disalbe Right click

Wednesday, January 11, 2017

அட்ரினல்… அற்புத சுரப்பி!

Image may contain: text

அட்ரினல்… அற்புத சுரப்பி!


மிகவும் சிக்கலான தருணம்… இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பிக்கிறது, கையில் வியர்க்கிறது. தப்பிக்க ஏதேனும் வழி உள்ளதா என்று கண்கள் அங்கும் இங்கும் பார்க்கின்றன. அந்தப் பிரச்னையில் இருந்து தப்பிக்க அல்லது பிரச்னையை எதிர்கொள்ள உடலும் மனதும் தயாராகின்றன.
இந்த அத்தனை செயல்பாடுகளும் மிகச் சில விநாடிகளில் நடந்துமுடிகின்றன. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அமைதியாக, வேறு மனநிலையில் இருந்த உடலும் மனமும் எப்படி திடீரென்று தன்னை மாற்றிக்கொண்டன என்று யோசித்தது உண்டா?

இந்த அத்தனைக்கும் அட்ரினல் சுரப்பியில் இருந்து வரும் ஹார்மோன்தான் காரணம். ஆபத்தில் உதவும் நண்பனாக இருக்கும் இந்த ஹார்மோன், அளவுக்கு அதிகமாகச் செயல்படும்போது உடலில் சில பாதிப்புகளையும் உருவாக்கிவிடுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேல் ஒரு தொப்பி போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளன அட்ரினல் சுரப்பிகள். `அட்ரினல்’ என்ற வார்த்தைக்கு, `சிறுநீரகத்துக்கு அருகில்…’ என்று பொருள். இக்கட்டான சூழலின்போது, மைய நரம்பு மண்டல நியூரான்கள் அட்ரினலைத் தூண்டுகின்றன. உடனே, அட்ரினலின் சுரந்து மிக வேகமாக ரத்தம் மூலமாக உடல் முழுவதும் பயணித்து, உடல் உறுப்புகளை, பிரச்னையை எதிர்கொள்ளத் தயார் செய்கிறது.

உடன் மூச்சுக்குழாய் விரிவடைந்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கச் செய்கிறது. ரத்தக் குழாய்களைச் சுருக்கி, தசைகளுக்கு அதிக ரத்தம் கிடைக்கச் செய்கிறது. இதனால்தான், நம்முடைய இதயம் அதிவேகமாக துடிக்கிறது, சுவாசம் பலமாகிறது. இந்த நேரத்தில், உடலில் உள்ள வலிகூட நமக்குப் பெரியதாகத் தெரியாது.

இதனால்தான், காயம் ஏற்பட்டாலும்கூட தப்பி ஓடும் அவசரத்தில் வலி நமக்குத் தெரிவதில்லை. நம்முடைய வலிமை அதிகரித்திருப்பதையும் யாரையும் எதையும் எதிர்கொள்ளும் திறன் வந்திருப்பதையும் உணர்ந்திருக்கலாம். தப்பிப் பிழைத்து ஓடிவந்தாலும் சரி, இந்த அட்ரினலின் விளைவு சில மணி நேரங்களுக்குத் தொடரும்.

தவிர, உடலில் தாதுஉப்புக்கள் அளவை கட்டுக்குள்வைக்க, உடலில் நீர் அளவைக் கட்டுக்குள்வைக்க ஹார்மோன் சுரக்கிறது. அட்ரினல் மட்டும் இல்லை என்றால், சோடியம் உள்ளிட்ட தாதுஉப்புக்களை கட்டுப்பாடு இன்றி சிறுநீரகம் வெளியேற்றி, ரத்த அழுத்தத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். தண்ணீர் அளவு குறைவதால், டீஹைட்ரேஷன் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். மேலும், ஆன்ரோஜன்  (androgen) என்கிற பாலியல் ஹார்மோனையும் சிறிதளவு சுரக்கிறது.

 அட்ரினல் சுரப்பு குறைந்தால்…
அடிசன்ஸ் நோய்

அட்ரினல் சுரப்பில் ஏற்படும் `கார்ட்டிசோல்’ (Cortisol) என்ற ஹார்மோன் குறைபாட்டால் இந்த நோய் ஏற்படுகிறது. மேலும், காசநோய்த் தொற்றுகளாலும், நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடுகளாலும் ஏற்படுகிறது. இந்த நோய் ஒரு லட்சம் பேரில் ஒருவரைப் பாதிக்கிறது. ஆண்கள், பெண்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த நோய் வரலாம்.
பாதிப்புகள்: இந்த ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மிகவும் குறையும்.  உடல் எடை குறைதல், எலும்பு மெலிதல் போன்ற பிரச்னைகள் வரும். வாய் மற்றும் தோல் பகுதிகள் கறுப்பு நிறத்துக்கு மாறும்.

தீர்வு: மாத்திரைகள், ஊசிகள் மூலமாக இதனைக் குணப்படுத்த முடியும்.

அட்ரினல் சுரப்பு அதிகரித்தால்…
குஷிங் சிண்ட்ரோம் (Cushing syndrome)

அட்ரினல், அட்ரினலைக் கட்டுப்படுத்தும் பிட்யூட்டரி ஆகிய சுரப்பிகளில் கட்டி இருப்பதன் காரணமாக, அதிக அளவில் `கார்ட்டிசோல்’ (Cortisol) ஹார்மோன்கள் சுரந்தால், குஷிங் சிண்ட்ரோம் ஏற்படும்.
பாதிப்புகள்: ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். உடல்பருமனாகும்; தோல் வெளிறிப்போகும்; எலும்பு முறிவு ஏற்படக்கூடும்.

தீர்வு: ரத்தப் பரிசோதனை மற்றும் சி.டி ஸ்கேன் மூலம், அட்ரினல், நுரையீரல், பிட்யூட்டரி ஆகிய இடங்களில் கட்டி எங்கு உள்ளது என்பதைக் கண்ட றிந்து, அந்தக் கட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்.

பியோகுரோமோசைட்டோமா (Pheochromocytoma) 

அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டியால், `அட்ரினலின்’ மற்றும் `நார்அட்ரினலின்’ ஆகியவை அதிகமாக உற்பத்திசெய்யப்படும். அப்போது, `பியோகுரோமோசைட் டோமா’ எனப்படும் நோய் ஏற்படுகிறது.
பாதிப்புகள்: ரத்த அழுத்தம் அதிகமாதல், பயம், படபடப்பு, வியர்த்துக் கொட்டுதல், தலைவலி போன்றவை ஏற்படும்.

தீர்வு: இதற்கு, ஹார்மோன் பரிசோத னை செய்த பின், அந்தக் கட்டிகளை அறுவைசிகிச்சை மூலம் அகற்றலாம்.

கான்ஸ் சிண்ட்ரோம் (Conn’s syndrome)

அட்ரினல் சுரப்பியில் கட்டிகள் இருந்தால், ‘அல்டோஸ்டீரோன்’ (Aldosterone) என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இதனால், ‘கான்ஸ் சிண்ட்ரோம்’ என்ற நோய் உண்டாகலாம். இது, `பிரைமரி ஆல்டோஸ்டீரோனிசம்’ (Primary Aldosteronism) என்றும் அழைக்கப்படுகிறது.
பாதிப்புகள்: அல்டோஸ்டீரோன், உடலில் பொட்டாசியம் அளவு சீராக இருக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அல்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமாகச் சுரந்தாலோ, சுரக்காமல் போனாலோ, பொட்டாசியம் அளவு குறைந்து, ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

தீர்வு: அறுவைசிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டும்.

அட்ரினல் சுரப்பில் என்சைம் குறைபாடு ஏற்பட்டால்…

பெண்கள், குழந்தைகளுக்கு இந்தச் சுரப்பிகளில் சுரக்கும் `17 – ஹைட்ராக்ஸி புரோஜெஸ்டிரோன்’ (17-Hydroxyprogesterone) என்ற என்சைமின் குறைபாட்டால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பாதிப்புகள்: பிறந்த குழந்தைகளுக்கு சில நாட்களில் `உப்புபோக்கல்’ (Salt waste) என்ற நோய் ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பால், போதுமான அளவைவிட உப்பின் அளவு குறைந்துபோவதால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தீவிரமான மருத்துவப் பிரச்னை, இது.

தீர்வு: வளர வளர இந்த நோயின் தாக்கம் குறையும். இருந்தாலும், பருவமடைந்த பெண்களுக்கு முகத்தில் அதிகமாக முடி வளர்தல், மாதவிடாய்க் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பிரச்னைகளை மருந்து, மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பாதிப்பை கண்டறிய முடியும்!

அட்ரினல் சுரப்பியைப் பொறுத்தவரை, பிட்யூட்டரி சுரப்பிதான் அதைக் கட்டுப்படுத்தும். பிட்யூட்டரி சுரப்பியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால்கூட, அட்ரினல் சுரப்பியில் பிரச்னை வரலாம். அட்ரினல் சுரப்பி சீராகச் செயல்படுவதை அறிய, சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை இருந்தால், மருத்துவர் பரிந்துரையின்படி ஹார்மோன் டெஸ்ட் செய்துகொண்டு, மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 அட்ரினல் சுரப்பதால், ஏற்படும் நன்மைகள்…

அட்ரினல் சுரப்பின்போது, வெளியாகும் ஹார்மோன்களால் உடலின்  வேதிமாற்றம் துரிதப்படுகிறது.
நெருக்கடியான சமயங்களில் இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்து, ரத்தத்தோடு கலந்து உடலுக்கு ஏற்படுகிற ரத்த அழுத்தம் போன்ற பிரச்னையில் இருந்து பாதுகாக்கிறது.

உடலில் உள்ள தாதுப்பொருட்களைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

புரதம், கொழுப்புச்சத்து, மாவுச்சத்து போன்றவற்றைச் செரிக்கச்செய்து, உடலின் வளர்சிதை மாற்றத்துக்குத் துணைபுரிகின்றன. மாவுச்சத்துக்களை குளூக்கோஸாக மாற்றவும் அவற்றைக் கல்லீரலில் சேமித்துவைக்கவும் உதவுகின்றன.

நன்றி : டாக்டர் விகடன் - 16.12.2016


No comments:

Post a Comment