disalbe Right click

Monday, April 15, 2019

அரசு அதிகாரி மீது வழக்குத் தொடர முன் அனுமதி அவசியம்!


அரசு அதிகாரி மீது வழக்குத் தொடர முன் அனுமதி அவசியம்!
அலுவலகத்தில் தனது கடமையை சரியாக செய்யாத ஓர் அரசு ஊழியர் மீது நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்ட நபர் நடவடிக்கை எடுக்க முடியுமா?
K. முருகன் என்பவர் ஒரு வழக்கறிஞர். அவர் 26.12.2012 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கீரைத்துறை காவல் நிலையத்திற்கு அவரது கட்சிக்காரரான பால்பாண்டி சார்பாக சென்றார். அப்போது செந்தில்குமார் என்னும் காவல் அதிகாரி பணியில் இருந்துள்ளார்.
வழக்கு சம்பந்தமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவல் அதிகாரி செந்தில்குமார் வழக்கறிஞர் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமில்லாமல் அவரை காவல் நிலையத்திற்குள் நுழையக் கூடாது என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை ராஜகுரு, விஜயன் என்ற இரு வழக்கறிஞர்களும், ராமர் என்ற ஒரு நபரும் பார்த்துள்ளனர்
வழக்கறிஞர் முருகன் செய்த காரியம்
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் முருகன் மதுரை நகர காவல்துறை ஆணையரிடம் இது குறித்து ஒரு புகாரை நேரிடையாக அளிக்கிறார். ஆனால் அந்த புகாரை ஆணையர் வாங்க மறுத்து விடுகிறார். அதனால் முருகன் பதிவுத் தபாலில் புகாரை ஆணையருக்கு அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து உடனே செந்தில்குமார் மீது மதுரை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் புகாரை தாக்கல் செய்கிறார். அந்தப் புகாரை நடுவர் கோப்புக்கு எடுத்துக் கொண்டு செந்தில்குமாருக்கு சம்மன் அனுப்புகிறார்.
செந்தில்குமார் செய்த காரியம்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரி செந்தில்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்கிறார்.
செந்தில்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்
செந்தில்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கறிஞர் முருகன் என்ன விஷயத்திற்காக காவல் நிலையத்திற்கு வந்தார் என்று புகாரில் தெளிவாக எதையும் கூறவில்லை. வழக்கறிஞர் முருகன் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் காவல் நிலையத்தில் வைத்து நடந்துள்ளது. அப்போது செந்தில்குமார் பணியில் இருந்துள்ளார். பணி நேரத்தில் அலுவலக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது, அலுவலகத்தில் கூட்டமாக கூடியுள்ளவர்களை கலைப்பதற்கான உரிமை செந்தில்குமாருக்கு உள்ளது. சார்பு ஆய்வாளர் பதவிக்கு குறைவில்லாத பதவியில் உள்ள ஒரு நபர் சட்டத்திற்கு புறம்பாக கூடியுள்ள கூட்டத்தை கலைப்பதற்கான அதிகாரம் இந்திய தண்டனைச் சட்டம் சட்டம் பிரிவு 179 ன் கீழ் செந்தில்குமாருக்கு உள்ளது. மேலும் அரசு அதிகாரியான செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், எவர் ஒருவரும், அரசிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். ஆனால் வழக்கறிஞர் முருகன் அவ்வாறு அனுமதி எதையும் பெறவில்லை
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 131 & 132
குற்றவியல் நடுவரும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 131 & 132 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி இந்த வழக்கை கோப்புக்கு ஏற்றுக் கொண்டுள்ளார். ஒரு அரசு ஊழியர் அவரது அலுவலக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது குற்றம் செய்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் முன் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என கல்கத்தா உயர்நீதிமன்றம் " நாராயணன் சந்திர பிரம்நாயக் Vs ஆனந்த மண்டல் மற்றுமொருவர் (1984-CRLJ-1334)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பையும், அலகாபாத் உயர்நீதிமன்றம் "ராம் ஆதார் யாதவ் Vs ராம சந்திர மிஸ்ரா மற்றுமொருவர் (1992-CRLJ-2216)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பையும் சுட்டிக்காட்டி குற்றவியல் நடுவரின் உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டார்
முருகன் தரப்பு வழக்கறிஞரின் வாதம்
வழக்கறிஞர் முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில்குமார் சட்ட நடவடிக்கைகளை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், காவல் நிலையத்திற்குள் ஒரு வழக்கறிஞர் செல்வதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும். முருகனை வழக்கறிஞர் என்றுகூட பார்க்காமல் செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளது குற்றம் என்றும் கூறினார்


நீதிபதியின் உத்தரவு
செந்தில்குமார் காவல்துறை அதிகாரி என்பதை வழக்கறிஞர் முருகன் மறுக்கவில்லை. செந்தில்குமார் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டும் போது அவர் தனது அலுவலகத்தில் பணிசெய்து கொண்டு இருந்துள்ளார். ஆகையால் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் அரசிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே வழக்கறிஞர் முருகனின் வழக்கை குற்றவியல் நடுவர் கோப்புக்கு எடுத்துக் கொண்டது தவறானது. எனவே செந்தில்குமாரின் சீராய்வு மனுவை அனுமதித்து, குற்றவியல் நடுவரின் உத்தரவை ரத்து செய்கிறேன் என்று கூறி உத்தரவு பிறப்பித்தார்.
CRL. RC. No - 193/2018    Dt - 16.7.2018 
செந்தில்குமார் Vs K. முருகன் 2018-2-TNLR-65
நன்றி : எனது முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan அவர்களுக்கு

Sunday, April 14, 2019

பொய் ஆவணம் புனைதல் - யார் குற்றவாளி? - வழக்கு & தீர்ப்பு


பொய் ஆவணம் புனைதல் - யார் குற்றவாளி? - வழக்கு & தீர்ப்பு
வழக்கின் சுருக்கம்:
வள்ளியூர் என்ற கிராமத்தில் திருமதி. டோர்ஸ் விக்டர் என்ற பெண்மணிக்கு சொந்தமாக சில வீட்டு மனைகள் இருந்தது. அதனை அபகரித்துக் கொள்ள வேண்டும்! என்று திருமதி. டோர்ஸ் விக்டர் என்ற பெண்மணிக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை பயன்படுத்தி, ஜவஹர்ராஜ் என்பவர் தனது பெயருக்கு ஒரு பவர் பத்திரத்தை போலியாக பதிவு செய்து கொள்கிறார். அந்த பவர் பத்திரம் மூலம் திருமதி. டோர்ஸ் விக்டர் சொத்துக்களை ராஜபாண்டி என்பவரிடம் ரூ.50,000/-க்கு அடமானம் வைக்கிறார். இதனை அறிந்து கொண்ட திருமதி. டோர்ஸ் விக்டர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார். புகாரின்படி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420,423,424 465 மற்றும் 109 ஆகியவற்றின் கீழ், ஜவகர்ராஜ் மற்றும் ராஜபாண்டி ஆகியோர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர். விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்கின்றனர். இந்த நிலையில் திருமதி. டோர்ஸ் விக்டர் இறந்துவிடுகிறார்.
கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரித்து ஜவகர்ராஜ் பிரிவு 465 ன் கீழ் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனையும், ராஜபாண்டிக்கு ஓராண்டு சிறை தண்டனையும்விதித்து தீர்ப்பு வழங்குகிறது. இதனை எதிர்த்து எதிரிகள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கின்றனர்.
மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இதனை மீண்டும் எதிர்த்து எதிரிகள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கின்றனர். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் எதிரிகளை விடுதலை செய்கிறது.
எதிரிகளின் விடுதலைக்கு உயர்நீதிமன்றம் கூறிய காரணம் என்ன?
இந்த வழக்கில் ஆள்மாறாட்டம் செய்த பெண்ணை பற்றி புலன்விசாரனை அதிகாரி தனது இறுதி
அறிக்கையில் எதுவுமே கூறவில்லை. முக்கிய குற்றவாளியான ஆள்மாறாட்டம் செய்த பெண்ணை விசாரிக்காமல், அந்தப் பெண்ணால் ஆதாயம் அடைந்த எதிரிகளை மட்டும் வழக்கில் சேர்த்தது தவறு. முக்கிய எதிரிக்கு தண்டனை வழங்காமல் மற்ற எதிரிகளுக்கு தண்டனை வழங்கியதை ஏற்க முடியாது " என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் எதிரிகளை விடுவித்ததற்கு காரணத்தை தெளிவாகக் கூறியிருந்தது.
உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திருமதி டோர்ஸ் விக்டரின் மகள் உச்சநீதிமன்றத்தில் தனது மேல்முறையீட்டை தாக்கல் செய்தார். வழக்கை இரு நீதிபதிகள் விசாரித்தனர்.
பொய்யாவணம் புனைதல் - விளக்கம்
பொய்யாவணம் புனைதல் என்பதற்கான விளக்கம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 463 லும், பொய்யாவணம் புனைதல் என்கிற குற்றச் செயலுக்குள் எவையெல்லாம் அடங்கும் என பிரிவு 464 லும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு சட்டப் பிரிவுகளிலும் கூறப்பட்டுள்ள காரணிகள் நிரூபிக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 465 ன் கீழ் தண்டனை வழங்க முடியும்.
ஏற்கனவே " முகமது இப்ராகிம் மற்றும் பலர் Vs பீகார் மாநில அரசு மற்றுமொருவர் (2009-8-SCC-751)" என்ற வழக்கில், ஒரு நபர் பொய்யாவணம் புனைந்தவர் என்று கருதப்படுவதற்கு கீழ்க்கண்ட காரணிகள் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1. ஒருவருக்கு சொந்தமான அல்லது வேறொருவரால் அங்கீக்கப்பட்டுள்ள உரிமை குறித்து ஓர் உரிமையை கோருதல் அல்லது ஓர் ஆவணத்தை புனைதல்
2. ஓர் ஆவணத்தில் மாற்றம் செய்தல் அல்லது மோசடி செய்தல் அல்லது
3. ஏமாற்றி ஓர் ஆவணத்தை எழுதிப் பெறுதல் அல்லது ஒரு நபர் சுயநினைவில்லாமல் உள்ளபோது அந்த நபரிடமிருந்து ஆவணத்தை எழுதிப் பெறுதல்
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 464 ல் விளக்கம் 2 ல் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் பார்க்கும் போது, ஓர் பொய்யாவணம் புனையப்பட்டிருந்து அந்தப் பொய்யாவணத்தை புனைந்த நபர்தான் அந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று கருதப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அந்த நபரை பொய்யாவணம் புனைந்தவர் என்று கருத முடியாது.
காவல் ஆய்வாளர் செய்தது குற்றம்
பொய்யாவணம் என்பது மோசடி என்கிற விளக்கத்திற்குள் வருகிறது. மேற்படி குற்றச்சாட்டுகளை நேரடி சாட்சியங்கள் அல்லது நிரூபிக்கப்பட்ட சங்கதிகள் மூலமாக அனுமானிக்க வேண்டும். இந்த வழக்கில் எதிரிகள் ஒரு பொய்யாவணத்தை புனைந்துள்ளார்கள் அல்லது ஓர் ஆவணத்தின் ஒரு பகுதியை பொய்யாக புனைந்து அதன் அடிப்படையில் அடமான ஆவணத்தை எழுதியுள்ளார்கள் என்று விசாரணை நீதிமன்றம் கூறவில்லை. எனவே அவர்கள் பொய்யாவணத்தை புனைந்தவர்களாக கருத முடியாது. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண்தான் பொய்யாவணத்தை புனைந்தவர் ஆவார்.
வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண் குறித்து எந்த விசாரணையும் செய்யவில்லை. இந்த எதிரிகளுக்கும், ஆள்மாறாட்டம் செய்த பெண்ணுக்கும் உள்ள தொடர்பு குறித்து எதுவும் கூறவில்லை. காவல் ஆய்வாளர் முறையாக விசாரணை செய்யவில்லை என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம். காவல் ஆய்வாளர் தன் கடமையை செய்யவில்லை. பொறுப்புடனும் செயல்படவில்லை. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கண்டுபிடிக்க காவல் ஆய்வாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பவர் ஆவணம் டோர்ஸ் விக்டரால் எழுதிக்கொடுக்கப்படவில்லை என்பதும், அந்த பவர் ஆவணத்தின் மூலமாக எதிரிகள் பயனடைந்துள்ளார்கள் என்பதும் வழக்கு ஆவணங்களிலிருந்து தெரிய வந்ததாலும், எதிரிகளுக்கு தண்டனை அளிக்க முடியாது. காவல் ஆய்வாளரின் மோசமான புலன் விசாரணை காரணமாக இந்த வழக்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் மோசமான செயல்களால் தான் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எதிரிகளை விடுதலை செய்வதை தவிர வேறு வழியில்லை. பொய்யாவணத்தை யார் புனைந்துள்ளார்களோ அவர்களுக்கு தான் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 465 ன் கீழ் தண்டனை அளிக்க முடியும் என்று கூறி எதிரிகளை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் CRL. A. Nos - 359&360/2010 Dt - 11.05.2018
ஷீலா செபாஸ்டியன் Vs R. ஜவஹர்ராஜ் மற்றுமொருவர் 2018-3-MLJ-CRL-39
நன்றி : எனது முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan அவர்கள்