disalbe Right click

Sunday, December 1, 2019

ப்ரைவேட் கம்ளைண்ட் (கிரிமினல்)

ப்ரைவேட் கம்ளைண்ட் (கிரிமினல்)
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தனிநபர் புகாரில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200 ன் கீழ் குற்றவியல் நடுவர் தாமாக முன்வந்து ஒரு விசாரணையை நடத்தலாம் அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன்படி அந்தப் புகாரின் மீது புலன்விசாரணை நடத்தும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டு, அந்த புகாரினை காவல்துறைக்கு அனுப்பி வைக்கலாம். இந்த இரண்டு நடைமுறைகளில் ஏதேனும் ஒரு நடைமுறையை தேர்வு செய்வது குற்றவியல் நடுவரின் விருப்பத்திற்கு உட்பட்டதாகும்.
  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் புலனாய்வு என்கிற வார்த்தைக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றாலும் காவல்துறையினர் ஒரு வழக்கில் ஆதாரங்களை சேகரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • எனவே பிடியாணை வேண்டா குற்றம் குறித்து ஒரு புகார் அளிக்கப்படுமேயானால் அந்த புகாரின் அடிப்படையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ன் கீழ் FIR பதிவு செய்ய வேண்டியது புலனாய்வு அதிகாரியின் கடமையாகும்.
  • ஒரு குற்றவியல் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன் கீழ் ஒரு உத்தரவினை பிறப்பித்திருந்தால் காவல்துறையினர் அந்த உத்தரவின் பேரில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ன் கீழ் வழக்கு பதிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. காவல்துறையினர் புகாரை பதிவு செய்ய முடியாது என்று மறுக்க முடியாது.
முதல் தகவல் அறிக்கை பதிவு
FIR பதிவு செய்வது என்பது வெவ்வேறு சூழ்நிலைகளில் நடைபெறும் ஒன்றாகும். நிகழ்நிலை புகார்தாரர் அளிக்கும் புகாரின் மீது பதிவு செய்யப்படுவது ஒரு முறையாகும். குற்றவியல் நடுவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன் கீழ் அளிக்கும் உத்தரவின்படி அல்லது உயர்நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 226 ன்படி அளிக்கும் உத்தரவின்படி பதிவு செய்வது மற்றொரு வகையாகும். இந்த இரண்டு முறைகளை தவிர புலன்விசாரணை அதிகாரிக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் புகார் எதுவும் தரப்படாவிட்டாலும் அவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேரிடையாக FIR பதிவு செய்யலாம்.
குற்றவியல் நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், காவல்துறை கண்காணிப்பாளருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154(3) ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணையானதாகும்.
  • ஒரு பிடியாணை வேண்டா குற்றம் குறித்து ஒரு புகார் அளிக்கப்பட்டால் அதன்மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154(1) ன்படி FIR காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும்.
  • அவ்வாறு FIR பதிவு செய்ய தவறும் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டால் தனக்கு கீழுள்ள ஒரு காவல்துறை அதிகாரியை FIR பதிவு செய்யும்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154(3) ன்படி உத்தரவிடலாம்.
  • அதேபோல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட ஒரு புகாரின் மீது அந்த காவல்நிலைய அதிகாரி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ன்படி ஒரு வழக்கு பதிவு செய்ய தவறும் போது ஒரு குற்றவியல் நடுவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன்படி FIR பதிவு செய்யும்படி ஒரு உத்தரவை பிறப்பிக்கலாம்.
  • ஆனால் காவல்துறையினர் விருப்பம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் அல்லது விருப்பப்பட்டால் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்டு ஒரு உத்தரவை குற்றவியல் நடுவர் பிறப்பிக்க முடியாது.
  • பிடியாணை வேண்டா குற்றங்களில் முதலில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ன் கீழ் FIR பதிவு செய்யப்பட வேண்டும்.
  • அதன்பிறகு தான் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 173 ன் கீழ் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும்.
  • குற்றவியல் வழக்குகளில் அதுவும் குறிப்பாக பிடியாணை வேண்டா குற்றங்களில் ஒரு வழக்கின் பிறப்பு மற்றும் இறப்பு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ல் தொடங்கி பிரிவு 173 ல் முடிவடைகிறது.
  • அதன்பிறகு தான் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அந்த வழக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 190 ன்படி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
  • குற்றவியல் நீதிபரிபாலன முறையில் காவல்துறையினரால் செய்யப்படும் குற்றவியல் வழக்கு விசாரணையில் ஒவ்வொரு நிலையையும் கண்காணித்து அதனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அதிகாரத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டம் குற்றவியல் நடுவர்களுக்கு வழங்கியுள்ளது.
  • FIR நகலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 161 ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை சமர்பிப்பது, வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களை தாமதமின்றி நீதிமன்றத்தில் ஒப்படைப்பது உட்பட அனைத்து செயல்களும் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் அமைந்துள்ளது.
  • காவல்துறையினரின் செயல்பாடுகள் மற்றும் பொய் வழக்கை புனைதல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கத்தில் இந்த கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
  • காவல்துறையினரை யாராவது கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுப்பாடுகள் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன் கீழ் குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் கட்டளைகளை காவல்துறையினர் நிறைவேற்றுகிறார்களா? , கீழ்படிந்து நடந்து கொள்கிறார்களா?, நடைமுறைப்படுத்துகிறார்களா? என்பதை குற்றவியல் நடுவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 16950/2014, DT - 17.10.2014 S. Jeya Kumar Vs D. Baskaran and others 2014-2-LW-CRL-613
நன்றி: வழக்கறிஞரும் எனது முகநூல் நண்பருமானDhanesh Balamurugan‎

Friday, November 29, 2019

கணவருடைய சொத்தில் மனைவிக்கு பங்கு - வழக்கு

கணவருடைய சொத்தில் மனைவிக்கு பங்கு - வழக்கு
வழக்கின் சுருக்கம்:
வள்ளியம்மாள் என்பவரின் கணவர் தங்கவேலு. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 45 வருடங்கள் ஆகிவிட்டது. இவர்களுக்கென்று இருந்த ஒரு குழந்தையும் தனது 2 வயதுக்குள் இறந்துவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கணவரின் மூதாதையர் சொத்தில் பங்கு கேட்டு கணவர் தங்கவேலு உயிருடன் இருக்கும்போதே மனைவி வள்ளியம்மாள் அவர் மீதும், அவரது அண்ணன் மீதும் வழக்கு தொடர்கிறார். வள்ளியம்மாள் வழக்கில் வெற்றி பெற்றாரா?  பங்கு கிடைத்ததா?  வாருங்கள் பார்க்கலாம்.
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி

  • வள்ளியம்மாள் என்பவர் பாகப்பிரிவினை கேட்டு தன் கணவர் மீதும், அவரது சகோதரர் மீதும் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார்
  • தனக்கும், தனது கணவரான தங்கவேலுவுக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், தங்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகள் இல்லாமலிருந்து, அதன்பிறகு சிவசுப்பிரமணியன் என்கிற மகன் பிறந்ததாகவும், அந்த குழந்தை 1 1/2 வயதான நிலையில் இறந்து போனதாகவும், அதுமுதல் தனக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும், பாகப்பிரிவினை கேட்டுள்ள சொத்துக்கள் மூதாதையர் வழி சொத்துக்கள் என்றும், அந்த சொத்துக்களை கணவரும், அவருடைய சகோதரரும் வாய்மொழியாக பாகப்பிரிவினை செய்து கொண்டதில் வழக்கு சொத்துகள் கணவருக்கு ஒதுக்கப்பட்டதாகவும், கணவருக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துள்ளதால் அந்த சொத்துக்களில் தனக்கும், காலம் சென்ற தன் மகனுக்கும் பங்குரிமை உள்ளதாக குறிப்பிட்டு பாகம் கோரினார்.
  • கணவர் மனைவியின் வழக்கை எதிர்த்து நடத்தினார். வழக்கு சொத்துகளில் சில மட்டுமே கூட்டு குடும்ப சொத்துக்கள் என்றும், சில சொத்துக்கள் சகோதரனின் தனிப்பட்ட சொத்துக்கள் என்றும், சில சொத்துக்கள் தனது சுய சம்பாத்திய சொத்துக்கள் என்றும் கூறி மனைவி பங்குரிமை கோர முடியாது என்றார்
  • வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், வள்ளியம்மாளின் வழக்கை ஏற்றுக் கொண்டு பாகப்பிரிவினை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
  • அதனை எதிர்த்து கணவர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் கணவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இரண்டாம் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. RMT. டீக்காராமன் விசாரித்தார்.
  • வள்ளியம்மாளுக்கும் அவள் கணவருக்கும் திருமணம் நடைபெற்ற நாளை அடிப்படையாக கொண்டு இரண்டு கீழமை நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கியுள்ளது
  • அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளில் தங்கவேல் உயிருடன் இருந்துள்ளார். அப்போது அவருக்கு உயிருடன் குழந்தைகள் ஏதும் இல்லை
  • இந்த நிலையில், இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் மட்டுமே இந்த வழக்குக்கு பொருந்தும். அந்த சட்டத்தின்படி, வாரிசுரிமை அடிப்படையில், மூதாதையர் வழி வந்த சொத்தினை கணவர் பெற்றிருந்தால், அந்த சொத்தில் மனைவி பங்குரிமை கோர முடியாது
  • இது குறித்து பம்பாய் உயர்நீதிமன்றம் " உதய் நரேந்திரஷா Vs நரேந்திர அமிர்தலால் ஷா (AIR-2014-BOM-119)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. அந்த வழக்கில், இந்து கூட்டுக் குடும்ப சொத்தில் கூட்டு பங்குரிமையாளராக இருந்து கணவரால் பெறப்பட்டுள்ள சொத்தில் கணவர் உயிரோடிருக்கும் போது மனைவி தனக்கு பங்குரிமை உள்ளதாக கோர முடியாது என்று கூறியுள்ளது
  • வள்ளியம்மாள் வழக்கில் கண்ட சொத்துக்கள் அனைத்தும் அவரது கணவரான தங்கவேலுவின் தந்தைக்கு பாத்தியப்பட்டு, அவர் இறந்ததற்கு பின்னர், கணவருக்கும், அவரது சகோதரருக்கும் வந்துள்ளது
  • அதனால் தங்கவேல் உயிரோடு இருக்கும் போது வள்ளியம்மாள் அதில் பங்குரிமை கேட்க முடியாது. எனவே இரண்டு கீழமை நீதிமன்றங்களும் வழங்கிய தீர்ப்புகள் தவறானது என்று கூறி வள்ளியம்மாளின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

S. A. NO - 510/2001DT - 2.11.2017
முத்துக்குமாரசாமி மற்றும் பலர் Vs வள்ளியம்மாள்
2018-1-MLJ-476

நன்றி: வழக்கறிஞரும் எனது முகநூல் நண்பருமான Dhanesh Balamurugan