disalbe Right click

Sunday, December 4, 2016

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்


சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்
சென்னை: 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவரை, 180 நாட்கள் வரை காவலில் வைக்க, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மார்ச் மாதம், ரிஸ்வான் ஷெரிப் என்பவர் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார். அவ்வப்போது, அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது. 90 நாட்கள் கடந்த பின், காவல் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, ரிஸ்வான் தரப்பில் காவல் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 'கைது செய்யப்பட்டு, 90 நாட்கள் முடிந்த பின், காவல் நீட்டிப்பு செய்ய, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரமில்லை; எனவே, காவல் நீட்டிப்பு சட்ட விரோதமானது' என, கூறப்பட்டது. 

மனுவை, நீதிபதிகள் ஜெய்சந்திரன், பாஸ்கரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. போலீஸ் தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், 'புலன் விசாரணையை முடிக்க, மாஜிஸ்திரேட்டிடம் அவகாசம் கேட்கப்பட்டது; சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் காவல் நீட்டிப்பு செய்ய, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது' என்றார்.

அதைத் தொடர்ந்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், 180 நாட்கள் வரை காவல் நீட்டிப்பு செய்ய, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது. 

காவல் நீட்டிப்பு செய்வதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக கருதினால் அந்த நடவடிக்கையை, மாஜிஸ்திரேட் மேற்கொள்ளலாம்.

இந்த வழக்கை பொறுத்தவரை, காவல் நீட்டிப்பு செய்வதற்கு தேவையான நடைமுறையை மாஜிஸ்திரேட் பின்பற்றிஉள்ளார். எனவே, காவல் நீட்டிப்பு செய்ததில் நடைமுறை மீறல் எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 03.12.2016

No comments:

Post a Comment