disalbe Right click

Saturday, October 22, 2016

பழைய வீட்டின் மதிப்பைக் கண்டுபிடிக்க


பழைய வீட்டின் மதிப்பைக் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்?

பழைய வீடோ புதிய வீடோ எது வாங்குவதாக இருந்தாலும் அதில் வில்லங்கம் பார்ப்பது முக்கியம். அந்த வீட்டைச் சரியான விலைக்குத்தான் வாங்குகிறோமா என்பது அதை விட முக்கியம். வாழ்க்கையில் எப்போதாவது வாங்கும் வீடு, வாழ்க்கை முழுவதும் அவஸ்தையைத் தந்துவிடக் கூடாது.

வீடு வாங்குபவர்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தோ, ஆன்லைன் மூலமாகவோ வில்லங்கம் பார்ப்பது வழக்கம். சில சமயங்களில் இதிலும்கூடச் சிலர் ஏமாற்ற வாய்ப்புண்டு. விலை விஷயத்தைப் பொறுத்தவரை, வீடு விற்பவர், வாங்குபவர் இடையே தீர்மானிக்கப்படுகிறது. இப்படி வாங்கும்போது, சில சமயங்களில் வீட்டை வாங்குபவர்கள் அதிக விலை கொடுத்து ஏமாந்துவிடுவதும் உண்டு.

சரி, வில்லங்கத்தைச் சரியான முறையில் பார்ப்பது எப்படி? வீட்டைச் சரியான விலையில் மதிப்பீடு செய்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் தேசிய மதிப்பீட்டாளர் கழகத்தின் முன்னாள் துணைத் தலைவர் பி.கனகசபாபதி:

வீடு வாங்குவது என முடிவு செய்துவிட்டால், அதற்கு 2 முக்கிய விஷயங்களைச் சரிபார்க்கலாம்;

1) வில்லங்கம்

2)  விலை.

வில்லங்கம்

வில்லங்கத்தைப் பொறுத்தவரை, பொதுவாகப் பலரும் பத்திரப்பதிவு அலுவலகத்திலோ, ஆன்லைன் மூலமோ வில்லங்கச் சான்று பெறுவார்கள். 

இதில் சில சமயங்களில் தவறுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால் அதைவிட, இதற்கெனப் பிரத்யேகமாக உள்ள வழக்கறிஞர்களை (Competent Advocates) அணுகினால், வில்லங்க விஷயங்கள் 100 சதவீதம் துல்லியமாக அறிய ஏதுவாக இருக்கும். அவர் வீட்டின் மூலாதாரப் பத்திரம் முதல் மின் இணைப்பு ரசீது வரை அனைத்தையும் சரிபார்த்துவிட்டு, வீட்டை வாங்கலாமா, வேண்டாமா எனக் கூறுவார்.

சொத்து மதிப்பீடு

வீட்டில் எந்த வில்லங்கமும் இல்லை எனத் தெரிந்தால், அடுத்து அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்வது முக்கியமானது. சொத்து மதிப்பீடு என்பது சொத்து வாங்க இருப்பவரும், சொத்தை விற்க இருப்பவரும் சேர்ந்து விவாதித்து, எந்த நிர்பந்தத்திற்கும் உள்ளாகாமல், ஒரு விலைக்கு வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒப்புக் கொள்வது. வீடு வாங்குவதாக இருந்தால் வீட்டை வாங்க இருப்பவருக்கும், வீட்டை விற்க இருப்பவருக்கும் வீட்டின் மதிப்பு தெரியவில்லை என்றால், மத்திய அரசில் பதிவு பெற்ற மதிப்பீட்டாளரை அணுகலாம்.

அவர், அந்த வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பு, வீடு, அதில் உள்ள வசதிகள், இதர அம்சங்கள் ஆகிய 4 விஷயங்களைக் கொண்டு வீட்டின் மதிப்பைக் கணக்கிடுவார்.

இதில், மனையின் மதிப்பு அப்போதைய சந்தை மதிப்பைக் கொண்டு கணக்கிடலாம். வீட்டைப் பொறுத்தவரை, எத்தனை சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது, எந்த ஆண்டு கட்டப்பட்டது, சுவரின் அகலம், உறுதித் தன்மை, இன்னும் எத்தனை வருடத்துக்குக் கட்டிடம் உறுதியாக இருக்கும், வீட்டைக் கட்டிய கட்டுநர் போன்ற காரணிகள் எடுத்துக் கொள்ளப்படும். 

பொதுவாக வீட்டின் மதிப்பானது, கட்டப்பட்ட ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் ஒன்றரை சதவீதம் மதிப்பு குறையும்.ஒரு வீடு கட்டி 10 ஆண்டுகள் ஆகி இருந்தால், 15 சதவீதம் தேய்மான மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பாக 5 ஆண்டுக்கு முன் ஒரு வீட்டை கட்ட ரூ.30 லட்சம் செலவாகி இருந்தால், தற்போது அந்த வீட்டின் உத்தேச மதிப்பு ரூ.27 லட்சத்து 75 ஆயிரம் எனக் கணக்கிடலாம்.

அடுத்தது, வீட்டில் உள்ள வசதிகள். உள் அலங்கார வேலைப்பாடுகள், வாஸ்து, சமையலறை வசதி, வார்ட்ரோப், ஷோகேஸ், பூஜை அறை, மெயின் கதவு உள்ளிட்ட அம்சங்கள் கணக்கிடப்படும். இவற்றுக்கும் தேய்மான மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதர வசதிகளைப் பொறுத்தவரை, மோட்டார் சர்வீஸ், சாக்கடை வசதி, காம்பவுண்ட் சுவர் போன்றவற்றின் மதிப்பு எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த 4 அம்சங்களையும் எடுத்துக்கொண்டு கணக்கிடும் மதிப்பு Present Worth எனப்படும். இது தவிர, வீடு அமைந்துள்ள இடம் கோயில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்கள், முக்கிய சாலைகள், பேருந்து நிறுத்தம் ஆகியவற்றின் அருகில் இருந்தால் Present Worth-ஐவிடச் சற்று அதிகமாகவும், நேர்குத்தல் இடமாக இருந்தாலோ, டாஸ்மாக், மீன் மார்க்கெட், பம்பிங் ஸ்டேஷன் ஆகியவற்றின் அருகிலேயோ, தாழ்வான பகுதியிலேயோ இருந்தாலோ Present Worth-ஐ விடச் சற்றுக் குறைவாகவும் இருக்கும்.

இத்தனை அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வீடு வாங்கினால், எந்தப் பிரச்சினையும் இன்றி நிம்மதியாக இருக்கலாம். ஆனால், சுமார் 40 சதவீதம் பேர் மட்டுமே, இதுபோல முறையாக வாங்குபவர்களாக (Prudent Buyers) உள்ளனர். ரொக்கமாகப் பணம் கொடுத்து வாங்குவதாக இருந்தால் தான், இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 

வங்கி மூலம் கடன் பெற்று வாங்குவதாக இருந்தால், இந்த அனைத்து நடைமுறைகளையும் வங்கி நிர்வாகமே மேற்கொள்ளும். இதற்காகவே ஒவ்வொரு வங்கிக்கும் Panel Advocates மற்றும் மதிப்பீட்டாளர்கள் உள்ளனர்.

எவ்வளவு கட்டணம்?

மதிப்பீட்டாளர்கள், சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை மதிப்பிட சுமார் ரூ.8 ஆயிரமும், ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை மதிப்பிட சுமார் ரூ.10,750-ம் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

அதன் பின் வரும் ஒவ்வொரு கோடிக்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வீடு வாங்கும்போது, முறையாக மதிப்பிடச் சில ஆயிரம் செலவளிப்பது பெரிதல்ல. வீடு வாங்குபவர் மட்டுமல்ல, வீடு விற்பவரும், வீட்டை மதிப்பீடு செய்ய இதே முறையைப் பின்பற்றலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 22.10.2016

No comments:

Post a Comment