disalbe Right click

Tuesday, November 29, 2016

பெண் சிசு கருக்கலைப்பு தடுப்புச் சட்டம்


பெண் சிசு கருக்கலைப்பு தடுப்புச் சட்டம்-1994 - என்ன செய்ய வேண்டும்?

உலகில் வளர்ந்து வரும் மருத்துவ வளர்ச்சியின் பரிணாமமாக தாயின் கருவில் வளரும் குழந்தையின் செயல்பாடுகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் கண்டுப்பிடித்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதற்காக தயாரிக்கப்பட்ட ஸ்கேன் கருவி இயந்திரம் மூலம் கருவில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதா? அதன் உடல் உறுப்புகள் சீராக உள்ளதா? உயிரோட்டம் நல்லமுறையில் இயங்குகிறதா? சிசுக்கு ஏதாவது நோய் தாக்கியுள்ளதா என்பது குறித்து கண்டறிய பயன்படுத்தப்பட்டதுடன், கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை உறுதி செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

நல்ல நோக்கத்திற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கேன் இயந்திரத்தை பிற்காலத்தில் கருவில் வளரும் சிசு பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அதை கருவிலேயே அழிக்கும் கொடிய செயலுக்கு பெற்றோர்களின் அனுமதியுடன் சில தனியார் மருத்துவமனையில் செயல்படுத்தியது. இது நாடு முழுவதும் பரவ தொடங்கியது. இதன் காரணமாக நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைய தொடங்கியது. நாட்டில் கடந்த 1991ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் இருந்தனர். 

கடந்த 2001ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில் பெண்களின் பிறப்பு விகிதம் 942 ஆக குறைந்தது. கருவில் வளரும் குழந்தை எந்த பாலினத்தை சேர்ந்தது என்பதை கண்டறியும் ஸ்கேன் மூலம் பெண் சிசுவை கருவுற்றிருப்பது தெரிந்து அழிப்பதால், பெண் குழந்தை பிறப்பு குறைந்து வருவதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். கருவில் பெண் சிசு கொலை செய்யப்படுவதை தடுக்கும் சட்டம் கொண்டுவரும் படி மத்திய அரசுக்கு பல வழிகளில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

மக்களின் கருத்துக்கு மதிப்பளித்த அரசாங்கம் கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் முறையை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவர தீர்மானித்தது. அதன்படி The Pre-natal Diagnostic Techbiques (Regulation and Prevention of misuse) Act-1994 என்ற சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்தது. இச்சட்டம் ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து, நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தும் வகையில் அறிமுகம் செய்தது.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: கருவில் வளரும் சிசு பரிசோதனையின் போது விதித்துள்ள நிர்பந்தம்:தாயின் கருவில் வளரும் குழந்தையின் செயல்பாடுகளை கண்டறியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்கேன் இயந்திரத்தை சிசுவின் பாலினத்தை கண்டறிவதற்கு பயன்படுத்தாமல், கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை மட்டுமே பரிசோதிக்க வேண்டும். 

கருவில் உள்ள சிசுவை நோய் பாதித்துள்ளதா? இல்லையா? உடல் ஊனம் உள்பட வேறு ஏதாவது பாதிப்பு உள்ளதா? போன்ற நல்ல நோக்கத்திற்கான சோதனைகள் மட்டுமே நடத்த வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்.

* கருவில் வளரும் சிசு குரோமசோம் குறைபாடுடன் (Chromosomal abnormalities) உள்ளதா அல்லது மரபணு வளர்ச்சியற்ற நோயுடன் (Genetic Metabolic Diseases) உள்ளதா என்பதை கண்டறியவும் அல்லது ரத்த குழாயில் பிராணவாயுவை கொண்டு செல்லும் நாளங்கள்(Haemoglobinopathies) சரியாக இயங்குகிறதா அல்லது  பாலினம் தொடர்பான நோய்கள் (Sex linked genetic diseases) கண்டறிவது அல்லது மத்திய கண்காணிப்பு கழகம் (central supervisory board)  வகுத்துள்ள நோய்கள் கண்டறிவது மட்டுமே. குறிப்பிட்ட நோக்கமில்லாமல் ஸ்கேன் செய்தால் தண்டனை.

மேற்கண்ட நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கருவில் உள்ள சிசுவை ஸ்கேன் செய்தால் அது பெரிய குற்றமாக கருதப்படும். இந்த தவறு செய்திருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒருமுறை தண்டனை பெற்றவர் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

* மேற்கண்ட நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கருவில் உள்ள சிசுவை ஸ்கேன் செய்ய கர்பவதியான பெண் மேற்கொண்டாலும் அது குற்றமாக கருதி மேற்கூறிய தண்டனை வழங்கப்படும். ஒருவேளை இதுபோன்ற பரிசோதனையை அவர் வேரொருவரின் கட்டாயம் மற்றும் நிர்பந்தத்தின் பேரில் செய்தால் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்.

* மேற்கண்ட நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கருவில் உள்ள சிசுவை ஸ்கேன் செய்ய கருவுற்ற பெண்ணின் கணவர் அல்லது உறவினர்கள் ஊக்கப்படுத்தினாலோ அல்லது நிர்பந்தம் செய்தாலோ மேற்கண்ட தண்டனைக்கு உள்ளாவார்கள். இதை நீதிமன்றமும் உறுதி செய்யும்.கருவில் வளரும் குழந்தை குறித்து ஸ்கேன் செய்து பார்க்க விரும்பினால், கீழ்கண்ட நோக்கங்களாக மட்டுமே இருக்க வேண்டும்:

* கர்ப்பிணி பெண்ணின் வயது 35 தாண்டியிருக்க வேண்டும் அல்லது* கர்ப்பிணி பெண்ணுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கரு சிதைவு ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லது கர்ப்பிணி பெண்ணின் கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும் வகையில் அவர் ஏதாவது மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்ளும் பட்சத்தில் சிசுவின் வளர்ச்சியை காண ஸ்கேன் செய்யலாம் அல்லது* அவளின் வம்சத்தில் பிறக்கும் குழந்தை மனநலம் பாதித்தோ, புத்தி சுகவீனத்துடனோ, உடல் ஊனமாகவோ அல்லது வேறு ஏதாவது நோய்பாதித்து பிறந்திருந்தால், தனது கருவில் வளரும் சிசுவின் நிலையை தெரிந்து  கொள்ள ஸ்கேன் செய்யலாம் அல்லது* மத்திய கண்காணிப்பு கழகம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு ஸ்கேன் செய்யலாம். 

கருவில் வளரும் சிசு குறித்து ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யும் நபர் கீழ் கண்ட விதிமுறையை பின்பற்ற வேண்டும்:

* கர்ப்பவதியான பெண்ணிடம் எழுத்து பூர்வமாக கடிதம் பெற வேண்டும். அவர் கையெழுத்து போட்டு கொடுக்கும் இரண்டு கடிதங்கள் வாங்கிகொண்டு, ஒன்றில் பரிசோதனை செய்யும் நபர் கையெழுத்திட்டு சம்மந்தப்பட்டவரின் கொடுக்க வேண்டும்.

* ஸ்கேன் செய்வதின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கர்ப்பிணிக்கு தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டும்.

* பெண்ணின் கருவில் வளரும் சிசு குறித்து ஸ்கேன் செய்தபின் சிசு எந்த பாலினத்தை சேர்ந்தது என்ற விவரத்தை கர்ப்பணி, அவரது கணவர் அல்லது உறவினர்களுக்கு வாய்வழிகவோ, சைகை மூலமோ அல்லது எழுத்து மூலமாகவோ எந்த நிலையிலும் சொல்லக்கூடாது.

* பாலினத்தை கண்டறியும் நோக்கத்தில் ஸ்கேன் செய்வது சட்டபடி குற்றமாகும்.சட்டத்தை மீறினால் தண்டனை என்ன?ஸ்கேன் செய்யும் நபர் கர்ப்பிணி, அவரது கணவர் அல்லது உறவினர்களுக்கு கருவில் உள்ளது என்ன பாலினம் என்பதை சொல்லக்கூடாது மற்றும் பாலினம் கண்டறிவதற்காக ஸ்கேன் செய்யக்கூடாது. அரசாங்கத்தில் உறுதியாக வரையரை செய்துள்ள சட்டத்தை மீறி தனிநபரோ அல்லது மருத்துவமனையோ ஸ்கேன் செய்தால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 

* ஒருமுறை தவறு செய்தவர் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கருவில் வளரும் சிசுவின் பாலினம் கண்டறிவது தொடர்பான விளம்பரம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். அதற்கும் மேற்கண்ட தண்டனை பொருந்தும்.

நன்றி : தினகரன் நாளிதழ் - சட்டம் ஒரு எட்டும் கனி - 29.11.2016

No comments:

Post a Comment