disalbe Right click

Sunday, October 23, 2016

டயாபடிக் ரெட்டினோபதி

டயாபடிக் ரெட்டினோபதி - என்ன செய்ய வேண்டும்?
விழிப்புடன் இருப்போம்! விழித்திரை காப்போம்!
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை எனில், அது நரம்புமண்டலம், ரத்தக் குழாய், சிறுநீரகம், இதயம் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கும்.
சர்க்கரை அளவு அதிகரிப்பால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது, அதை டயாபடீக் நியூரோபதி என்றும், சிறுநீரகம் பாதிக்கப்படும்போது டயாபடீக் நெப்ரோபதி என்றும், கண்கள் பாதிக்கப்படும்போது டயாபடீக் ரெட்டினோபதி என்றும் அழைக்கிறோம்.
டயாபடீக் ரெட்டினோபதி
நாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணின் லென்ஸ் வழியாகச் சென்று, விழித்திரையில் (ரெட்டினா) விழும். அங்கிருந்து நரம்புகள் மூலம் மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு, அது என்ன பொருள் என்று மூளை அதன் படத்தை உருவகப்படுத்தும். எந்த ஒரு பிம்பத்தையும் பார்ப்பதற்கு இந்த விழித்திரை அவசியம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, அதைக் கட்டுப்படுத்தாமல் விடும்போது, விழித்திரைக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். ரத்தக்குழாய்களில் கசிவு ஏற்படும். புதிது புதிதாக ரத்தக்குழாய்கள் வளர ஆரம்பிக்கும். இதனால் பார்வை மங்கலாகத் தெரியும். ஒரு கட்டத்தில் ரெட்டினா முழுவதையும் மறைக்கும் அளவுக்கு ரத்தக் கசிவு ஏற்படும். இதனால், பார்வையே பறிபோய்விடும்.
பொதுவாக, 40 – 50 வயதில் பார்வைத்திறன் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை பரிந்துரைக்கப்படும்.
பெரும்பாலானோர் அப்போதுதான் அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதைத் தெரிந்துகொள்கின்றனர்.
சர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, வாழ்க்கை முறை மாற்றம், மாத்திரை மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் டயாபடீக் ரெட்டினோபதி பிரச்னையை இயன்றவரை தடுக்க முடியும்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
குடும்பத்தில் யாரேனும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், 40 வயதைத் தாண்டிய குடும்ப உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு இருமுறையும் கண் மருத்துவமனைக்குச் சென்று முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு கண்புரை, டயாபடீக் ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண் பார்வையில் ஏதேனும் சிறு குறைபாடு இருப்பதை உணர்ந்தாலும், கண் அழுத்த அளவைப் பரிசோதிக்க வேண்டும்.
மருத்துவர்கள், கண்ணில் சொட்டு மருந்தைவிட்டு, இன்டேரக்ட் ஆப்தல்மோஸ்கோப்பி (Indirect Opthalmoscopy) என்ற பரிசோதனை மூலம் ரத்தக்குழாயில் விரிசல், ரத்தக் கசிவு ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனைசெய்து, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிப்பர்.
சிகிச்சை என்ன?
டயாபடீக் ரெட்டினோபதியில் 10 விதமான நிலைகள் இருக்கின்றன. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால், முதல் ஐந்து நிலைக்குள் இருக்கும்பட்சத்தில் எந்தவித சிகிச்சையும் தேவை இல்லை.
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், டயாபடீக் ரெட்டினோபதியின் தீவிரத்தைத் தடுக்க முடியும். 6 முதல் 10 நிலைகளில் இருந்தால், ரத்தக்குழாய்கள் விரிசல் அடைந்துள்ளதா, ரத்தம் எவ்வளவு கசிகிறது, புது ரத்தக்குழாய்கள் வளர்ந்தி ருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் லேசர் முறையில் கண்ணுக்குள், வெள்ளைப்பகுதியில் 0.5 -0.7 மி.மி அளவுக்கு மிகச் சிறிய துளையிட்டுவிட்ரேக்டமிஎனும் நுண்ணிய அறுவைசிகிச்சை செய்யப்படும்.
கண்புரை பிரச்னை உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை மூலம் மீண்டும் புரையால் இழந்த பார்வைத்திறனைப் பெற முடியும். டயாபடீக் ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம், மீதமிருக்கும் பார்வைத்திறனை காப்பாற்றிக்கொள்ளலாம்.
ரெட்டினோபதியைத் தவிர்க்கலாம்!
சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக பார்வை இழப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளில் ரெட்டினோபதியும் ஒன்று.
ஆனால், இந்தப் பார்வை இழப்பைத் தவிர்க்க முடியும். சர்க்கரை நோயாளிகளில் 90 சதவிகிதம் பேருக்கு ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் வந்தவுடன், உடனடியாக பாதிப்பு இருக்காது.
சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்காதபோதுதான் பாதிப்பு ஏற்படும்.
15 – 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயுடன் இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டயாபடீக் ரெட்டினோபதி பிரச்னை இருந்தால், கண்ணின் ரெட்டினா பகுதி பாதிக்கப்பட்டு, பார்வை இழப்பு ஏற்படும்.
எனவே, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்பைத் தவிர்க்கலாம். முற்றிய நிலையில் பார்வை இழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்.
நன்றி : டாக்டர் விகடன் – 01.08.201

No comments:

Post a Comment