disalbe Right click

Monday, September 5, 2016

பி.எஃப். புதிய நடைமுறைகள்


பி.எஃப். புதிய நடைமுறைகள் - என்ன செய்ய வேண்டும்?

ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 பேர் பணிபுரிந்தாலே அவர்களுக்கு பிஎஃப் பிடித்தம் செய்வது கட்டாயம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது
இந்த நிலையில், அமைப்பு சார்ந்த நிறுவனத்தில் பணிபுரியும் பிஎஃப் சந்தாதாரர்களின் வசதிக்காக பல புதிய மாற்றங்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) அறிவித்துள்ளது. 

இந்த மாற்றங்கள் குறித்து சென்னை வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் சலில் சங்கர் மற்றும் உயர் அதிகாரி எஸ்.சங்கர் ஆகிய இருவரும் விளக்கிச் சொன்னார்கள்.  

நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை!
“பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் ஓய்வூதியக் கணக்கை ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற்றும்போதோ அல்லது முகவரி உள்ளிட்ட புதிய தகவல்களைச் சேர்க்கும்போதோ வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே திருத்தம் செய்ய இயலும் என்பது இதுவரை இருந்துவந்த நடைமுறை. இனி  வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதி இல்லாமலே பிஎஃப் படிவம், பென்ஷன் படிவம் போன்றவற்றைப் பெற்று நிரப்பிக் கொடுக்கலாம்.

பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதியக் கணக்கை தாங்களே முடிவு செய்யக்கூடிய வகையில் யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதற்காக 10டி (10D) என்கிற படிவத்தை இபிஎஃப்ஓ அறிமுகப்படுத்தி உள்ளது. 

மேலும், தனிப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கக் கூடிய யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர் கட்டாயமாக்க ப்பட்டுள்ளது. 

பிஎஃப் சந்தாதாரர்கள் பணத்தைத் திரும்பப் பெறும்போது இனி அவசியம் க்ளெய்ம் பார்ம்-ல் யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரைக் குறிப்பிட வேண்டும். 

இனி யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரைக் குறிப்பிட்டால் மட்டுமே பிஎஃப் க்ளெய்ம் செட்டில் ஆகும். ஒருவேளை பிஎஃப் சந்தாதாரர் டிசம்பர் 31-ம் தேதி 2013-ம் ஆண்டுக்கு முன்னரே ஓய்வு பெற்றிருந்தால், அவருக்கு இந்த யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர் தேவையில்லை. 
ஏனெனில் இந்தத் திட்டம் 1.1.2014-ம் தேதிக்குப் பிறகே அறிமுகமானது.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழியர்களுக்கு யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரை வழங்க நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், இதை பல நிறுவனங்கள் சரியாகச் செய்யவில்லை என்பதால் 1.1.2016-ம் தேதி முதல் யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர்  கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 

இந்த யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர் இருந்தால்தான் இனி க்ளெய்ம் செட்டில் ஆகும். 

இந்த யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஊழியர்கள் இந்த நம்பரை ஆதார், பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இதையெல்லாம் இணைத்த பிறகு, யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரை உறுதி செய்தபிறகு க்ளெய்ம் செய்கிறார் என்பதால் நிறுவனங்களிடமிருந்து அத்தாட்சி வாங்க வேண்டிய அவசியமில்லை. 

யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும், பி.எஃப் இருப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது பிஎஃப் கணக்கையும் மாற்றுவதற்கு இந்த  யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரைத் தந்தாலே போதும்; 

யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பருடன்,  ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரம் இணைக்கப்பட்டிருந்தால், பழைய பிஎஃப் பணம், புதிய நிறுவன கணக்குக்கு தானாகவே மாறிவிடும். எனவே, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு கணக்கை எளிதில் மாற்றலாம். இதற்காக அலைய வேண்டியதில்லை. 

லைஃப் சர்ட்டிஃபிகேட்! 
பென்ஷன் கொடுத்தபிறகு ஒவ்வொரு சந்தாதாரரும் லைஃப் சர்ட்டிஃபிகேட் (உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்) ஆண்டு தோறும் தரவேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இதனைத் தவிர்க்க, ஜீவன் ப்ரமான்     (Jeevan Pramaan) என்கிற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, நாடு முழுவதும் உள்ள ஜீவன் ப்ரமான் சென்டரிலோ அல்லது பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று உங்கள் கைரேகையே ஆண்டுக்கு ஒருமுறை (நவம்பர்  மாதத்தில்) பதிவு செய்தாலே போதும்; உங்கள்  லைஃப் சர்ட்டிஃபிகேட் ஆட்டோமெட்டிக்காக அப்டேட் ஆகிவிடும். இதன்பிறகு வங்கிகளுக்குச் சென்று தனியாக லைப் சர்ட்டிஃபிகேட்  தரவேண்டிய அவசியமில்லை. 

டிடிஎஸ் பிடித்தம்! 
ஒரு உறுப்பினர் ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாக பணிபுரிந்திருந்தால் (சர்வீஸ்), அவர் வாங்கக்கூடிய பிஎஃப் பணம் ரூபாய் 50,000 அல்லது அதற்கு மேல் இருந்தால் 10% டிடிஎஸ் பிடிக்கப்படும். இதனால் பிஎஃப் சந்தாதாரர்கள் பணத்தைத் திரும்பப் பெறும்போது யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரைக்  குறிப்பிடுவதுடன் பான் கார்டையும், படிவம் 15G படிவத்தையும் (வருமான வரி வரம்புக்குள் வரவில்லை என்பதற்கான படிவம்) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

58 வயது பிஎஃப் சந்தாதார்கள்! 
58 வயதாகி பென்ஷனுக்குத் தகுதியான (குறைந்தபட்ச சர்வீஸ் 10 ஆண்டுகள்)பிஎஃப் சந்தாதாரர்கள், பிஎஃப் வாங்குவதை அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தள்ளிப் போடலாம். அவர்களுக்காக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதில் 58 வயதுக்குப் பிறகு பிஎஃப் பங்களிப்பை ஓராண்டு தொடர்ந்தால் அவர்களின் ஓய்வூதியம் 4% அதிகரிக்கும். இதுவே இரண்டு ஆண்டு என்றால் பென்ஷன் 8.16% அதிகமாக கிடைக்கும். 

மூன்று ஆண்டுக்கு பிஎஃப்! 
புதிதாக வேலைவாய்ப்பை உருவாக்குவதற் காகவும், யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்காகவும் ஊழியர்களுடைய பிஎஃப் பணத்தை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே வழங்க உள்ளது. அதாவது, புதிதாக வேலைக்குச் சேரும் நபர், யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர் எண் சரியாக இருந்தால், முதல் மூன்று ஆண்டுகளுக்கு அவருடைய பிஎஃப் பணத்தை அரசாங்கமே செலுத்தும். 

இதனால் நிறுவனத்தின் நிதிச் சுமை கணிசமாகக் குறையும். 

இதில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 8.33% பிஎஃப் பணத்தை அரசே செலுத்திவிடும். இதுவே நலிந்த நிலையில் உள்ள டெக்ஸ்டைல் துறையில் புதிதாக சேரும் ஊழியர்களுக்கு 3.67% பிஎஃப் பணத்தை டெக்ஸ்டைல் அமைச்சகமே முதல் மூன்று ஆண்டுகளுக்குச் செலுத்திவிடும்.

ஆனால், ஊழியரானவர் முதல் மூன்று ஆண்டுகளில் ஒரு நிறுவனத்தை விட்டு வேறு ஒரு நிறுவனத்துக்கு மாறக்கூடாது. அப்படி மாறாமல் இருந்தால் மொத்தம் 12% பிஎஃப் பணத்தையும் நிறுவனங்களுக்குப் பதிலாக அரசாங்கமே செலுத்தி விடும். இது 2016, ஆகஸ்ட் 9-ம் தேதியிலிருந்து புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்கள்.

புதிதாக வந்திருக்கும் பி.எஃப். நடைமுறைகள் மூலம் உருவாகும் நன்மைகளை எல்லோரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்!
*********************************************************************************
பிஎஃப் பணம் மூலம் சொந்த வீடு!
பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்பைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை பிஎஃப் ஆணையம் விரைவில் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது குறிந்த எந்தவொரு முறையான அரசு ஆணை எதுவும் வெளியாகவில்லை.  

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் உறுப்பினர்களின் கணக்கைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் பணிகளைத் துவங்கி உள்ளது. இதைப் பயன்படுத்தி எளிதாக வீடு வாங்குவதுடன், பிஎஃப் பணத்தை மாதத் தவணையாகச் செலுத்தலாம். 

அடுத்த மாதம் நடைபெறும் மத்திய அறங்காவலர்கள் வாரியத்துடன் நடக்க இருக்கும் ஓய்வூதிய நிதி தொடர்பான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கூட்டத்துக்கு முன்பு இதற்கான திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. 

இதற்கு மத்திய அறங்காவலர்கள் வாரியம் ஒப்புதல் அளித்தவுடன் பிஎஃப் சந்தாதாரர்கள் இதனைப் பயன்படுத்த இயலும்.

நன்றி : நாணயம்விகடன் - 04.09.2016

No comments:

Post a Comment