disalbe Right click

Tuesday, January 17, 2017

காலையில் சாப்பிடாவிட்டால் என்னாகும்?


காலையில்  சாப்பிடாவிட்டால் என்னாகும்?

காலையில் சாப்பிடாவிட்டால்...

மனித இனத்தை வாழ வைப்பது உணவு. மனித இனம் உணவுக்காகவே, அடிப்படையில் உழைக்கிறது. ஆனால் தற்போதைய அவசர உலகில், நம்மில் பலருக்கு உணவு உண்பதுகூட அவசரமாகிவிட்டது அல்லது காலம் தவறிச் சாப்பிடும் பழக்கத்தைப் பெரும்பாலோர் வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதற்குப் பலரும் கூறும் காரணம், உடல் எடை குறைப்பு.

ஆனால், அப்படிச் செய்வதால் எந்த நோக்கத்துக்காக உணவை ஒதுக்குகிறோமோ, அதுவே எடையை அதிகரித்துவிடும் ஆபத்து இருக்கிறது.

எப்படியென்றால் ஒரு பொழுது உணவை ஒதுக்கி வைத்துவிட்டு, மறுபொழுது சாப்பிடும்போது அதிகப் பசி வேட்கையால் நம்மை அறியாமலேயே சற்று அதிகமாகவே சாப்பிடுகிறோம். இதனால் உடல் எடை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.

அதேபோல், ஒரு வேளை உணவை ஒதுக்கும் பழக்கத்தை நீண்டகாலம் கடைப்பிடித்துவந்தால், வயிற்றுப்புண் வரும் சாத்தியம் அதிகம். சத்துக் குறைபாடு உண்டாகும் சாத்தியமும் உள்ளது.

பிரச்சினை என்ன?

உடலில் உணவு செரிமானத்துக்கு பெரிதும் துணைபுரியக்கூடிய ‘மெட்டபாலிஸம்' எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும். காலை உணவை நாட்படத் தவிர்க்கும்போது, உணவிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸை கிரகிக்க உதவும், கணையத்திலிருந்து சுரக்கக்கூடிய இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படும்.

அறியாமையால் இதைச் சில காலம் தொடர்ந்து செய்தோமானால், நம்முடைய சர்க்கரையைப் பயன்படுத்தக்கூடிய திறன் இன்சுலினுக்கு இல்லாமல் போகும். இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து, நீரிழிவு நோய் வர 20 சதவீதம் அதிகச் சாத்தியம் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன
.
தற்போதைய ஆராய்ச்சிகள் காலை உணவைக் கண்டிப்பாக ஒதுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றன. பெரும்பாலும் இரவு உணவை உண்ட பிறகு உறங்கி விடுகிறோம். காலை எழுந்து வேலைக்குச் செல்லும் அவசரத்தில் பெரும்பாலோர் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையே உள்ள இடைவெளிதான், ஒரு நாளில் உடலில் உணவு உண்ணாமலிருப்பதில் மிக அதிகம். அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் காலை உணவை ‘பிரேக்ஃபாஸ்ட்' என்கிறார்கள். அதாவது ‘பிரேக் தி ஃபாஸ்ட்டிங்' என்பதே இதன் அர்த்தம். விரதத்தை முறிப்பது. எனவே, இந்த நிலையில் உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது.

உணவுத் திணிப்பு

இன்னும் சிலரோ காலை உணவைக் கட்டாயமாகச் சாப்பிட வேண்டுமே என்கிற கடமைக்காக அவசர அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு, விழுங்க முடியாத குறைக்குத் தண்ணீரையும் சேர்த்துக் குடித்துச் செல்கின்றனர். இப்படிச் செய்வதும் தவறே… நன்றாக மென்று சாப்பிடும்போதுதான், நம் வாயிலிருந்து சுரக்கும் உமிழ்நீரிலிருந்தே செரிமானம் ஆரம்பிக்கத் தொடங்கும். இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் அடைந்து உடலில் சேரும்.

நன்கு மென்று, மெதுவாகச் சாப்பிடும்போது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் நம் மூளைக்கு ‘போதும்' என்னும் கட்டளையைப் பிறப்பிப்பதாகவும், இதனால் அதிகம் சாப்பிடாமல் இருக்க முடியும் எனவும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது? (Journal of Clinical Endocrinology & Metabolism, July 2, 2013). உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

மேலும் தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள் சரியான நேரத்துக்கு, சரியான உணவை - முக்கியமாகக் காலை உணவைத் தவிர்க்காமல் குறிப்பிட்ட அளவில் மட்டும் சாப்பிட்டுவந்தால் தொப்பை மேலும் அதிகரிக்காது, குறையவும் வாய்ப்பு உண்டு.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

ஆங்கிலத்தில் உணவு உண்பது பற்றி பிரபலப் பழமொழி ஒன்று உண்டு:

“அரசனைப் போலக் காலை உணவை உண்ணுங்கள்,

இளவரசனைப் போல மதிய உணவை உண்ணுங்கள்,

இரவு பரம ஏழையைப்போல உண்ணுங்கள்”

என்பதே அது.

அதாவது, காலையில் சரியான நேரத்துக்கு நன்கு உணவு உண்டால், அன்றைய வேலைகளைச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும். மதிய உணவைக் காலை உணவின் அளவைவிடவும் குறைவாக உண்டால் ‘உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு' என்னும் பழமொழியில் சிக்காமல், வேலைகளில் கவனம் செலுத்தலாம்.

இரவு மிதமாக உணவு உட்கொண்ட பின் உறங்கச் செல்லும்போது, எந்தவித செரிமானத் தொந்தரவும் இல்லாமல் நல்ல உறக்கம் வரும்.

ஆனால், இந்தப் பழமொழியை அப்படியே தலைகீழாக நாம் கடைப்பிடிக்கிறோம். பெரும்பாலோர் இரவுதான் அதிக அளவு சாப்பிடுகிறார்கள். இது ‘நைட் ஈட்டிங் சிண்ட்ரோம்' எனப்படுகிறது. விழித்திருப்பதைவிட உறக்கத்தில் உடல் அசைவுகள் குறைவாக இருப்பதால், இரவு அதிகம் உண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். ஆழ்ந்த தூக்கமும் வராது. இதைத் தவிர்க்க உண்ட உடனேயே தூங்கச் செல்லாமல், சிறு நடை போட்ட பிறகு உறங்கலாம்.

சாப்பிடும் முறை: 

சித்த மருத்துவம் காட்டும் வழி

சித்த மருத்துவத்தில் காலை, மதியம், இரவு எந்த வகையான உணவுப் பண்டங்களைச் சாப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

காலை:

 பயறு வகைகள், கடலை, உளுந்து, எள்ளு, மொச்சை உணவு வகைகளை, கடுகு, மிளகு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றுடன் இணைத்து உட்கொள்ளலாம். மேற்கூறியவை செரிப்பதற்குச் சற்றுக் கடினமாக உள்ள உணவுகள். சுக்கு, மிளகு போன்றவை இந்த உணவுகளில் உள்ள கடினத் தன்மையைக் குறைக்கத் தேவையான செரிமானச் சுரப்புகளைத் தூண்டும் பண்பு கொண்டவை. காலையில் இவற்றைச் சாப்பிட்டுவிட்டு உழைத்தால் உடலில் சத்தும் நிறைந்து தங்கும். உணவு செரிமானம் அடைவதும் எளிதாக இருக்கும்.

மதியம்: 

கிழங்கு வகைகள், பழ வகைகள், கீரைகள், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். இந்த உணவு வகைகள் அனைத்தும் மந்தப் பதார்த்தங்கள். இவற்றிலும் பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்துச் சமைக்கும்போது, மந்தத் தன்மை மட்டுப்படும். மேலும் சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பாலும் செரிமானம் எளிதில் நடைபெறும்.

இரவு: 

அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, வேகவைத்த உணவு வகைகள் போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ண வேண்டும்.

தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என வகுத்துள்ளதை நவீன அறிவியல் ஆராய்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் சிறப்பாகப் பொருந்தும். நம் நாட்டு உணவை நேரம் தவறாமல் சாப்பிடப் பழகுவோம், நோய்களில் இருந்து விலகி நிற்போம்.

கட்டுரையாளர், 
டாக்டர் திருவருட்செல்வா சித்த மருத்துவர்
தொடர்புக்கு: siddhathiru@gmail.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.01.20147

No comments:

Post a Comment