disalbe Right click

Wednesday, February 19, 2020

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு 
 ஆட்சேபகரமற்ற புறம்போக்கு இடங்களில் 5 ஆண்டுக்கு மேலாக குடியிருப்போருக்கு அந்த இடத்தையே வரன்முறை செய்து பட்டா வழங்க வேண்டும்.
· கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன்கருதி, அவற்றை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும்..
· நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள் போன்ற இடங்களில் குடியிருப்போருக்கு மாற்று இடம் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்துத்தர வேண்டும்.
· மேய்கால், மந்தைவெளி உள்ளிட்ட ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வகைமாற்றம் செய்யப்பட்டு பட்டா வழங்கிட வேண்டும்.
மேற்கண்டவாறு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
· முதலில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்துவிதமான புறம்போக்கு நிலங்களிலும் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகம் அரசு நிலப்பதிவேட்டில் பதிவு செய்த விவரங்களின் அடிப்படையில் தொகுத்து கணினியில் பதிவு செய்ய வேண்டும்.
· அதன் அடிப்படையிலேயே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை கணக்கெடுப்பு முடிக்காமல் இருந்தால் 31.8.2019-க்குள் ஆக்கிரமிப்பு விவரங்களை தொகுத்து கணினியில் பதிவு செய்துவிட வேண்டும்.
· சென்னை மாநகர், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சென்னை மாநகர் சுற்றியுள்ள பகுதிகளிலும், இதர மாநகராட்சி பகுதிகளிலும் ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகமானது தங்களிடம் உள்ள அரசு நிலப்பதிவேடு மற்றும் புலத்தணிக்கை ஆகியவற்றின் மூலமாக விவரங்களை சேகரித்து கணினியில் பதிவு செய்து கொள்கை முடிவு எடுக்கும் பொருட்டு, நில நிர்வாக ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்ப வேண்டும்.
· மேலே குறிப்பிட்ட பகுதிகளில் தடையாணை பதிவு செய்யப்பட்டுள்ள இனங்களில் அதை தளர்வு செய்வது குறித்து அரசே முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரன்முறை செய்வது எப்படி?
· ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு வருவாய் நிலை ஆணை எண்.21-ன் கீழ் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வரன்முறை செய்ய வேண்டும்.
· உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்புவிக்கப்பட்ட நிலங்களில் ஆட்சேபனையற்ற நிலங்களான தோப்பு, களம் போன்ற இனங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தீர்மானத்தை பெற்று அதன் அடிப்படையில் வரன்முறை செய்ய வேண்டும்.
· கோவில் நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் அதில் குடியிருப்பவர்கள் நலன் கருதி விதிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி வரன்முறைப்படுத்த அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்த வேண்டும்.
· அந்த நிலங்களின் மதிப்பைநிர்ணயம் செய்வதற்கு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
· இதற்கான முன்மொழிவுகள் மாவட்ட வாரியாக நில உரிமை பெற்றுள்ள கோவில் வாரியாக அரசுக்கு அனுப்பி, அரசின் ஆணைப்பெற்று அதன் அடிப்படையில் வரன்முறைப்படுத்தவேண்டும்.
ஆக்கிரமிப்புகள்
· மேய்க்கால், மந்தைவெளி போன்றவையும் ஆட்சேபனைக்குரிய ஆக்கிரமிப்புகளாக இருந்தபோதிலும் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பொதுநலனை கருத்தில் கொள்ள வேண்டும்.
· அவை நீண்ட கால ஆக்கிரமிப்புகளாக இருந்தால் அதையும் கருத்தில் கொண்டும் கால்நடைத்துறையின் அனுமதி பெற்று மாவட்ட நிர்வாகம் உரிய விதிமுறைகளுக்குட்பட்டு முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
· அதனை ஆய்வு செய்து பிறப்பிக்கப்படும் அரசு ஆணையின்படி வகை மாற்றம் செய்யப்பட்டு, குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்த வேண்டும்.
· நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்புகளை முதலில் அப்புறப்படுத்தி அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கும் பொருட்டு அத்தகைய குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை செய்துள்ள ஏழைகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
· அத்தகைய தகுதியான பயனாளிகளுக்கு மாற்று புலமாக தகுதியுள்ள ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலம் அதே கிராமத்தில் இல்லாத நிலையில், தனியார் பட்டா நிலங்களை வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்த வேண்டும்.
· அல்லது பேச்சுவார்த்தை மூலம் விலைக்கு நிலத்தை பெற்றோ மறுகுடியமர்வு செய்யும் வகையில் வீட்டுமனை பட்டா அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
· நிலமதிப்பு அதிகம் உள்ள நகர் சார்ந்த பகுதிகளில் தனிப்பட்டா அளிக்காமல், அதற்கு மாற்றாக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர வழிவகை செய்ய வேண்டும்.
யாருக்கு வீட்டுமனைப்பட்டா?
· ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்குகளில் குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறை படுத்தும்போதும், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளுக்கு மாற்று இடம் வழங்கும்போதும் நகர்ப்புறத்திலும், கிராமப்புறத்திலும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
· ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு அரசு நடை முறையில் உள்ள விதிமுறைகளின்படி நிலமதிப்பு வழிகாட்டி பதிவேட்டின் படியான மதிப்பின் படி வசூல் செய்து கொண்டு, அதன் அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும்.
அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
· இந்த வரன்முறை திட்டங்களில் பேரூராட்சி, நகராட்சி போன்ற நகர்ப்புற பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் விஸ்தீர்ணம் 25 சென்டுக்கு அதிகமாகாமல் இருந்து போதுமான இடம் இருந்தால் ஒரு குடும்பத்திற்கு தலா 2 சென்டுக்கு அதிகமாகாமலும், கிராமப்புறங்களில் 3 சென்டுக்கு அதிகமாகாமலும் வீட்டுமனை பட்டா வழங்கலாம்.
· நகர்ப்புற பகுதிகளில் நில மதிப்பை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் விஸ்தீரணம் 25 சென்ட்டுக்கு கூடுதலாக இருந்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஏதுவாக அந்த நிலத்தை முதலில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.
· அதன்பிறகு அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி அதிகார வரம்பு
· இந்த சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டங்களின் கீழ் நிலமதிப்பு அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு நிதி அதிகார வரம்பு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
· வட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் வரையிலும், வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.லட்சம் வரையிலும், மாவட்ட கலெக்டருக்கு ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும், நில நிர்வாக ஆணையருக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் என்று நிதி அதிகார வரம்பு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
· ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அந்தப் பகுதியின் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வட்டாட்சியர் மற்றும் வட்ட தலைமை நில அளவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் சரிபார்க்கப்பட்டு வரன்முறைப்படுத்தப்பட்டு பட்டா வழங்கப்பட வேண்டும்.
· மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட அளவிலான குழு, நில நிர்வாக ஆணையர் மற்றும் அரசு அனுமதி தேவையில்லாத இனங்களில் குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்யலாம்.
ஒரு ஆண்டுக்குள் வழங்க வேண்டும்
· மாவட்ட அளவிலான குழுவினால் ஆக்கிரமிப்புகள் வரன்முறை செய்ய இயலாத நேர்வுகளில் சம்பந்தப்பட்ட புலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலருடன் கூட்டுத்தணிக்கை செய்ய வேண்டும்,
· அந்த தணிக்கையின் அடிப்படையில், முன்மொழிவினை வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர், நில நிர்வாக ஆணையர், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட மாநில குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
· அதன் மூலம் உரிய விலக்களிப்பு ஆணை பெற்றபின் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
· தடையாணை புத்தகத்தில் பதியப்பட்டுள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய் கோட்ட அலுவலர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரால் பதியப்பட்டிருந்தால், அதனை மாவட்ட கலெக்டர் விலக்களித்து தகுதியுள்ள நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம்.
· தடையாணை புத்தகத்தில் பதியப்பட்டுள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மாவட்ட கலெக்டரால் பதியப்பட்டிருப்பின் மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள குழுவால் விலக்களிக்கப்பட வேண்டும்.
· தடையாணை புத்தகத்தில் பதியப்பட்டுள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து நில நிர்வாக ஆணையராலோ அல்லது அரசளவிலோ பதிவு செய்யப்பட்டிருந்தால் உரிய முன்மொழிவினை பெற்று மாநில குழுவால் விலக்களிக்கப்பட வேண்டும்.
· இச்சிறப்பு வரன்முறை திட்டங்கள் ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்தப்பட வேண்டும்.
· இந்த விலக்களிப்பு அதிகாரங்கள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.
· இந்த அரசாணைப்படி தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கணினியில் பதியப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் மாதாந்திர ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
· மாவட்ட கலெக்டர் மாதாந்திர ஆய்வு அறிக்கையை நில நிர்வாக ஆணையருக்கு 5-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
· இத்திட்டம் சிறப்பாக செயல்முறைப் படுத்தப்படுகிறதா என்பதை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது நில நிர்வாக ஆணையர் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.
இணையதளத்திலிருந்து திரட்டி முகநூலில் 07.12.2019ல் பதிவிட்ட தகவல்கள்

**************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 19.02.202

Tuesday, February 18, 2020

எதிரிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யும் முன்

எதிரிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யும் முன் நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும்?
  • ஓர் எதிரிக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்வதற்கு முன்பாக, அந்த எதிரிக்கு அறிவிப்பு அனுப்பி, அவர் தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கட்டாயம் கேட்க வேண்டும்.
  • நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது.
  • ஜாமீன் வழங்குவதற்கும், அதனை ரத்து செய்வதற்கும் வேறுபாடு உள்ளது.
  • அவை இரண்டும் வெவ்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டவை.
  • ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்றாக எதிரி காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், எதிரி அவ்வாறு செய்யவில்லை என்ற காரணத்திற்காக அவரது ஜாமீனை உடனடியாக ரத்து செய்யக்கூடாது.
  • எதிரி காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ ஆஜராகி கையெழுத்து போடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எதிரியின் குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கலாம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஏழ்மை நிலையின் காரணமாக காவல் நிலையத்திற்கு செல்ல அவரிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் அல்லது புகார்தாரர் அவரை கையெழுத்து போடவிடாத படி தடுக்கலாம் அல்லது காவல் துறையினரே எதிரி கையெழுத்து போட விடாமல் தடுக்கலாம்.
  • எனவே ஜாமீன் மனுவை ரத்து செய்வதற்கு முன்பாக எதிரிக்கு அது குறித்து ஒரு அறிவிப்பை அனுப்பி அவர் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும்.
  • ஜாமீன் உத்தரவை ரத்து செய்வது அபாயமான ஒன்றாகும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை திரும்ப பெறுகிற ஒரு விஷயமாகும்.
  • இயற்கை நீதிமுறைகள் மிகவும் முக்கியமானதாகும். இயற்கை நீதிமுறைகள் குறித்து சட்டத்தில் கூறப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.
  • இதற்கு நீதிபதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. உயர்ந்த நுட்பங்களை கொண்ட ஒரு கம்ப்யூட்டர் கூட ஒரு நீதிபதிக்கு மாற்றாக செயல்பட முடியாது.
  • ஏனென்றால் கம்ப்யூட்டருக்கு எந்தவிதமான உணர்ச்சிகளோ, உணர்வுகளோ கிடையாது.
  • எனவே ஜாமீன் வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யும் போது நீதிபதிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 253 & 254/2016, DT - 13.06.2016,
Uma Maheshwari (253/2016)Vs Inspector of police, District Crime Branch, Madurai & 
R. Hariharan (254/2016) Vs Inspector of police, District Crime Branch, Madurai (2016-3-MWN-CRL-121)
முகநூல் பதிவு 01.02.2017நன்றி : எனது முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு Dhanesh Balamurugan 


மூத்த குடிமக்களுக்கு RTI சட்டம் தருகின்ற சலுகை

மூத்த குடிமக்களுக்கு RTI சட்டம் தருகின்ற சலுகை

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, விண்ணப்பம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)ன் கீழ் தகவல்கள் மற்றும் ஆவண நகல்களை கேட்டு நாம் விண்ணப்பிக்கும் போது, அதனை பெற்றுக் கொண்ட  நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அதற்குரிய தகவல்களை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, முதல் மேல்முறையீடு
அவ்வாறு பொது தகவல் அலுவலர் அவர்கள், தகவல்கள் எதையும் தரவில்லை என்றாலோ அல்லது சில தகவல்களை மட்டும் வழங்கியிருந்தாலோ அல்லது வழங்கிய தகவல்கள் முழுமையாக இல்லை என்றாலோ அல்லது தவறாக இருந்தாலோ, விண்ணப்பம் செய்து தகவல் பெற்று இருக்க வேண்டிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
முதல் மேல்முறையீடு பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அதற்கு மேல்முறையீட்டு அலுவலர் பதில் வழங்க வேண்டும். அதனை 30 நாட்களுக்குள் வழங்க இயலவில்லை என்றால், 45 நாட்கள் வரை நீடித்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான காரனத்தை அவர் பதிவு செய்திருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, இரண்டாம் மேல்முறையீடு
முதல் மேல்முறையீடு செய்து 30 நாட்களுக்குள்  தகவல்கள் ஏதும் வழங்கவில்லை என்றால், அதிலிருந்து 90 நாட்களுக்குள் மாநில தகவல் ஆணையத்திற்கு நாம் இரண்டாம் மேல்முறையீடு செய்ய வேண்டும். 
இரண்டாவது மேல்முறையீடு செய்தவர்களுக்கு இத்தனை நாட்களுக்குள் தகவல் ஆணையர் பதில் வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்லவில்லை.
ஆனால், மனுதாரர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் ஒரு சலுகை வழங்குகிறது.
அது என்ன சலுகை?
மனுதாரர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால், தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அவர் அனுப்புகின்ற புகார் அல்லது மேல்முறையீட்டு மனுவுடன் அவரது வயதை குறிப்பிடும் சான்றுகளான, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களின் நகல்களில் ஏதாவது ஒன்றை இணைத்து விண்ணப்பித்தால், 
மாநில தகவல் ஆணையருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 15(4)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, அந்த மனுக்கள் 8 வாரங்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது கீழ்க்கண்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.02.2020