disalbe Right click

Sunday, February 17, 2019

அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்


அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரிக்க கட்டுப்பாடுகள்
'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான லஞ்ச புகார்களை விசாரிக்க, முன் அனுமதி பெற வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, லஞ்ச புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேரடியாக வழக்கு பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. பரஸ்பர அடிப்படையில் மட்டும், சம்பந்தப்பட்ட துறை தலைமையிடம், அனுமதி பெற்று வந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய சட்டத்தை பின்பற்றி, தமிழக அரசு, புது அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வாயிலாக, அரசின் பல்வேறு துறைகளுக்கும், சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊழல் தடுப்பு சட்டம், 1988ல், மத்திய அரசு, '17 - ' என்ற, பிரிவை இணைத்துள்ளது. அதை பின்பற்றி, தமிழக அரசும், ஊழல் தடுப்பு சட்டத்தில், புதிய பிரிவை சேர்த்துள்ளதுஇதன்படி
 அரசு பணியில் நியமிக்கப்பட்டுள்ள, குரூப் - , பி, சி மற்றும் டி பிரிவில் உள்ள, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு புகார்கள் வந்தால், அதுகுறித்து, துறை தலைமைக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தர வேண்டும்.
➤ புகார் அனுப்பியவர்களிடம், புகாருக்குரிய விளக்கம் மற்றும் ஆதாரங்களை பெற வேண்டும்
➤ அவ்வாறு, ஆதாரத்தை தர தவறினால், அந்த புகாரை ஆதாரமற்றதாக கருத வேண்டும்.
➤ புகார்தாரர்களின் விளக்கம் கிடைத்து, புகார் உறுதியானால், அதன் மீது, போலீசார் நேரடியாக நடவடிக்கை எடுக்க கூடாது.
➤ சம்பந்தப்பட்ட துறையின் தலைமைக்கு தகவல் அளித்து, உரிய அனுமதி பெற வேண்டும்.
➤ அதற்கு முன், துறை தலைமை வழியாக, புகாருக்குள்ளானவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். 
➤ அதன்பிறகே, போலீசார் விசாரணையை நடத்தலாம்.
இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
*************************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 17.02.2019 

அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்

அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்
அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் சேருவது எப்படி?
புதுடில்லி:'அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் திட்டத்திற்கு, நாடு முழுவதும் உள்ள, 3.13 லட்சம் பொது சேவை மையங்களில் சந்தா தொகையை செலுத்தலாம்' என, அறிவிக்க பட்டு உள்ளது.
ஓய்வூதிய திட்டம் தொடர்பாக, மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது:அமைப்பு சாரா தொழிலாளர்கள், தங்களது, 60வது வயது முதல், மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
மத்திய தகவல் தொழில் நுட்ப துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள, 'சி.எஸ்.சி., - கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்' என்ற நிறுவனம் மூலம், இதற்கான பணிகள் நடக்கும்இந்த நிறுவனம், 18 - 40 வயதுக்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் பெயர்களை பதிவு செய்யத் துவங்கி உள்ளது.மாதம்,15 ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ள, 10 கோடி தொழிலாளர் களை, ஐந்தாண்டு களில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனம், நாடு முழுவதும், 3.13 லட்சம் பொது சேவை மையங்களை நடத்தி வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள், தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களை அணுகி, தங்கள் ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஜன்தன் கணக்கு, 'பாஸ்புக்' ஆகியவற்றை காண்பித்து, தங்கள் பெயர்களை பதிவுசெய்யலாம்.
தொழிலாளர்கள், ஓய்வூதிய திட்டத்துக்கான முதல் மாத சந்தா தொகையை, ரொக்கமாக செலுத்தலாம். அதற்கு, ரசீது அளிக்கப்படும். 18 வயதில், இந்த திட்டத்தில் சேரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாத சந்தாவாக, 55 ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கு நிகரான தொகையை, அவர்களின் கணக்கில், மத்திய அரசு செலுத்தும்
தொழிலாளரின் வயது அதிகரிக்கையில், சந்தா தொகையும் உயரும்..தெரு வியாபாரிகள், சுமை துாக்குவோர், செங்கல் சூளை தொழிலாளர்கள், செருப்பு தைப்போர், குப்பை சேகரிப்போர், ரிக்ஷா ஓட்டிகள் ஆகியோர், இந்த திட்டத்தால் பயன்பெறுவர்.
சலவை தொழிலாளர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோருக் கும், இந்த திட்டம் பொருந்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.
*******************************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 17.02.2019


Tuesday, February 12, 2019

காவல் ஆய்வாளரின் தில்லுமுல்லு

திருத்தங்கல் காவல் ஆய்வாளரின் தில்லுமுல்லு!
  1. நான் சார்ந்துள்ள சங்க நிர்வாகிகள் செய்த மோசடி(1) மற்றும் அவர்களுக்கு ஆதரவாக திருத்தங்கல் காவல் ஆய்வாளர் திரு சௌ.இராஜா போலி ஆவணம் புனைந்தது குறித்து நான் 27.07.2018 அன்று மதுரை காவல்துறை துணைத்தலைவர் அவர்களிடம் உரிய ஆதார ஆவண நகல்களுடன் அளித்த புகாரின் மீது, அவர் இட்ட உத்தரவின் பெயரில் விருதுநகர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள்  கடந்த 12.09.2018 அன்று என்னிடம் விசாரனை நடத்தினார். எனது புகாருக்கு ஆதாரமாக பல ஆவண நகல்களை அவரிடம் நான் சமர்ப்பித்தேன், இன்றுவரை முடிவு எட்டப்படவில்லை.
  2. நான் சார்ந்துள்ள சங்க நிர்வாகிகள் செய்த ஒன்பது கோடி ரூபாய் மோசடி(2)  குறித்து கடந்த 25.10.2018 அன்று மதுரை காவல்துறை துணைத்தலைவர் அவர்களிடம் உரிய ஆதார ஆவண நகல்களுடன் அளித்த புகாரானது, விருதுநகர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பப்பட்டு இன்றுவரை என்னிடம் விசாரணையே நடத்தப்படாமல், நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரம் கேட்டதில், நடவடிக்கையில் உள்ளதாக தகவல் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  3. விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல்கண்காணிப்பாளர் அவர்கள் போலி ஆவணம் தயாரித்ததாக  உரிய ஆதார ஆவண நகல்களுடன்  ஆன்லைனில் நான் 24.06.2018 அன்று அளித்த (RAP1849391) புகாரானது, விசாரணையே நடத்தப்படாமல், 155 நாட்கள் நிலுவையில் வைக்கப்பட்டு கடந்த 28.11.2018 அன்று  தள்ளுபடி செய்யப்பட்டது. 
  4. பொதுவாக ஆன்லைன் மூலமாக கொடுக்கப்படும் புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், அதற்கான காரணத்தை நீண்ட அறிக்கையாகவே அந்த இணையதளத்தில் பதிவு செய்திருப்பார்கள். அதனை நாம் டவுண்லோடு செய்து கொள்ளலாம்..ஆனால், எனது புகாரை தள்ளுபடி செய்த காரணமோ, விசாரணை அதிகாரியின் பெயரோ இணையதளத்தில் இல்லை. ஆதாரத்துடன் கொடுத்த புகாரை எப்படி தள்ளுபடி செய்தீர்கள்? எனக்கு விசாரணை அறிக்கை நகல் வேண்டும்! என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரம் கேட்டதில், அந்தப் புகாரானது நடவடிக்கையில் உள்ளதாக தகவல் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  5. இந்நிலையில் கடந்த 28.01.2019 அன்று  திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்கள் ஒரு ”காவல் விசாரணை அழைப்பாணை”யை பதிவுத்தபால் மூலம் எனக்கு அனுப்பி இருந்தார். அதில் பார்வையில் கண்ட புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை செய்ய தங்கள் தரப்பு ஆவணங்களுடன் 29.01.2019 காலை 10 மணிக்கு திருத்தங்கல் காவல்நிலையத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தின் நகலை கீழே காணலாம். 
  6. மேற்கண்ட கடிதத்தில் பார்வையில் யார் புகார் அளித்துள்ளார்கள்? எந்த நாளில் அளித்துள்ளார்கள்? என்ன புகார்? என்ற விபரம் இல்லை. அது பற்றி தெரிந்தால்தானே, நான் எனது தரப்பு ஆவணங்களை எடுத்துச் செல்லமுடியும்? ஆகையால், அந்த விபரங்களை அளித்தால்தான் விசாரணையில் கலந்து கொள்ள முடியும்!  என்று காவல் ஆய்வாளர் அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். அந்த கடிதத்தின் நகலை கீழே காணலாம்,
  7. உள்ளூர் என்பதால் அனுப்பிய 29.01.2019 அன்றே நான் அனுப்பிய கடிதம் அஞ்சல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், எனக்கு எந்தவிதமான பதிலும் உடனடியாக தரப்படவில்லை. காத்திருந்தேன். 
  8. இந்நிலையில் இன்று (12.02.2019)  திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்கள் மீண்டும் ஒரு ”காவல் விசாரணை அழைப்பாணை”யை பதிவுத்தபால் மூலம் எனக்கு அனுப்பி இருந்தார். அதில் ஏற்கனவே 29.01.2019 அன்று  அனுப்பப்பட்ட காவல் விசாரணை அழைப்பாணையில், என்மீது புகார் கொடுத்தவர்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தது போலவும், நான் வேண்டுமென்றே விசாரணையில் கலந்து கொள்ளாதது போலவும் திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்கள்   குறிப்பிட்டு இருந்தார். நான் அனுப்பிய 29.01.2019  கடிதத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை செய்ய தங்கள் தரப்பு ஆவணங்களுடன் 14.02.2019 காலை 10 மணிக்கு திருத்தங்கல் காவல்நிலையத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த காவல் விசாரணை அழைப்பாணையின் நகலை கீழே காணலாம்.                                                                                   
  9. மேற்கண்ட இரண்டாவது அழைப்பாணையிலும், என்ன புகார் என்பதை திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்கள் குறிப்பிடவில்லை. அது பற்றி தெரிந்தால்தானே, நான் எனது தரப்பு ஆவணங்களை எடுத்துச் செல்லமுடியும்? ஆகையால், அந்த விபரங்களை அளித்தால்தான் விசாரணையில் கலந்து கொள்ள முடியும்!  என்று காவல் ஆய்வாளர் அவர்களுக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளேன்.. அந்த கடிதத்தின் நகலை கீழே காணலாம்,


  10. திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்கள்  என்ன பதில் தரப்போகிறார் என்று காத்திருக்கிறேன். பதில் வந்ததும் பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.02.2019.

Friday, February 8, 2019

காவல்துறை இயக்குநர் அவர்களின் 30.01.2019 சுற்றறிக்கை


காவல்துறை இயக்குநர் அவர்களின் 30.01.2019 சுற்றறிக்கை
குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41ல், பிடியாணை இல்லாமல், ஒருவரை காவல்துறை அதிகாரி கைது செய்யலாம்! என்பதைப் பற்றி  கூறப்பட்டுள்ளது. 
குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41-A
 ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டணை வழங்கக்கூடிய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை கைது செய்ய வேண்டியதில்லை! என்பது பற்றி குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41-Aல் கூறப்பட்டுள்ளது.  
அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர், அழைப்பாணையின்படி காவல் அதிகாரியின் முன் ஆஜராகாமலோ, காவல் அதிகாரி நடத்துகின்ற விசாரணைக்கு ஒத்துழைக்காமலோ,  இருந்தால் நீதிமன்ற உத்தரவின்படி அவரை காவல்துறையினர் கைது செய்யலாம். 
டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை
அமந்த்தீப்சிங் ஜோஹர் VS தேசிய தலைநகர் பிரதேசம் டெல்லி ANR (உரிமையியல் நீதிப் பேராணை கோரும் மனு எண்:7608/2017 வழக்கில், வழங்கப்பட்ட 07.02.2018 நாளிட்ட தீர்ப்புரையில், குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41-Aன் கீழ், அறிவிப்பு வழங்குவதற்கான மாதிரிப் படிவமும், அதன் உட்பொருளும் மற்றும் அதனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு  .சார்பு செய்யும் விதம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.    
காவல்துறையினருக்கு சுற்றறிக்கை
மேற்கண்ட தீர்ப்பின் அடிப்படையில் தமிழக காவல்துறை இயக்குநர் அவர்கள், தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையினை அனுப்பியுள்லார். அதில் ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டணை வழங்கக்கூடிய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை கைது செய்ய வேண்டியதில்லை! என்பது பற்றிய வழிகாட்டுதல்கள் உள்ளது. அந்த சுற்றறிக்கையின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.





கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்! என்று மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளவற்றை பின்பற்றாத  புலன் விசாரனை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும்  அர்னேஷ்குமார்  எதிர் பீகார்  அரசு (2014)  8 SCC  273 வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின்படி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்! என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்கள் இறுதியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.02.2019