disalbe Right click

Sunday, September 18, 2016

அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம்


என்ன சொல்கிறது அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம்?

கல்வி, வேலை வாய்ப்புக்காகப் பெரு நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கும் காலம் இது. இதன் காரணமாக நகரங்களில் வீட்டுத் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கேற்ப பெரு நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

பலரது சொந்த வீடு கனவையும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் நனவாக்குகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புக்கென ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச் சட்டங்கள் உள்ளன. இங்கேயும்கூட, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம் 1994 உள்ளது. அந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?

சட்டத்துக்கான காரணம்
தனி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான உரிமையை ஒருவருக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது. குறிப்பிட்ட கட்டிடத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு மாற்றும் வகையிலும் அசையா சொத்தாகவும் இந்தச் சட்டம் காட்டுகிறது.


சட்டத்தின் பயன்பாடு
இந்தச் சட்டமானது ஒவ்வொரு அடுக்கு மாடிக் கட்டிடம் கட்ட விண்ணப்பிக்கத் தொடங்கு வதிலிருந்தே அமலுக்கு வந்துவிடும். ஒரு குறிப்பிட்ட கட்டுமானத்தில் 5 அல்லது அதற்கு மேல் அடுக்குமாடி வீடுகளை 3 தளங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டு அமைக்கலாம். கட்டிடத் திட்ட அனுமதியைப் பொறுத்து கட்டுமானத்தை மேற்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட அமைப்புகளால் வழங்கப்படும் முறைப்படியான கட்டிடத் திட்ட ஒப்புதலைப் பெற்றுக் கட்டிடத்தைக் கட்ட இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.


அடுக்குமாடி மாற்றக்கூடியது
ஒவ்வோர் அடுக்குமாடிக் குடியிருப் பிலும் மனையில் பிரிக்கப்படாத பாகம் இருக்கும். இதேபோல அடுக்குமாடிக் குடியிருப்பில் எல்லாத் தேவைகளுக்காகவும் வசதிகளும் இருக்கும். அடுக்குமாடிக் குடியிருப்பானது பரம்பரையானதாகவும் மாற்றக்கூடியதாகவும் அசையா சொத்துகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றலாம்.

ஒருவருடைய பிரிக்கப்பாத பாகம் மற்றும் வசதிகளை வேறு ஒருவருக்கு மாற்றி தர முடியும். இதன்படி அடுக்குமாடிக் குடியிருப்பை விற்கலாம், மார்ட்கேஜ் மூலம் அடமானம் வைக்கலாம், குத்தகைக்கு (லீஸ்) விடலாம், பரிசாகக் கொடுக்கலாம்.

அசையாச் சொத்தை சட்டப்படி விற்க என்ன உரிமைகள் இருக்கின்றனவோ அதே உரிமை அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் உண்டு.


விதிமுறைகள்

ஒவ்வொரு அடுக்குமாடி வீட்டு உரிமையாளருக்கும் பொதுப் பகுதிகளில் பிரிக்கப்படாத பாகம் என்ற தலைப்பில் குறிப்பிட்ட சதவீதப் பகுதி மற்றும் வசதிகள் பற்றி அடுக்குமாடி விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு அடுக்குமாடி வீட்டு உரிமையாளரும் சட்டப்படி உடன்படிக்கை, நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு உடன்பட வேண்டும்.

அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் சொசைட்டி அல்லது சங்கம் ஒன்றை நிறுவி, அதைத் தமிழ்நாடு சொசைட்டி சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி உரிமையாளர்கள் சங்கம் மூலம் எல்லா வசதிகளையும் பராமரிக்கலாம். பொதுப் பகுதிகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்த எல்லா உரிமையாளர்களுக்கும் உரிமை உண்டு. என்றாலும் துணை விதிகள் ஒன்றை ஏற்படுத்திப் பொதுவான விஷயங்களை ஆலோசித்து முடிவு செய்யலாம்.


துணை விதிகளின்படி சொத்து நிர்வகிக்கப்பட வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரிக்கப்படாத பாகம் மற்றும் பொதுவான பகுதிகளிலிருந்து கிடைக்கும் லாபத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். இதேபோலப் பொது செலவினங்களை ஒவ்வொரு உரிமை யாளரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டத்தில் ஐந்து அத்தியாங்கள் உள்ளன. இந்த அத்தியங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர்களுக்கென சட்டத்திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

நன்றி : தி இந்து (தமிழ்) நாளிதழ் - 20.08.2016

No comments:

Post a Comment