disalbe Right click

Wednesday, September 19, 2018

குற்றவியல் நடைமுறை முக்கிய விதிகள்


குற்றவியல் நடைமுறை விதிகள் என்பது குற்றவியல் சட்டங்களில் மிக முக்கியமானதாகும்.

இந்த சட்டத்தில் குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பு, நீதிமன்றங்கள் செயல்படும் நேரம், சாட்சிகள் பற்றிய விவரங்கள், அழைப்பாணை சார்வு செய்யப்படும் முறை, காவல்துறையினர் புலனாய்வு, வழக்கு தொடுக்கும் முறை போன்றவற்றுக்கான நடைமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது.
முக்கியமான சில விதிகளை பற்றி மட்டுமே இங்கு கூறப்பட்டுள்ளது.
விதி - 2 - சாதாரணமாக நீதிமன்ற அமரும் நேரம் காலை 10.30 முதல் மாலை 5.30 மணி ஆகும். மதிய உணவு இடைவேளை என்பது மதியம் 1.15 முதல் 2 மணி வரை ஆகும்.
நீதிமன்ற பணி அதிகமாக இருந்ததால் காலை 10 மணிக்கு நீதிமன்றத்தை தொடங்கி அவசியப்படும் நேரம் வரை வழக்கை ஒரு நீதிமன்றம் நடத்தலாம். எனினும் காலை 7.30 க்கு முன்னர் தொடங்கக்கூடாது.
விதி - 3 - ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்ற பணி செய்யக்கூடாது என்று இந்த விதி கூறினாலும், எதிரியை ஞாயிற்றுக்கிழமையில் விடுதலை செய்யக்கூடாது என்றோ, காவலிலிருந்து விடுவிக்கக்கூடாது என்றோ பொருளல்ல.
விதி - 4 - நீதிபதியின் வீட்டில் வைத்து வழக்கு விசாரணை செய்யப்படக்கூடாது. திறந்த நீதிமன்றத்தில் தான் செய்ய வேண்டும். இது குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 327 ல் கூறப்பட்டுள்ளது.
விதி - 6 - சாட்சிகளுக்கு அனுப்பப்படும் அழைப்பாணைகளில் சாதாரணமாக தலைமை கிளார்க் கையோப்பமிட வேண்டும். அந்த கையெழுத்துக்கு முன்பு "நீதிமன்ற ஆணைப்படி" என்ற சொற்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
விதி - 7 - எதிரிகளுக்கு அனுப்பப்படும் அழைப்பாணைகளில் நீதிபதி கையெழுத்து போட வேண்டும். எழுத்து மூலமாக தொடுக்கப்பட்ட வழக்கில், புகார் மனுவின் நகலை முடிந்த வரையில் எதிரிக்கு விரைவாக கொடுக்க வேண்டும். எதிரி நீதிமன்றத்தில் முன்னிலையாகிய முதல் கேட்பு நாளுக்கு பின்னர் கொடுக்கக் கூடாது.
எதிரிக்கு எதிராக காவல்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் காவல்துறையினர் எதிரியை கைது செய்ய அதிகாரமில்லை என்பது போன்ற வழக்குகளில் நீதிமன்றம் எதிரிக்கு அழைப்பாணையை அனுப்பி வைத்து எதிரியை குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் முன்னியாகும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் படி தாக்கல் செய்யப்படும் வழக்குகள், இரண்டாவது திருமணம் தொடர்பான வழக்குகள், தனிநபர் புகார்கள் ஆகியவற்றில் எதிரிக்கு பதிவுத் தபாலில் அழைப்பாணையை அனுப்பி வைக்க வேண்டும். எதிரிகள் அழைப்பாணையை பெற்றுக் கொண்டு நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்க வேண்டும்.
தனிநபர் புகார் வழக்கில் எதிரிகள் சார்பில் முன்னிலையாகும் வழக்கறிஞர்கள் தோன்றல் குறிப்பு (Memo Appearance) தாக்கல் செய்ய வேண்டும். புகார்தாரர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும்.
தனது வழக்கை தாமே நடத்துபவர்கள் தோன்றல் குறிப்போ, வக்காலத்தோ தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
விதி- 8 - ஒவ்வொரு அழைப்பாணையிலும் வழக்கு விசாரணை நடைபெறும் இடத்தையும், நாளையும் குறிப்பிட வேண்டும்.
விதி - 9 - குற்றவியல் நீதிமன்றங்களால் அனுப்பப்படும் அனைத்து அழைப்பாணைகளும் வட்டார மொழியில் இருக்க வேண்டும். பல நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்படும் போது பன்மைச் சொற்களில் அவர்களை குறிப்பிட வேண்டும்.
விதி-10 - பிடிகட்டளை எந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படுகிறதோ அந்த நீதிமன்றத்தின் நீதிபதி அல்லது நடுவரின் கையொப்பம் அந்த பிடிகட்டளையில் இருக்க வேண்டும்.
விதி - 11 - மருத்துவ சாட்சிகளுக்கு எப்படி அழைப்பாணையை அனுப்ப வேண்டும் என்று கூறுகிறது. மருத்துவர்களுக்கு அழைப்பாணையை நேரில் சார்வு செய்ய வேண்டும். இந்த தகவலை மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். மருத்துவர் இல்லையென்றால் மாவட்ட மருத்துவ அதிகாரி மூலமாக சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு அழைப்பாணையை சார்வு செய்ய வேண்டும். நீதிபதி மருத்துவர்களுக்கு அழைப்பாணையை அனுப்புவதற்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு மருத்துவரின் வசதியான தேதியை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விதி - 12 - சார்வு செய்யும் முறை - அழைப்பாணையை சார்வு செய்யும் அலுவலர் அதன் நகலை எதிரியிடமோ அல்லது அவரது முகவரிடமோ கொடுத்துவிட்டு, சார்வு செய்யப்பட்டதற்கு அடையாளமாக அழைப்பாணையில் அவரின் கையெழுத்தை பெற வேண்டும்.
விதி - 21 - புறங்காவல் நிலையங்களின் பொறுப்பில் இருக்கும் தலைமை காவலர்கள் குற்ற விசாரணையை நடத்த அதிகாரம் உள்ளவர்கள் ஆவார்கள்.
காவல் நிலையத்தில் உள்ள தலைமை காவலர் குற்றவியல் வழக்குகள் சிலவற்றில் புலன்விசாரணையை மேற்கொள்ளும் வகையில் சம்பவ இடத்திற்கு செல்லவும், வரைபடங்களை தயாரிக்கவும் செய்யலாம். ஆனால் அவர் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியாது. காவல் உதவி ஆய்வாளர் தான் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் நீதிமன்றத்தில் புலன்விசாரணை அதிகாரி என்ற முறையில் தலைமை காவலர் முன்னிலையாகி சாட்சியம் அளிக்க வேண்டும். குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததற்காக காவல் உதவி ஆய்வாளர் சாட்சியம் அளிக்க வேண்டும்.
விதி - 22 - நீதிமன்ற அனுமதி பெற்று கைது செய்ய வேண்டிய வழக்குகளில் (Non Cognizable) குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 155 மற்றும் 202 ன் கீழ் காவல்துறையினர் புலன்விசாரணை செய்திட வேண்டும் என உத்திரவிடுவதற்கு சென்னை நகர காவல் சட்டம் பிரிவு 7 ன் கீழ் காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது
விதி - 23 - அரசு ஊழியர்களுக்கு எதிராக காவல்துறையினர் குற்ற வழக்கு தொடுப்பதற்கு முன்னர் அந்த விவரத்தை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விதி மாவட்ட காவல் சட்டம் 24/1859 ன் கீழ் துணைநிலை காவல் அலுவலர்களுக்கு (Police Subordinates) எதிராக தொடுக்கப்படும் வழக்குகளுக்கு பொருந்தாது.
விதி - 25 - மாவட்ட நடுவர் அல்லது உட்கோட்ட நடுவர் அல்லாத நடுவர் ஒருவர், எதிரி ஒருவரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 167 ன் கீழ் காவல்நிலைய காவல் வைப்புக்கு அனுப்பினால், அவ்வாறு அனுப்பப்பட்டதற்கான காரணங்களை பதிவு செய்து பிறப்பித்த உத்தரவின் நகலை 24 மணி நேரத்திற்குள், அந்த நடுவர் யாருக்கு கீழ்நிலையில் உள்ளாரோ அந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விதி - 26 - எதிரி ஒருவர் காவலில் வைக்கப்படும் நாட்களான 15 நாட்களை கணக்கிடும் போது, எதிரியை காவலில் வைக்க உத்தரவிடும் நாளையும் மற்றும் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடும் நாட்களையும் சேர்த்து கணக்கிட வேண்டும்.
விதி - 27 - காவல் வைப்பு விவரத்தை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
விதி - 58 - ஒரு சாட்சியை நிற்க செய்வதோ அல்லது உட்காருவதற்கு அனுமதிப்பதோ முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு உட்பட்டதாகும்.
விதி - 67 - ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போதும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டால் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும். சாட்சி வராததை காரணம் காட்டி ஒத்தி வைக்கலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 ல் கூறப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் வழக்கை ஒத்தி வைக்கலாம். வழக்கறிஞர் கேட்கிறார் என்பதற்காக ஒரு வழக்கை ஒத்தி வைக்கக்கூடாது.
நன்றி : எனது நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan அவர்களுக்கு

**************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 19.09.2018 

Tuesday, September 18, 2018

தேசிய தகுதித் தேர்வு - 2018

தேசிய தகுதித் தேர்வு - 2018
முதல்முறையாக ஆன்லைனில் உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு!
நெட்” (National Eligibility Test) எனப்படும் உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு முதல்முறையாக இந்த ஆண்டு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு 30.09.2018-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என (University Grants Commission) தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நமது நாட்டிலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணிபுரிய நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மாநில அளவில் நடைபெறும் ஸ்லெட் தேர்வில் (State Eligibility Test) தேர்ச்சி பெற்றால் மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும்.
கடந்த 2017-ம் ஆண்டு வரை நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் சிபிஎஸ்இ (Central Board of Secondary Education) அமைப்பு நடத்தி வந்தது.
மாற்றம்
இந்த ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை ( National Examination Agency ) எனப்படும் புதிய அமைப்பு நெட் உட்பட ஜெஇஇ, நீட் என தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்த உள்ளது. அதுமட்டுமல்லாமல் நெட் தேர்வானது முதல்முறையாக ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுகிறது
தேர்வு நடைபெறும் நாட்கள்
முதல் நெட் தேர்வு 09.12.2018-ம் தேதி முதல் 23.12.2018-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது..
தேவையான கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண்கள்
இந்தத்தேர்வுக்கு கலை அறிவியல் படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம் இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி வகுப்பினர், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் எனில் 50 சதவீத மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது. இந்த ஆண்டில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர் ஆவர்.
வயது வரம்பு
தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை. இருந்தபோதிலும், ஜெஆர்எப் எனப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதிக்கு மட்டும் வயது வரம்பு 30 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தில் மாற்றம் உண்டா?
புதிய அமைப்பு தேர்வை நடத்தினாலும் தேர்வுமுறையிலோ, இருக்கின்ற பாடத்திட்டத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை.
இணையதள முகவரி
தகுதியுள் ளவர்கள் www.ntanet.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி 30.09.2018-ம் தேதிக் குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் எண் கட்டாயமில்லை
இந்த நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
*******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.09.2018

Thursday, September 6, 2018

வருவாய்த்துறை அதிகாரி மீது வழக்கு


வருவாய்த்துறை அதிகாரி மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
உங்கள் நிலத்தைத் தவறாக இன்னொருவர் பெயருக்கு வருவாய்த்துறை மாற்றம் செய்திருந்து, அதனை நீங்கள் பழையடி உங்கள் பெயருக்கே வைக்க அதனிடம் விண்ணப்பித்திருந்து, அது உங்களுக்கு சேவை அளிக்காவிடில், நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சேவையும், இழப்பீடும் கோரலாம்.
ஆதாரம்: பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு. வழக்கு எண்: 39/2015 தீர்ப்பு நாள்: 19/10/201

நுகர்வோர் நீதிமன்ற ஆணை நகல்







நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்களுக்கு.



தாசில்தாருக்கு தண்டணை

தாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம்
அரியலூர்: நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை அலைகழித்த தாசில்தாருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து அரியலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 47. விவசாயியான இவர், கீழப்பழூவூர் கிராமத்தில் வாங்கி உள்ள நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்கக்கோரி, 2014 ஆகஸ்ட், 21ல் அரியலூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தார்.
ஆனால், இவரது விண்ணப்பத்தின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், பாலசுப்ரமணி பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு செலவுக்காக, 2,000 ரூபாய் பாலசுப்ரமணிக்கு வழங்கவும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அரியலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டது. இதன் பின்னரும், நடவடிக்கை இல்லை. இதை அடுத்து, மீண்டும் பாலசுப்ரமணி அரியலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நுகர்வோர் நீதிமன்ற குறைதீர்ப்பு மன்ற தலைவர், ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார்.அதில், 2014 2015ல் பணியில் இருந்த, அரியலூர் தாசில்தார் வைத்திஸ்வரனுக்கு, மூன்று மாதம் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.07.2017
வழக்கு சம்பந்தமாக நீதிமன்றம் பிறப்பித்த ஆனை நகல்





நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்களுக்கு.