disalbe Right click

Thursday, September 8, 2016

வாகன ஆவண நகல்களை


வாகன ஆவண நகல்களை கையில் வைத்திருக்கத் தேவையில்லை
என்ன செய்ய வேண்டும்?

வாகனங்களுக்கான ஆவணங்களை எந்நேரமும் கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதனால் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. காரில் செல்வோர் பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் சென்றாலும், மறந்துவிட்டு சென்றால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். 


இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த ஆவணங்களை பராமரிக்க தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. என்னதான் கவர் போட்டு எடுத்துச் சென்றாலும், தவிர்க்க முடியாத நிலைகளில் மழையிலும், வாட்டர் சர்வீஸ் செய்யும்போது நனைந்து அவை சேதமடைந்துவிடுகின்றன.

வாகன தணிக்கையின்போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அறிந்ததுதான். இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு அசத்தலான வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. 

டிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகத்திற்கான மொபைல் அப்ளிகேஷன் மூலமாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும்.  இந்த வசதி மூலமாக, இனி அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சிக்கு வித்திடும் என்று கருதப்படுகிறது. 

மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன. 

அதாவது, இது ஆன்லைனில் நமது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம்தான் இந்த டிஜிலாக்கர். கூகுள் டிரைவ் போன்றே இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் நம்பகமான ஆவண பாதுகாப்பு முறை. 

மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகவே பெற முடியும். இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதிலேயே பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். 

இதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து கணக்கை துவங்கிக் கொள்ளலாம். 

உங்களது ஆவணங்களை அதிகாரி சரிபார்த்தபின், அந்த ஆவணங்களை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். இயற்கை சீற்றங்கள், ஆவணங்கள் காணாமல் போகும் பிரச்னைகளுக்கும் இது தீர்வாக அமையும். 

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் என்றில்லை, இதர அரசு ஆவணங்களை பெறுவதற்கும், தற்போதுள்ள ஆவணங்களை ஸ்கேனர் கருவி மூலமாக, சுய கையொப்ப அத்தாட்சியுடன் நீங்களே இதில் பதிவேற்றி பாதுகாக்கும் வசதியையும் அளிக்கும். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. 

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற முடியும். தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேநேரத்தில், ஹேக்கர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதுதான் இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

 Thanks to Mr. Saravana Rajan Updated: Wednesday, September 7, 2016, 

டிரைவ் ஸ்பார்க் ஆப் பீட்

No comments:

Post a Comment