தமிழக விவசாயத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக நீர்ப்பாசனங்களை ஒழுங்கு செய்ய தமிழகத்தின் முக்கிய ஆறுகளுக்கெல்லாம் அணைகளை கட்டியிருக்கிறார்.
அவர் கட்டாத அணைகள் சில உண்டு. அது கேஆர்ஆர், எஸ்எஸ்ஆர், எம்ஆர்ஆர்... ஆகிய ஆறுகளுக்கு எல்லாம்தான் அவர் அணை கட்டவில்லை'' என்று பதில் சொன்னதாக சொல்வார்கள்.
இவர்கள் மூவருமே திராவிட இயக்கங்களின் போர்வாளாக மேடைகளில் முழங்கி, காங்கிரஸை மட்டுமல்ல காமராஜரையும் கடுமையாக தாக்கி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜர் கட்டிய அணைகள்:
1. கீழ்பவானி, 2. மணிமுத்தாறு, 3. காவிரி டெல்டா, 4. ஆரணியாறு, 5. வைகை நீர்த்தேக்கம், 6. அமராவதி (அணை), 7. சாத்தனூர் (டாம்), 8. கிருஷ்ணகிரி, 9. புள்ளம்பாடி, 10. வீடூர் அணைத்தேக்கம், 11. பரம்பிக்குளம், 12. நெய்யாறு போன்றவைகளாகும்.

அதுபோல அவர் காலத்தில் தொடங்கப்பட்ட நீர் மின் திட்டங்கங்கள் 1. 26 கோடி ரூபாயில் குடிநீர்மின் திட்டம், 2. 10 கோடி ரூபாயில் பெரியாறு மின்திட்டம், 3. 8 கோடி ரூபாயில் கும்பார் – அமராவதி மின் திட்டம், 4. 12 கோடி ரூபாய் செலவில், 75,000 கிலோ வாட் மின்சார்ம் உபரியாக்க் கிடைக்க வழி செய்த மேட்டூர் கீழ்நிலை நீர் செல்வழித் திட்டம் போன்றவைகளாகும்.
டெல்லிக்கு சென்றிருக்கக் கூடாது
மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தேசிய பணியாற்ற வேண்டும் என்று காமராஜர் வேறு எதற்கோ சொன்னதை வைத்து அதையே ஒரு திட்டமாக ஆக்கிவிட்டார் நேரு. அதற்கு கே பிளான் (காமராஜர் பிளான்) என்றும் பெயர்வைத்தார். பிற மாநில தலைவர்களை டெல்லிக்கு அழைப்பதற்குமுன் முதற்கட்டமாக காமராஜரையே காங்கிரஸ் கமிட்டிக்கு தேசிய பணியாற்ற புதுடெல்லிக்கு வரவழைத்துவிட்டார்.
பின்னர் இந்திய அரசியலின் பெரும்சக்தியாக இந்திரா காந்தி உருவாக இவரே காரணமானார் என்பதும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இந்தி திணிப்பைக் கைவிடக் கோரியபோது யாரந்த அந்த காமராஜர் எனக் கேட்டதும் பிறகு வந்த வருடங்களில் இந்திரா காந்தி தனது ஆட்சியில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்ததும் அதை காமராஜர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கடுமையாக எதிர்த்தும் வரலாறு...
எது எப்படியிருந்தாலும் காமராஜர் அந்த தவற்றை செய்திருக்கக் கூடாது. எனக்கு தமிழ்நாட்டில் இனிமேல்தான் வேலை அதிகம். எனது தாய்த்தமிழகத்தில் பணியாற்றுவதைவிட்டு நான் டெல்லிக்கு வரமுடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனோ தேசிய பாசம் அவரை அப்படி சொல்லவைக்க விடவில்லை. இழப்பு தமிழகத்திற்குத்தான். அது சாதாரண இழப்பு அல்ல. அதன்பிறகு தமிழகம் அல்ல இந்தியாவே அப்படியொரு தலைவரைக் காணவில்லை.
ஜூலை 15, இன்று காமராஜர் பிறந்தநாள்!
பால்நிலவன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 15.07.2017

Friday, July 14, 2017

வங்கியில் இனி இதற்கெல்லாம் ஜிஎஸ்டி கட்டணங்கள்!

வங்கியில் இனி இதற்கெல்லாம் ஜிஎஸ்டி கட்டணங்கள்! 
தற்போது வங்கிகளில் அளிக்கப்படும் சேவைகளுக்கு 15 சதவிகித வரி வசூலிக்கப்படும் நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு 18 சதவிகிதம் அளவிலான வரியை வசூலிக்கப்போகிறது வங்கிகள்.
இந்த நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு இனி வங்கியில் எதற்கெல்லாம் ஜிஎஸ்டி கட்டணங்கள் என்பது குறித்து பாங்க் ஆஃப் இந்தியா, முன்னாள் துணை மண்டல மேலாளர் மு.எ.பிரபாகரபாபுவிடம் கேட்டதற்கு...
ஜிஎஸ்டி-யில் சரக்குகளுக்கும் சேவைகளுக்குமாக பொதுவாக 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம், 43 சதவிகிதம் என மொத்தம் ஐந்து வரி விகிதங்கள் உள்ளன. அவ்வாறு இருக்க, வங்கிச் சேவையின் மீது ஜிஎஸ்டி-யில் (9 சதவிகிதம் மத்திய ஜிஎஸ்டி-யாகவும் (CGST), 9 சதவிகிதம் மாநில ஜிஎஸ்டி-யாகவும் (SGST)) 18 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வங்கியில் இரண்டுவிதமான வருவாய்கள் உள்ளன. ஒன்று, வட்டியாக வருவது. மற்றொன்று, இதர வருவாய்கள். ஜிஎஸ்டி வரிகள், இதர வருவாய்களான கமிஷன், எக்ஸ்சேஞ்ச், கடன் ஆய்வுக்கட்டணம் போன்ற வங்கிக்கட்டணங்கள் மீது வசூலிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் எல்லாம் வங்கிக்கு வருவாய் என்பதால் இவற்றின் மீது அரசு வரி வசூலிக்கும். அந்த வரியே ஜிஎஸ்டி.
வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள்!
  • வாடிக்கையாளருக்கு எம்.ஐ.சி.ஆர் காசோலை வழங்கல்
  • இ-கணக்கு அறிக்கைகள் மற்றும் வங்கிக்கணக்குப் புத்தக நகல் வழங்கல்,
  • காசோலைக்குப் பணம் வழங்கலை நிறுத்துதல் (ஸ்டாப் பேமென்ட்) போன்றவற்றுக்கான கட்டணங்கள்
  • கணக்கு இருப்பு விசாரணை (Balance Enquiry) கட்டணம்
  • கணக்கை முடிப்பதற்கான கட்டணம்
  • இயக்காத கணக்கின் மீதான கட்டணம்
  • கேட்புக் காசோலைகள் (Demand Draft)/வங்கிக் கேட்புக் காசோலை (Bankers Pay Order) கட்டணம்
  • கேட்புக் காசோலைகள் ரத்துசெய்தல் கட்டணம்
  • கேட்புக் காசோலை நகல் வழங்கல் கட்டணம்
  • லெட்ஜர் தாள் கட்டணங்கள்.
  • வாடிக்கையாளருக்காகக் காசோலை, பில் தொகை வசூலித்தல் கட்டணம்,
  • கேட்புக் காசோலை, வெளியூர் காசோலைகள் வாங்குதல்/டிஸ்கவுன்ட் செய்தலுக்கான கட்டணம். 
  • வாடிக்கையாளரின் கேட்பு வகை பில்கள், காலக்கெடு பில்கள் போன்றவற்றை வாங்கி அல்லது தள்ளுபடி செய்து கணக்கில் பணம் வரவு வைப்பதற்கான கட்டணம் எனப் பலதரப்பட்ட சேவைகளுக்கு வங்கிகள் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும்.
இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் சார்பில் வங்கிகள் பல்வேறு சேவைகளைச் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது பணத்தை, அதே கிளைக்குள்ளேயோ, அதே வங்கிக்குள்ளேயோ, வேறு வங்கிகளுக்கோ, வெளியூர் நிறுவனங்களுக்கோ, வெளியூருக்கோ வாடிக்கையாளரின் கட்டளைப்படி பிறர் கணக்குக்கு அனுப்புதல். உதாரணமாக, ஆர்டிஜிஎஸ்/நெஃப்ட் மூலம் அல்லது ஆன்லைன் ஆர்டிஜி.எஸ் மூலம் பணம் அனுப்பும் கட்டணங்கள். நீண்டகால வைப்புத்தொகை ரசீது - நகல் வழங்கல் கட்டணம், பணமின்றி திரும்பிய காசோலையைத் திருப்பி அனுப்பும் கட்டணம், குறுஞ்செய்திக் கட்டணம், கையொப்பம் சான்றளித்தல் மற்றும் புகைப்படம் சான்றளிப்பு ஒப்பம் கட்டணம், கேட்புக் காசோலை புதுப்பித்தல் கட்டணம், வைப்புத்தொகையைப் பிற வங்கிக்குச் செலுத்தும் கட்டணம் போன்ற கட்டணங்களும் உண்டு. இவை யாவும் சேவைகள் என்பதால் இவற்றின் மீதும் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி உண்டு.
கடன் வாடிக்கையாளர்கள்!
கடன் வாடிக்கையாளர்களும் வங்கியில் பல்வேறு கட்டணங்களுக்கு உள்ளாகின்றனர். எல்லா கடன்தாரர்களுக்கும் எல்லா கட்டணங்களும் பொருந்தாது. முன்னுரிமைக் கடன், வர்த்தகக் கடன் போன்ற கடன் வகைக்கேற்ப, கடன் தொகைக்கேற்ப கட்டணங்களும், கட்டணங்களின் அளவும் மாறுபடும். கடனுக்கு விண்ணப்பிக்கையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் ஆய்வுக்கட்டணம். கடன் வேட்பு முன்மொழிவின் மீதான மதிப்பீடு (appraisal) கட்டணம், தொழில்நுட்ப, பொருளாதார நம்பகத்தன்மை சான்றறிக்கை கட்டணம், அடமான கட்டணம், தொழில்நுட்ப, பொருளாதார நம்பகத்தன்மை சான்றறிக்கை (TEV) கட்டணம், கடன் அனுமதியில் மாற்றம் செய்வதற்கான கட்டணம், கடன்தீர் ஆற்றல் சான்றிதழ் (solvency ceritificate), பழைய ஆவணங்கள் கேட்புக் கட்டணம், கடன் தொகையை முன்னதாகவே செலுத்துதற்கான கட்டணம் போன்ற கட்டணங்கள் உள்ளன.
கடன் அனுமதி பெற்று கடன் ஆவணங்கள் பூர்த்திசெய்யும் கட்டத்தில் ஆவணக் கட்டணம், ஆவண நகல்கள் வழங்களுக்கான கட்டணம், தொழிலக/சரக்கு ஆய்வு (Inspection) கட்டணம், கடன் புதுப்பித்தல் கட்டணம், வட்டிச் சான்றிதழ் கட்டணம் போன்றவை பெரும்பாலான கடன் கணக்குகளுக்குப் பொருந்தும். இவையன்றி வங்கி உத்தரவாதப் பத்திரம் (BG), கடன் உறுதி மடல் (LC) போன்ற நிதிசாரா கடன் வசதிகளும் வங்கியில் உள்ளன.
வங்கி உத்தரவாதங்கள் இரு வகைப்படும். 
செயல்பாடு சார்ந்த வங்கி உத்தரவாதப் பத்திரக் கட்டணம், நிதி சார்ந்த வங்கி உத்தரவாதப் பத்திரக் கட்டணம். கடன் ஒப்பந்த ஆவணங்கள் வழக்குரைஞர் ஆவண சரிபார்ப்பு சான்று (vetting) கட்டணம், வாடிக்கையாளர்களின் ஏற்றுமதி/இறக்குமதி ஆவணங்கள் கையாளும் கட்டணம், ஏற்றுமதி/இறக்குமதி பரிவர்த்தனைகளில் வசூலிக்கப்படும் கமிஷன் கட்டணம், வெளிநாட்டு கரன்சி விற்றல்/வாங்கலில் உள்ள கட்டணம் போன்ற கட்டணங்களும் உண்டு. வட்டிகள் தவிர்த்த இந்த அனைத்துக் கட்டணங்களின் மீதும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
வங்கியில் சில கட்டணங்கள் ஓர் ஆண்டு காலத்துக்கும் மேலான காலத்துக்கு அல்லது இரண்டு நிதியாண்டுகளுக்கும் உரியதாக வசூலிக்கப்பட்டு வங்கி நிர்வகிக்கும் தனிக்கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். உதாரணமாக, பாதுகாப்புப் பெட்டகக் கட்டணம், வங்கி உத்தரவாதப் பத்திர (BG) கட்டணம், கடன் உறுதி மடல் (LC) கட்டணம் போன்ற, முன்னதாகவே மொத்தமாகப் பெறப்பட்டு, பிற்பாடு படிப்படியாக வருவாய் (amortization) கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி வரி முன்னதாகவே மொத்தக் கட்டணத்துடன் வசூலிக்கப்பட்டு வங்கி நிர்வகிக்கும் தனிக்கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். அத்தகைய கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி-யும் வசூலிக்கப்படும். ஆனால், அவற்றுக்கு வரி ஏற்றிய விலைப்பட்டி (invoice) வழங்காமல் ரசீது மட்டுமே வழங்கப்படும்.
சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள் வழங்கும்போது, அவை முற்றிலும் இலவசமாகவோ, பகுதித் தொகை தள்ளுபடியாகவோ இருக்கக்கூடும். அந்நேரத்தில், ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு அதே சேவையை மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சேவையின் சந்தை மதிப்புக்கணக்கில் கொள்ளப்படும். அத்தகையவற்றில் சேவையின் மீதான ஜிஎஸ்டி-யை வாடிக்கையாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் முன்தொகையாக வசூலிக்கையில், (உதாரணமாக, கடனுக்கு விண்ணப்பிக்கையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் 50 சதவிகிதக் கட்டண முன்தொகை), ஜிஎஸ்டி-யும் அப்போதே வசூலிக்கப்படும். செலவினத் தொகையை வாடிக்கையாளரிடம் இருந்து பெறும்போது (உதாரணமாக, பொறியாளர் கட்டணம், வழக்குரைஞர் கட்டணம், சரக்கு இருப்புத் தணிக்கையாளர் கட்டணம் போன்றவை) வங்கியின் பெயரில் விலைப்பட்டி எழுதப்பட்ட பின்பும், அந்தத் தொகை நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து எடுக்கப்படும். அதாவது, அதை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். வாராக் கடனைப் பொறுத்தவரையில், வங்கியால் செலுத்தப்பட்ட அப்படிப்பட்ட கட்டணம் (விலைப்பட்டித் தொகை + ஜி.எஸ்.டி) வாடிக்கையாளரிடம் இருந்து கடன் தொகை வசூலிக்கும்போதே வசூல் செய்யப்படும்.
வரிவிதிப்புக்குரிய எல்லா சேவைகளின் மீதும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். வங்கியில், இழப்புக் கணக்காகக் குறிப்பிட்டு கடன்தாரர்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கணக்கில் பெறப்படும் வரவுகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வங்கி சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரிகள் தவிர்க்க முடியாதவை என்பதால், வாடிக்கையாளர் அனைவரும் அவசியம் ஜிஎஸ்டிவரியை செலுத்தவேண்டியது இருக்கும்" என்றார் மு.எ.பிரபாகரபாபு.
சோ.கார்த்திகேயன்
நன்றி : விகடன் செய்திகள் - 13.07.2017