disalbe Right click

Sunday, October 16, 2016

வீட்டு கூட்டுக்கடன் பெற


வீட்டு கூட்டுக்கடன் பெற என்ன செய்ய வேண்டும்?

இன்றைய காலகட்டமானது வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு பொற்காலம். அதிக வரிச் சலுகைகள், குறைந்த வட்டி விகிதங்கள், கடன் மீது விலை குறைப்பு, தெளிவான விதிமுறைகள், வசீகரமான பரிசுகள் என எண்ணிலாச் சலுகைகளுடன் கிடைக்கிறது.

 நம்மில் அநேகம் பேர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீடு வாங்க   முயற்சிப்போம். வீட்டுக்கு அலையோ அலையென்று அலைந்து கொண்டிருக்கும் போதே எந்த வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் கடன் வாங்கலாம் என்று ஒருவாறாக முடிவுசெய்து வைத்திருப்போம். 

நம் நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை ஒரு முறைதான் கட்டப்போகிறோம், எனவே அதில் அனைத்து சௌகரியங்களையும் இணைத்து மிக அழகாகக் கட்ட வேண்டும் என நாம் நினைப்பது இயல்பு. 

ஆனால் அது சாத்தியப்பட அதிக செலவாகும். அதனால் அதிக தொகைக்கு வீட்டுக்கடன் வாங்க வேண்டும். கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் அது கொஞ்சம் சுலபமாகும்.

அது சம்பந்தமாக என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம். கூட்டாகச் சேர்ந்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது அது நமக்கு பல நன்மைகள் கொண்டு வந்து தரும்.

கூட்டுக்கடன் தரும் நன்மைகள்
 அவற்றுள் முதலாவது மற்றும் முதன்மையானது அதிக கடன் தொகையைப் பெறலாம் என்பது. அதாவது அதிக அளவு கடன் தொகை தேவைப்பட்டால் கூட்டாக விண்ணப்பிக்கலாம். 

உதாரணமாக கணவன் மனைவி இருவருமே சேர்ந்து கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது இருவருடைய மொத்த வருமானத்தின் அடிப்படையில் அதிக அளவு கடன் பெற முடியும். 

மனைவி வேலையில் இல்லாமலிருந்தால் அவருக்குக் கிடைக்கும் வட்டி அல்லது வாடகை அல்லது பிற வருமானங்களின் அடிப்படையில்கூட கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

 இரண்டாவது  மற்றும் முக்கியமான விஷயம் வரி ஆதாயம்.

வருமானவரி சட்டம் பிரிவு 80C-யின் கீழ் ரூபாய் 1லட்சம் வரை வீட்டுக்கடனின் முதலுக்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும். அதாவது நீங்கள் ரூபாய் 1 லட்சம் அளவிற்கு வீட்டுக் கடனுக்கான முதலைத் திருப்பி செலுத்தும்பொழுது பொது வைப்பு நிதி, எல்.ஐ.சி. போன்ற வரி இல்லா முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டியதில்லை.

மேலும் வருமான வரிச்சட்டம் 24-இன் கீழ் உங்களுடைய வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு ரூபாய்1.5 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ரூபாய் 2.5 லட்சம் வரை வரிச் சலுகைகள் கிடைக்கும். அதாவது உங்களுக்கு மொத்தமாக ரூபாய் 5 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு கிடைக்கும்.

இணை கடன் வாங்குபவரும்,  இணை உரிமையாளரும்
கூட்டு வீட்டுக் கடன் என்பது ஒருவருக்கும் அதிகமானவர்கள் கடன் வாங்குவது ஆகும். அதனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் இணை கடன் வாங்குபவர் (co-borrower) மற்றும் இணை உரிமையாளர்(co- owner) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். 

இணை உரிமையாளர் என்பவர் நம்முடன் நம் சொத்தைப் பகிர்ந்துகொள்பவர். 

இணைக் கடன் வாங்கியவர் என்பவர் நம்முடன் கடனைப் பகிர்ந்து கொள்பவர். 

வீட்டுக் கடன் வாங்கும் போது, விதிகளின்படி, 6 பேர் இணைக் கடன் வாங்குபவர்களாகத் திகழலாம். பொதுவாக கணவன், மனைவி, மகன், தந்தை போன்றோர் இணைக் கடன் வாங்குபவராகத் திகழலாம்.

 உங்கள் தோழன், தோழி அல்லது உடன் வேலை செய்வோர் போன்றோருடன் இணைந்து வீட்டுக் கடன் வாங்க முடியாது. 

பொதுவாக வங்கிகள் இணை உரிமையாளர்களையே இணைக் கடன் வாங்குபவராக ஆக்கும்படி வலியுறுத்தும். சில சமயங்களில் சகோதரர்கள் இணை உரிமையாளர்களாக இல்லாமலேயே இணைக் கடன் வாங்குபவர்களாக இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

 கடன் காலம் எவ்வளவு?
 கூட்டு வீட்டுக் கடனின் இணைக் கடன் வாங்கியவர் மனைவி என்றால் கடன் காலம் என்பது 20 முதல் 25 வருடம் வரை நீடிக்கலாம். கூட்டு வீட்டுக் கடனின் இணைக் கடன் வாங்கியவர் தந்தை மகன் உறவு எனில் கடன் காலம் 10 ஆண்டுகளுக்குள் வரையறுக்கப்படுகிறது.

 கூட்டு வீட்டுக் கடன் தந்தையும் மகனும் வாங்குகின்றனர் பேமெண்ட் தந்தையின் வருமானத்தைச் சார்ந்தது என்றால், கடன் காலம் தந்தையின் ஓய்வு பெறும் வயதிற்குள்ளாக வரையறுக்கப்படுகிறது.

வீட்டுக் கடனை இருவராக எடுத்திருந்தாலும் ஈஎம்ஐ ஒரே ஒரு வங்கிக் கணக்கிலிருந்து தான் எடுக்கப்படும்.  அது ஜாயிண்ட் அக்கவுண்ட்டாகவும் இருக்கலாம் அல்லது தனி அக்கவுண்டாகவும் இருக்கலாம். 

கடன் வாங்குபவர்கள் எத்தனை முறை ஈஎம்ஐ அளிக்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம். 

கடன் பெறும்போது வங்கிகள் வங்கி ஸ்டேட்மெண்ட், சம்பளச் சான்றிதழ், கடந்த மூன்று வருடங்களாகத் தாக்கல் செய்த வருமான வரி விவரங்கள், வழக்கமாகக் கேட்கப்படும் அடையாளச்சான்றிதழ்கள், முகவரிச் சான்றிதழ்கள் ஆகியனவற்றைக் கேட்கும். 

இதன் பிறகு பல கட்ட சரிபார்த்தலுக்குப் பின்பே வங்கிகள் கடன் வழங்க அனுமதிக்கும். வயது, சொத்து, வீடு கட்டப்போகும் இடத்தின் மதிப்பு, கடனைத் திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே வங்கிகள் கடன் தொகையை முடிவு செய்யும்.

கூட்டுக் குடும்பத்தின் மூலமும் வீட்டுக் கடன் வாங்க இயலும். ஆனால் அதில் நிறைய வரையறைகள் உண்டு. வீட்டுக்கடன் வாங்க மார்ஜின் தொகைகடன் தொகையில் சுமார் 15 முதல் 20 சதவீதம்) வைத்திருக்க வேண்டும்.

இதன் பிறகுதான் கூட்டுக் குடும்பத்தின் பெயரில் வீடு வாங்குவதற்கான மீதித் தொகையை வீட்டுக் கடன் மூலமாகப் பெறலாம். சில சமயங்களில் கேரண்டாராக (guarantor) சிலரை வங்கிகள் இணைத்துக்கொள்வதும் உண்டு. 

இது போன்ற சந்தர்ப்பங்களில் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்த மறுக்கிறார் எனில் இணைக் கடன் பெற்றவர் அதனைச் செலுத்த வேண்டிய கட்டாயப் பொறுப்பு உள்ளது என்று எச்சரிக்கப்படுவார். 

இருவரும் ஸ்டாம்ப் பேப்பர் மூலம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது நல்லது. 

வங்கிகள் தனது ஒப்புதல் கடிதத்திலேயே அனைவரின் பொறுப்பையும் தெளிவாக உணர்த்திவிடும்.

வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் யாவற்றையும் பங்கு போட்டுக் கொள்வதைப் போலவே வாழ்வின் உன்னத லட்சியமான சொந்த வீட்டை உரிமையாக்கிக் கொள்வதற்கு; இந்த கூட்டு வீட்டுக்கடன் பெரிதும் உதவுகிறது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 15.10.2016

No comments:

Post a Comment