disalbe Right click

Wednesday, February 21, 2018

காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கு விசாரணை தினத்தன்று வேறு பணி கூடாது! 
உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டிய போலீஸ் அதிகாரிகளுக்கு அன்றைய தேதிகளில் வேறு பணிகளுக்கு அனுப்பக் கூடாது! என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமர்வு நீதிமன்றத்தில்.....
சென்னை உயர் நீதிமன்றத்தில் 20.02.2018 அன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு ஆட்கொணர்வு மனுக்களை விசாரித்தது.  மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாயமான வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி அன்றைய தினம்  ஆஜராகவில்லை. அவர் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பணிக்குச் சென்றிருப்பதாக அரசு தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். இதே போல வேறொரு ஆட்கொணர்வு வழக்கிலும் ஆஜராக வேண்டிய விசாரணை அதிகாரி ஆஜராகவில்லை. அந்த வழக்கிலும் பாதுகாப்பு பணிக்குச் சென்று விட்டதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது
கோபமடைந்த நீதிபதிகள்
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், 'உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் ஆட்கொணர்வு மனுக்கள் உள்ளிட்ட வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டிய போலீஸ் அதிகாரிகளை விசாரணை நாள்களில் எக்காரணம் கொண்டும் வேறு பணிகளுக்கு அனுப்பக்கூடாது. விசாரணை தேதிகளில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்
எதிர்காலத்திலும் இந்த உத்தரவு பொருந்தும்.
இந்த உத்தரவு இப்போதுள்ள காவல்துறை இயக்குநருக்கு மட்டுமல்ல, வரும் காலங்களில் பணிபுரிய இருக்கின்ற காவல்துறை இயக்குநர்களுக்கும் இந்த உத்தரவு  பொருந்தும். இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த உத்தரவை டிஜிபி அறிவுறுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 22.02.2018 

காசோலை வழக்கு - காலவரையறை

ஒரு காசோலையினை அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் இருந்து 90 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்றும், அப்படி பயன்படுத்தவில்லை என்றால், அந்தக் காசோலை செல்லாது என்று (Banking Regulations Act), சட்டம் சொல்கிறது. ஆனால், 90 நாட்களுக்குப் பின் பயன்படுத்தப்பட்ட காசோலை பற்றிய வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு சற்று மாறுபடுகிறது. அது என்ன என்று  பார்க்கலாம் வாருங்கள்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.02.2018 

கலிமுல்லா என்பவர் ரூ 4 லட்சத்தை இராஜசேகர்மூர்த்தி என்பவரிடம் கடனாக பெற்றிருந்தார். அந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக ஒரு காசோலையை 13.5.2015 ஆம் தேதியிட்டு இராஜசேகர்மூர்த்திக்கு கொடுத்திருந்தார்
அந்த காசோலையை இராஜசேகர்மூர்த்தி பணம் பெறுவதற்காக அவருடைய வங்கி கணக்கில் 13.8.2015 ஆம் தேதி தாக்கல் செய்தார். ஆனால் கலிமுல்லாவின் வங்கி கணக்கு முடிக்கப்பட்டு விட்டதாக திருப்பப்பட்டு விட்டது
அதனால், காசோலைக்குறிய தொகையை கேட்டு இராஜசேகர்மூர்த்தி கலிமுல்லாவுக்கு அறிவிப்பு அனுப்பினார். அதன்பிறகும் கலிமுல்லா பணம் தராததால் இராஜசேகர்மூர்த்தி ஒரு காசோலை மோசடி வழக்கை கலிமுல்லா மீது தாக்கல் செய்தார்.
வழக்கில் ஆஜரான கலிமுல்லா காசோலையை நான் 13.5.2015 ஆம் தேதியிட்டு கொடுத்துள்ளேன். ஆனால் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (Banking Regulations Act), ஒழுங்குமுறை எண். 35A ல் கூறப்பட்டுள்ளதற்கு முரணான வகையில் 90 நாட்களுக்கு பின்னர் 13.8.2015 ஆம் தேதி அந்த காசோலை பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி ஒரு மெமோ தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட விசாரணை நீதிமன்றம், " எக்கான் ஆன்ரி லிட் Vs ரோம் இன்டஸ்ட்ரீஸ் லிட் (2013-3-DCR-417) (AIR-2013-SC-3283)" என்ற வழக்கில்  உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டி, வழக்கு காசோலையானது மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138ல் கூறப்பட்டுள்ள காலவரையறைக்குள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறி கலிமுல்லா தாக்கல் செய்த மெமோவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவை எதிர்த்து கலிமுல்லா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. ஜான் மைக்கேல் குன்ஹா விசாரித்தார்.
காசோலை கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்த வேண்டும் என்று மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138(a) ல் கூறப்பட்டுள்ளது. ஆனால் மேலே சொல்லப்பட்ட தீர்ப்பில் உச்சநீதிமன்றம், புகார் தாக்கல் செய்வதற்கான வழக்கு மூலம் ஏற்பட்ட நாளினை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் 30 நாட்கள் காலவரையறையை கணக்கிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே ஒரு காசோலை குறித்த காலவரையறையை கணக்கிடும் போது வழக்கு மூலம் ஏற்பட்ட நாளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் காலவரையறையை கணக்கிட வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Criminal Petition No - 1979/2016 dt- 17.3.2017
கலிமுல்லா Vs இராஜசேகர்மூர்த்தி 2017-ACD-468

நன்றி : முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான திரு Dhanesh Balamurugan 

பட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்?

ஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு  இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது பல வாரிசுகளுக்குச் சொந்தமாகும். அவர்கள் அந்த நிலத்தை பங்கு போடும்போது தங்களுடைய பங்கை, அவர்களுடைய  பெயருக்கு பட்டா மாற்றினால்தான் நல்லது. இல்லையென்றால், அவர்களுக்குப் பின் வருகின்ற வாரிசுதாரர்களுக்கு அது சிக்கலையும், வீண் அலைச்சலையும் ஏற்படுத்திவிடும். 
என்ன செய்ய வேண்டும்?
ஒரே பட்டாவாக உள்ள நிலத்தை அளந்து சப்டிவிஷன் செய்ய முதலில் கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் நாம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வேயரை அழைத்து வந்து உடன் இருந்து அந்த நிலத்தை முதலில் அளப்பார். நமக்குரிய பங்கையும் தனியாக அளந்து கல் ஊன்றுவார்கள். அதனையே நாம் நான்குமாலாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அதன்பிறகு, வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நமக்குரிய நிலத்திற்கு பட்டா எண் தனியாக வழங்குவார்கள்.  அதில் பழைய பட்டா எண்ணைக் குறிப்பிட்டு உட்பிரிவு எண்ணும் குறிக்கப்பட்டு இருக்கும்.
வட்டாட்சியர் அலுவலக நடவடிக்கை
இது போன்று உட்பிரிவு செய்து ஒருவருக்கு பட்டா வழங்கும்போது, அந்த கூட்டுப்பட்டாவில் உள்ள மற்ற பங்குதாரர்களுக்கும், சர்வேயர் அவர்கள் தலையாரி மூலம் கடிதம் கொடுத்தனுப்பி அழைப்பு அனுப்புவார்கள். கடிதத்தை மற்ற பங்குதாரர்கள் பெற்றுக் கொண்டதற்கான கையெழுத்தையும் ஒரு ஆவணத்தில் பெற்றுக் கொள்வார்கள். மற்ற பங்குதாரர்களுக்கு இதில் ஆட்சேபனை இருந்தால், அதனை நிலத்தை  அளந்து சப்டிவிஷன் செய்வதற்கு முன் எழுத்து மூலமாக சர்வேயர்  அவர்களிடம் நாம் தெரிவிக்க வேண்டும்.  அவர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார்.  அதன்பிறகே நிலத்தை அளந்து சப்டிவிஷன் செய்வார். 
தன்னிச்சையாக சப்டிவிஷன் செய்தால்....?
மேற்கண்டவாறு மற்ற பங்குதாரர்களுக்கு அழைப்பு அனுப்பாமல், சர்வேயர் தன்னிச்சையாக சப்டிவிஷன் செய்தால் அது செல்லாது. அதற்கு ஆதாரமாக கீழே வருவாய் கோட்டாசியர் அவர்களின் உத்தரவு நகல் இணைக்கப்பட்டுள்ளது.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 21.02.2018 
குறிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவண உதவி “ ஆவணக் காப்பகர்”  A Govindaraj Tirupur 


Image may contain: text
Image may contain: text


இந்த ஆவணத்தில் நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் 2002 என்று வருடம் தவறாக அச்சிடப்பட்டுளது. அதனை 2007 என்று திருத்தி வாசித்துக் கொள்ளவும். நன்றி!

Saturday, February 17, 2018

ஐ.டி.ஐ. சான்றிதழில் திருத்தம்

ஐடிஐ சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம் 
என்று வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு அறிவித்துள்ளது.
கடந்த 2014 ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஐடிஐ படித்த மானவர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ்களில் தவறு இருந்தால் அதில் திருத்தம் செய்து கொள்ள தங்களை அணுகலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு 
வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை  ஐடிஐ-யில் சேர்ந்து படித்தவர்களுக்கு சேர்க்கையின்போது வழங்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசால் தேர்வு நுழைவுச்சீட்டுகள், மதிப்பெண் சான்றிதழ்கள், தேசிய தொழிற்சான்றிதழ்கள் (National Trade Certificate) ஆகியவை ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் பயிற்சி பெற்ற மாணவர்களின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அப்பிழைகளை சரிசெய்ய இயலாத நிலை முன்பு இருந்து வந்தது.
பிழைகளை சரிசெய்ய வாய்ப்பு
அந்த பிழைகளைச் சரிசெய்ய மத்திய அரசு தற்போது வாய்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயிற்சியாளர்கள் பயன்படுத்தி தங்கள் அசல் சான்றிதழ்களுடன் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அலுவலகத்துக்கு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் நேரில் சென்று தங்களுடைய பள்ளி கல்விச் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களைக் காண்பித்து திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

1. மண்டல பயிற்சி இணை இயக்குநர்
அரசு ஐடிஐ மாணவர் விடுதி
அழகர்கோயில் மெயின் ரோடு
மதுரை-625007

2. மண்டல பயிற்சி இணை இயக்குநர்
என்ஜிஓபிகாலனி, பெருமாள்புரம்
திருநெல்வேலி 627 007.

3. மண்டல பயிற்சி இணை இயக்குநர்
அரசு ஐடிஐ பின்புறம்
ஜி.என்.மில்ஸ் அஞ்சல்
கோவை 641 029.
4. மண்டல பயிற்சி இணை இயக்குநர்
அரசு ஐடிஐ அடுக்குமாடி கட்டிடம் (முதல் மாடி), 
காஜாமலை
திருச்சி 620 020.

5. மண்டல பயிற்சி இணை இயக்குநர்
அரசு ஐடிஐ பின்புறம்
கிண்டி
சென்னை 600 032.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.02.2018