disalbe Right click

Sunday, October 16, 2016

எலிக்காய்ச்சல்


எலிக்காய்ச்சல் - என்ன செய்ய வேண்டும்?
கிலியை ஏற்படுத்தும் எலிக்காய்ச்சல்!
சாதாரணமாக வீட்டைச் சுற்றித் திரியும் எலியால் என்ன பிரச்னை என்று   நினைப்போம். ஆனால், அது எலிக்காய்ச்சல் என்ற கொடிய பாதிப்பை பரப்புகிறது என்றால் நம்பமுடிகிறதா?

மழைக்காலம் வந்தாலே கொசுவால் பரவும் டெங்கு,  மலேரியா தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறது. இதனுடன், தேங்கும் மழை நீரில் எலியின் கழிவு கலப்பதன் மூலம் எலிக்காய்ச்சல் ஏற்படுகிறது.

எலிக்காய்ச்சல்
தெருக்களில், சாக்கடைகளில் வசிக்கும் எலியின் சிறுநீரில் லெப்டோஸ்பைரா (Leptospira) என்ற திருகாணி போன்ற தோற்றம் கொண்ட பாக்டீரியா கிருமி இருக்கிறது. எலியின் சிறுநீரை மிதிக்கும்போது அல்லது எலியின் சிறுநீர் கலந்த மழைநீர், கழிவுநீரை மிதிக்கும்போது, எலி கடிப்பதன் மூலமாக இந்த பாக்டீரியா கிருமி மனித உடலுக்குள் நுழைகிறது. 

இந்தக் கிருமி எலியின் உடலில் மட்டும் வசிப்பது இல்லை, நாய், பூனை போன்ற விலங்குகள் மூலமாகவும் பரவலாம்.

உடலில் காயங்கள், புண்கள் உள்ள மனிதர்கள் இந்த நீரில் புழங்கும்போது, இந்தக் கிருமிகள் அவர்களது உடலுக்குள் நுழைகின்றன. ரத்தத்தின் மூலம் கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலத்தை அடைந்து அங்கு வளர்ச்சி அடைகின்றது. 

பின்னர், அது பாதிப்பை வெளிப்படுத்துகிறது.

அறிகுறிகள்

தொடர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, கண் எரிச்சல், உடல் வலி போன்றவை எலிக்காய்ச்சலின் முக்கிய அறிகுறி. இந்த அறிகுறிகள் யாருக்கு இருந்தாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

பரிசோதனைகள்

காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டவுடன், உடனடியாக மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த மாதிரிகள் பிசிஆர், எலிசா, டார்க் ஃபீல்டு எக்ஸாமினேஷன் (PCR , ELISA, dark field examination) ஆகிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும். 

இந்தப் பரிசோதனைகளில் லெப்டோஸ்பைரா ஆன்டிபாடி மற்றும் ஆன்டிஜன்கள் இருந்தால், அது நுண்ணோக்கியில் தெரியும். இதைக் கொண்டு இந்தக் காய்ச்சலை உறுதிப்படுத்தலாம். சிலருக்கு, அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப சிறுநீர்ப் பரிசோதனையும் செய்ய வேண்டி இருக்கும்.

பாதிப்புகள்

எலிக்காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை எடுக்காமல் விடும்போது, மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பாதிப்பு, கணையப் பாதிப்பு, பித்தப்பை பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். 

மேலும், நோய் முற்றும்போது விஷத்தன்மை உடலில் அதிகமாகி செப்டிக் ஷாக் (Septic shock) ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதால், உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

சிகிச்சைகள்

எலிக்காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உறுதி செய்யப்பட்ட எலிக்காய்ச்சலுக்கு, தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படி பெனிசிலின் (penicillin) மருந்துடன் கூடிய ஊசியை 6 மணி நேர இடைவெளியில்  தரலாம். பெனிசிலின் ஒவ்வாத ஆட்களுக்கு டெட்ராசைக்கிளின் (tetracycline), டாக்ஸிசைக்கிளின் (doxycycline) மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தரலாம். 

உணவு

எலிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் காரம் இல்லாத, எண்ணெய் அதிகம் இல்லாத, நன்கு வேகவைத்த உணவுகளை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.
மனிதர்களுக்கு  எலிக்காய்ச்சல் வராமல் இருப்பதற்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஆனால் விலங்குகளுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. 

தக்க சமயத்தில் கண்டறிந்து, முறையான சிகிச்சை அளித்தால், ஒரு வாரத்தில் இந்தக் காய்ச்சல் குணமாக வாய்ப்பு உள்ளது. மேலும், செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவது, எலி உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டத்தை மட்டுப்படுத்துவது, மழைக்காலத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது போன்றவை மூலமாக எலிக்காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும்.

________________________________________________________________________________

எலிக்காய்ச்சலைத் தடுக்க, தவிர்க்க!

மழைக்காலங்களில் வெளியில் செல்லும்போது செருப்பு அல்லது ஷூ அணிந்துகொள்வது நல்லது. வெளியில் சென்று வந்ததும் கை, கால், முகம் ஆகியவற்றைச் சோப்பு போட்டு நன்கு கழுவிவிட வேண்டும். 

குறிப்பாக, கால்களில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில், காயங்கள் மூலமாக, இந்த வகை நோய்த் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. வீட்டில் எப்போதும் எலி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, நம் வீட்டுக்கு அருகில் மழை நீர் சேராமல் பார்த்துக்கொள்வது ஆகியவை, நமக்கும் நம் குடும்பத்தாரின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

எலிக்காய்ச்சல் Vs உலகம்

உலக அளவில் ஒரு வருடத்துக்கு 10 லட்சம் பேருக்கும் மேல் எலிக்காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில், ஒரு லட்சம் பேருக்கு எலிக்காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. இதில், ஒரு சதவிகிதத்தினர் இறந்து விடுகின்றனர்.

நன்றி : டாக்டர் விகடன் - 16.10.2016

No comments:

Post a Comment