disalbe Right click

Monday, January 1, 2018

ஊர்வலம் - ரிட் மனு

காவல்துறை தடை - ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ரிட் வழக்கு
இது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த திரு. கோவிந்தராஜ் மற்றும் நீராத்லிங்கம் ஆகியோர்களை சட்டத்திற்கு புறம்பாக காவல்துறையினர்  கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்ததாக பிரச்சினை சம்பந்தப்பட்ட ரிட் மனு  வழக்கிற்கு மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.
வழக்கின் உற்பத்தி
ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர் சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்நிலைய ஆய்வாளரிடம் தங்கள் சங்கத்தின் சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தனர்.  
அந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர், (காவல்துறை சட்டம் 42-A ன் கீழ் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி) வழக்கறிஞர் சங்கம் நடத்த அனுமதி கோரிய ஊர்வலத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும் எனக்கூறி காவல்துறை சட்டம் பிரிவு 42-A ன் கீழ் ஊர்வலம் நடத்த தடை விதித்து ஒரு உத்தரவை பிறப்பித்தார்
காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவு
அவருடைய உத்தரவுக்கு ஆதரவாக காவல்துறை துணை கண்காணிப்பாளின் 12.08.2012 ஆம் தேதியிட்ட நடவடிக்கை குறிப்புகளை உத்தரவுடன் இணைத்திருந்தார். அந்த நடவடிக்கை குறிப்பில் காவல்துறை சட்டம் பிரிவு 42 - A ன் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பிரிவு பகுதியில் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், யாரேனும் ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டம் நடத்த விரும்பினால் அதற்காக அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரிட் மனு தாக்கல்
அந்த தடை உத்தரவை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.
வழக்கை நீதியரசர் திரு. K. சந்துரு அவர்கள் விசாரித்தார்.
காவல் ஆய்வாளர் உத்தரவில் காவல்துறை சட்டம் பிரிவு 42 - A என குறிப்பிட்டிருந்தது தவறானதாகும் என்றார். காவல்துறை சட்டத்தில் 42-A என்ற சட்டப்பிரிவு ஏதுமில்லை. ஆனால் 42-A என்ற சட்டப்பிரிவு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்தில் (Tamilnadu District Police Act, 1859) உள்ளது. அந்தப் பிரிவின்படி காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) என்கிற பதவிக்கு குறையாத பதவி வகிப்பவர் பொது அமைதி கருதி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காவல் அதிகாரிகளை ஒரு கூட்டம் அல்லது ஊர்வலம் ஆகியவை பொது இடங்களில் நடக்கும் பொழுது அந்த கூட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கை தயார் செய்யும்படி எழுத்து மூலமாக உத்தரவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் சட்டத்தில் மேற்சொன்னவாறு கூறப்பட்டுள்ள நிலையில் காவல்துறை சட்டம் பிரிவு 42-A ன் கீழ் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆய்வாளர் ஆகியோர்களுக்கு ஒரு ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டம் ஆகியவற்றை தடை செய்வதற்கு எப்படி அதிகாரம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
வழக்கறிஞர் சங்கம் சார்பில்
வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொது மக்களிடத்தில் எடுத்துச் சொல்வது இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்று கூறி அதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் "S. ரங்கராஜன் Vs P. ஜெகஜீவன்ராம் (1989-2-SCC-574)" மற்றும் "CJ. ரீஜன் Vs காவல்துறை துணை கண்காணிப்பாளர் (2008-3-MLJ-926)" ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.
காவல்துறை கண்காணிப்பாளரின்  பிரமாண வாக்குமூலம்
காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு பிரமாண வாக்குமூலத்தை எதிருரையாக தாக்கல் செய்தார். அந்த எதிருரையில் காவல் ஆய்வாளர், துணை கண்காணிப்பாளரின் உத்தரவைதான் செயல்படுத்தியுள்ளார் என்றும் காவல்துறை அதிகாரிகள் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர் சங்கம் கூறியுள்ளதாகவும் கூறி உச்சநீதிமன்றம் " D. K. பாசு Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-1997-SC-610)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட நெறிமுறைகளை காவல்துறை பின்பற்றியுள்ளதாகவும் கூறியிருந்தார்
மேலும் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நகரில் பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததாகவும், வழக்கறிஞர்கள் மீது காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கினால் வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறியிருந்தார்
மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19(1) ன்படி வழங்கப்பட்டுள்ள கருத்துக்களை வெளியிடும் சுதந்திரமானது சில நியாயமான வரைமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும், இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 14 அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கூறுவதாகவும் கூறியிருந்தார்
மேலும் வழக்கறிஞர்கள் தற்போது வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார். மேலும் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பதாகவும், இந்த சூழ்நிலையில் அனுமதி வழங்க முடியாது என்றும் பொதுமக்களும் வழக்கறிஞர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராக இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கினால் வன்முறை வெடிக்கும் என்றும் கூறியிருந்தார்.
காவல்துறை சட்டம் பிரிவு 42-A ன் படி காவல்துறை அதிகாரி ஒரு காவல் அலுவலரை பொதுக்கூட்டம் அல்லது போராட்டம் நடக்கும் இடத்திற்கு அனுப்பி அங்கு நடைபெறுவதை பதிவு செய்யலாம் என்று கூறுகிறது. பிரிவு 30(2) பொதுச்சாலைகளில் நடைபெறும் ஊர்வலங்கள், கூட்டங்கள் ஆகியவற்றை பற்றி கூறுகிறது.
இது போன்ற ஒரு சூழ்நிலையில் எழுந்த ஒரு வழக்கில் காவல்துறை ஆணையருக்கு மெட்ராஸ் நகர காவல்துறை சட்டம் (City Police Act) பிரிவு 41 ன் கீழ் உள்ள அதிகாரங்களை "நெடுமாறன் Vs தமிழக அரசு (1999-1-LW-CRL-73)" என்ற வழக்கில் இந்நீதிமன்றம் குடிமக்களுக்குள்ள உரிமைகள் பற்றியும் அந்த உரிமைகளை செயல்படுத்துவதை நியாயமான முறையில் கட்டுப்படுத்துவது பற்றியும் விரிவாக கூறியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19 
இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19 ல் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மிகவும் மதிப்பு வாய்ந்த உரிமைகளாகும். அந்த உரிமைகளை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் ஆளுகிறவரின் விருப்பத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவாகவும் இருக்கக்கூடாது
ஜனநாயகம் வலுவாகவும் உயிரோட்டத்துடனும் இருப்பதற்கு ஒவ்வொருவருடைய கருத்துக்களையும், அக்கருத்துகள் குறித்த விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் எந்த தடையும் இல்லாமல் நடைபெற வேண்டும். எதிர் தரப்பினரால் வெளியிடப்படும் அனைத்து கருத்துக்களும் நாட்டின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் எதிராகிவிடும் என கண்ணை மூடிக் கொண்டு ஆட்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது.
காவல்துறை ஆணையர் மெட்ராஸ் நகர காவல் சட்டம் பிரிவு 41 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் பயன்படுத்த வேண்டும். அந்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு இயற்றப்பட்டதாகும்.அந்த காலகட்டத்தில் போராட்டங்களை அடக்குவதென்பது கொள்கையாக இருந்தது. ஆனால் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு முன்பு போல் காவல்துறை சட்டத்தை பயன்படுத்த முடியாது.
காவல்துறையினருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக அவர்கள் நினைக்கிறபடியெல்லாம் ஆட முடியாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் அதிகாரங்களைப் காவல்துறையினர் பயன்படுத்த வேண்டும். அடிப்படை உரிமைகள் மீது காவல்துறையினரால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நியாயமானதாக இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் "ஹிமாட்லால் கோ Vs காவல் ஆணையர், அகமதாபாத் (AIR-1973-SC-87)" என்ற வழக்கில் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19 ல் கூறப்பட்டுள்ள 'சுதந்திரமாக கூடுதல்' என்கிற உரிமைக்கு எதிராக இருக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் தடை செய்யலாம்! என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதேபோல் " S. ரங்கராஜன் Vs P. ஜெகஜீவன்ராம் (1989-2-SCC-574)" என்ற வழக்கிலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19 பற்றி விரிவாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
குறைகளை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு செல்வது அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை எந்த காரணமும் இல்லாமல் காவல்துறையினர் தடை செய்ய முடியாது
அப்படி தடை விதிப்பது சட்ட விரோதமாக கருதப்படும் என கூறி வழக்கறிஞர் சங்கம் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
W. P. NO - 11282/2012
Srivilliputhur Advocate Bar Association, Reb by the Secretary, P. Rasaiya
                                                         Vs
1.தமிழ்நாடு அரசிற்காக அதன் செயலாளர் 
2. மாவட்ட ஆட்சியர், விருதுநகர் மாவட்டம் 
3. காவல் கண்காணிப்பாளர், விருதுநகர் மாவட்டம்
2012-2-LW-CRL-509
நன்றி : முகநூல் நண்பர் வழக்கறிஞர் Dhanesh Balamurugan அவர்கள் 

Sunday, December 31, 2017

பதிவு துறையில், 'சமாதான் திட்டம்' அறிவிப்பு

பதிவு துறையில், 'சமாதான் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்: ஐந்து லட்சம் பத்திரங்களுக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவுத்துறையினுடைய வழிகாட்டி மதிப்பு குளறுபடியால்ஐந்து லட்சம் பத்திரங்கங்களுக்கு மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வு காண, ஜன., 3ல், 'சமாதான் திட்டம்' நடைமுறைக்கு வர இருக்கிறது.
பொதுவாக சொத்து பரிமாற்ற பத்திரங்களை, அந்தந்த பகுதிகளுக்குரிய வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் நாம் பதிவு செய்ய வேண்டும். அந்த வழிகாட்டு மதிப்பீட்டின்படியேமுத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவை   முடிவு  செய்யப்படுகின்றனஆனால், அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பை விட, குறைந்த மதிப்புக்கு, சிலர் பத்திரங்களை வாங்கி பதிவு செய்வதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.  எனவே, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட குறைந்த மதிப்புக்கு உரிய காரணத்தை உறுதி செய்ய, பதிவு சட்டம், 47 - மற்றும், 19 - பி ஆகிய பிரிவுகளின் படி, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்படும். இவ்வாறு அனுப்பப்படுகின்ற பத்திரங்கள், நீண்ட காலமாக நிலுவையில் போடப்படுவதால், சொத்து வாங்கியோருக்கு, பத்திரம் கிடைக்காமல் போனது. இது போன்று நிலுவையில் உள்ள பத்திரங்கள் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.  இதனால் பதிவுத்துறைக்கும், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
சமாதான் திட்டம்
மதிப்பு வேறுபாடு காரணமாக, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையில் நிலுவையில் உள்ள பத்திரங்களுக்கு தீர்வு காண, பதிவுத்துறை, 'சமாதான்' திட்டத்தை அறிவித்துள்ளது.
மாநில பதிவுத்துறைத் தலைவர், குமரகுருபரன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
💥முத்திரைத்தாள் பிரிவுக்கான, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு, 2017 ஜூன், 8 நிலவரப்படி நிலுவையில் உள்ள பத்திரங்கள், சமாதான் திட்டத்துக்கு தகுதி  பெறும்
💥  கூடுதல் பதிவு கட்டணமாக  முத்திரை தீர்வையில், மூன்றில் இரண்டு பங்கு தொகையை  சம்பந்தப்பட்ட  பத்திரத்திற்கு உரிமையாளர்கள்  செலுத்தினால் போதும்
💥   இத்திட்டம், ஜன., 3ல் துவங்கி, ஏப்., 2 வரை,  தொடர்ந்து மூன்று மாதங்கள் அமலில் இருக்கும்.
💥 இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு பொதுமக்கள், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்களை நேரடியாக அணுக வேண்டும். சந்தேகம் ஏதேனும் இருந்தால், மாவட்ட பதிவாளர்கள், பதிவுத்துறை, டி..ஜி.,க்கள், பதிவுத்துறை தலைவர் ஆகியோர்களின் அலுவலகத்தை அணுகலாம்இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.01.2018 

பெண் கல்வி உதவித்தொகை

Universal Grants Commission என்று சொல்லப்படக்கூடிய பல்கலைக்கழக மானியக்குழு உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அவற்றில்

பெண் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு, யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு  இந்த ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பெறுவதற்கான தகுதி என்ன?
மத்திய, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி,  பல்கலைக் கழக மானியக்குழு, 2005 --- 06ம் ஆண்டு முதல், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாக இருந்து, முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு, இந்திரா காந்தி கல்வி உதவித் தொகையினை  வழங்கி வருகிறது.
இந்தத்திட்டத்தில், தகுதியுள்ள மாணவிகள் மாதம், 3,100 ரூபாய் வீதம், 20 மாதங்கள் தொடர்ச்சியாக உதவித்தொகை பெறலாம்தொலைதுாரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவிகளுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படாது. தொழிற்கல்வி அல்லாத படிப்பில் சேரும் மாணவியரே இதற்கு தகுதியானவர்கள். வரும்31.01.2018  தேதிக்குள், ’ஆன் - லைன்மூலமாக  விண்ணப்பங்கள் உரிய ஆவண நகல்களுடன் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இம்மாத இறுதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இம்மாதம் இறுதி (31.01.2018) வரை மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்குண்டான விபரங்களைக் காண www.ugc.ac.in என்ற இணையதளம் செல்லவும்.
************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.01.2018