disalbe Right click

Tuesday, January 17, 2017


சுனில் பார்தி மிட்டல் - ஏர்டெல் அதிபர்

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!

கையில் ஒன்றுமே இல்லாமல் தந்தையிடம் இருந்து வாங்கிய 15,000 ரூபாய்  பணத்துடன் தொழில் தொடங்கலாம் என்று பஞ்சாப் லூதியானாவிலிருந்து கிளம்பிய இளைஞர் இவர். இன்று பில்லியன் டாலர் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர். பார்தி குழுமம் என்ற ஆலமரத்தின் ஆணிவேர், அந்த நிறுவனத்தைத் தொடங்கிய சுனில் பார்தி மிட்டல்.

   சைக்கிள் பாகங்கள் விற்றவர்!

1976-ல் 18 வயது நிரம்பிய இளைஞர் கல்லூரியின் கடைசி நாளை முடித்துவிட்டு வெளியே வந்தார். அவருடைய கையில் எதுவுமே இல்லை. ஆனால், கண்கள் நிறைய கனவு இருந்தது. அவரது குடும்பத்தில் அவர்தான் முதன்முறையாக பிசினஸ் செய்யலாம் என்று புறப்பட்ட முதல் தொழில் முனைவர். 

தந்தையிடம் இருந்து வாங்கிய 15,000 ரூபாய் பணத்தை வைத்து சைக்கிளின் ஒரு பாகமான க்ராங்க் ஷாஃப்ட்டை உற்பத்தி செய்து விற்கத் தொடங்கினார். ஒரு லாரியில்  பொருட்களை எடுத்துக்கொண்டு போய் நேரடியாக அவரே விற்பார். இரண்டு வருடத்தில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், நூல் உற்பத்தி போன்ற பிசினஸில் இறங்கினார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த தொழிலில் அவருக்கு திருப்தியே ஏற்படவில்லை.

வளர்ச்சிக்கு மிக முக்கியமான அளவுகோல்,  விற்பனைதான். சைக்கிள் தொழில் அவருக்குக் கைகொடுப்பது போல் இல்லை. அதை விட்டுவிட்டு, வாய்ப்புகளைத் தேடி 1980-ல் மும்பைக்கு ரயில் ஏறினார். சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட முனைந்தபோதுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.

   கற்றுக்கொடுத்த சர்வதேச வர்த்தகம்!

ஜப்பானின் சுஸூகி மோட்டார்ஸுடன் சேர்ந்து ஜெனரேட்டர்களை இறக்குமதி செய்து விற்கும் பிசினஸைத் தொடங்கினார். சர்வதேச வர்த்தகமானது அவருக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி, பிராண்டிங் செய்வது எப்படி என்பது போன்ற பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. சர்வதேச சந்தையில் தொழில் செய்தபோதுதான் வாய்ப்புகள் எங்கே எல்லாம் இருக்கிறது, அவற்றை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுஅவருக்குத் தெரிந்தது.

மேலும், முதன்முறை தொழில் செய்யவரும் பலருக்கும் இருக்கும் பிரச்னை அவருக்கும் இருந்தது. ஒன்று, வாய்ப்பை சுவீகரித்துக் கொள்வதற்குத் தேவையான முதலீடு அவரிடம் இல்லை; இரண்டு, பிசினஸை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான, திறமையான நபர்களைக் கொண்ட குழு.
இந்த இரண்டு  பிரச்னையையும் தாண்டி வர அவர் ஒரு வழி கண்டுபிடித்தார். பெரிய நிறுவனங்களோடு சேர்ந்து தொழில் செய்வதுதான் அது.

ஆனால், அவர் தொழில் செய்ய வந்த போது, பல தொழில்கள் அரசு கட்டுப் பாட்டிலும், சில தொழில் அதிபர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. அவ்வளவு எளிதில் யாரும் தொழில் துறை சார்ந்த தொழில்களைப் பெரிய அளவில் தொடங்கிவிட முடியாது. என்ன உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருந்தன. அப்படி இருந்த பல தடைகளை எல்லாம் மீறித்தான் தொழில் செய்வதற்கான அனுமதியை வாங்கினார் சுனில். 

   டெலிகாம் துறையின் முதல் முயற்சி!

1991 – 92 இடைப்பட்ட காலம்தான் சுனில் மிட்டலின் வாழ்க்கையில் மறக்கமுடியாத பொற்காலம். அப்போதுதான் மொபைல் நெட்வொர்க்குகளுக்கான டென்டரை அரசு அறிவித்தது. அப்போது பெரிய நிறுவனங்கள் எல்லாம் பின்வாங்கியது. சுனில் மிட்டல் துணிந்து இறங்கினார். இரண்டு, மூன்று வருடங்களில் டென்டர் எடுத்த பிற நிறுவனங்கள் எல்லாம் தோல்வி அடைந்தன. ஆனால், பார்தி நிறுவனம் டெலிகாம் துறையில் பல கஷ்டங்களுக்கு இடையே தொடர்ந்து செயல்பட்டு வந்தது.  

1983-ல் முதல் புஷ் பட்டன் டெலிபோனையும், கார்ட்லஸ் போன் மற்றும் ஃபேக்ஸ் மெஷின் போன்றவற்றையும் அவர்தான் இந்தியாவுக்குக்  கொண்டு வந்தார். 2003-ல் இருந்துதான் பார்தி ஏர்டெல் என்ற பிராண்டின் கீழ் சேவையைத் தரத் தொடங்கியது. இன்று இந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர் உருவாக்கிய ஏர்டெல் சாம்ராஜ்யத்தின் சேவையைவிட அதிக சேவை தர வேறு எந்த டெலிகாம் நிறுவனமும் இல்லை.

அசாத்திய திறமை!

2000 – 2005 இடைப்பட்ட காலத்தில் பார்தி செல்லுலார் அடைந்த வளர்ச்சி எவராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. 2005-ல் இந்தியாவில் அசைக்க முடியாத ஆலமரமாக பார்தி ஏர்டெல் நின்றது. அவர் டெலிகாம் துறையில் நுழைந்த அதே சமயம், வேறு சில நிறுவனங்களும் டெலிகாம் துறையில் இருந்தன. ஆனால், அந்த நிறுவனங்கள் போட்டி போட முடியாத அளவுக்கு தரமான சேவையை எல்லாத் தரப்பினருக்கும் அளித்ததுதான் சுனில் மிட்டலின் வெற்றிக்கு முக்கிய காரணம்!  

   நோ சொல்லவும் தெரியும்!

ஒரு நல்ல பிசினஸ்மேனுக்கு எது வேண்டாம், எது வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அது சுனிலுக்கு கைவந்த கலையாக இருந்தது. தன் வளர்ச்சிக்காக சரியான நிறுவனங் களுடன் கூட்டு வைத்துக்கொண்ட சுனில், அதேநேரத்தில் உள்நோக்கத்தோடு அணுகும் பிசினஸ் டீலிங்ஸைத் தவிர்க்கவும் தெரிந்து வைத்திருந்தார்.

இந்தியாவில் 2ஜி அலைக்கற்றை மட்டுமே இருந்த சமயம், 3ஜி அலைக்கற்றைக்கு மாற வேண்டிய கட்டாயம் வந்தது. வேறு யாரேனும் அந்த இடத்தைப் பிடிப்பதற்குள் ஏர்டெல் அதைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினார் சுனில். அப்போது ரத்தன் டாடா தானாகவே முன்வந்து ரூ.1,500 கோடி தருவதாக அறிவித்தார். அதற்கு சுனில் சொன்ன பதில் அனைவரையும் திடுக்கிட வைத்தது.

“பிரதமரின் நிவாரண நிதித் திட்டம் இருக்கிறது. நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் அதற்குக் கொடுக்கலாம்” என்றார். பின்னர் ரத்தன் டாடா தருவதாகச் சொன்ன தொகையைவிட 80%  கூடுதலாகவே சுனில் மிட்டல் முதலீடு செய்தார். அதன் மதிப்பு 2012-ல் ரூ.14,000 கோடியாக உயர்ந்தது.

   நெருக்கடிகளுக்கு ஆளான ஏர்டெல்!

2008-க்குப் பிறகு டெலிகாம் துறையில் பெரிய அளவில் போட்டி ஆரம்பித்தது. ஏர்டெல்லுக்கு நெருக்கடி கொடுக்க இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வரிசை கட்டின. அவை பெரும் பணத்தை முதலீடு செய்து ஆஃபர்களை அள்ளித் தந்தன. மக்களும் ஆஃபர்களைப் பார்த்து, அந்த நிறுவனங்களின்  நெட்வொர்க்குகளுக்குத் தாவினர். மெள்ள அவற்றின் சந்தை மதிப்பு உயர ஆரம்பித்தது. ஏர்டெல் சந்தை மதிப்பு குறைய ஆரம்பித்தது.

ஆனால், அந்த நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளிவிட்டனவே தவிர, சேவையில் தரம் இல்லாததால் தடுமாற ஆரம்பித்தன. ஆஃபர்களைக் கொடுத்து வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் அவர்களின் திட்டம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தரத்திலும், சேவையிலும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாமல் மேலும் மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தியதால், சுனில் தனது நிறுவனத்தை மக்கள் மனதில் இடம்பெறச் செய்தார். 

   நிறுவன அரசியலுக்குள் சிக்கிய தருணம்!

பார்தி குழுமம் நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில், அதன் நிறுவனத்துக்குள்ளேயே அரசியல் நடக்க ஆரம்பித்தது. உயர் அதிகாரிகளிடையே முரண்பாடுகளும், பிரச்னைகளும் அதிகமாகின. திறமையானவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். இதனால் நிறுவனத்தின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்க சுனிலுக்கு இரண்டு வருடங்கள் ஆனது.

 உயர் அதிகாரிகள் உள்பட நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களை எல்லாம் பாரபட்சமின்றி வெளியேற்றினார். 

திறமையானவர்களை உள்ளே கொண்டு வந்தார். தொழிலில் பொறுப்புகளைச் சரியான நபரிடமே கொடுத்திருந்தாலும் அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்பதை அவர் அப்போதுதான் உணர்ந்தார். 

நேரத்தை விற்றுப் பணக்காரர் ஆனவர்!

பிசினஸ் நடத்துவது எப்படி என்பதை  சுனிலிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று 40 வருட அனுபவம் கொண்ட டுவா கன்சல்டிங் தாளாளர் பி.கே. சிங்கால் கூறுகிறார். காரணம், சுனிலின் பிசினஸ் டீலிங் பேசும் அணுகுமுறைதான்.

அவர் தனது பார்ட்னர்களுடன் பிசினஸ் டீலிங் பேசும்போது, “நான் நிமிடங்களை உற்பத்தி செய்து விற்கிறேன். அதை உற்பத்தி செய்வதற்கான மெஷின்களை நீங்கள் எனக்கு சப்ளை செய்யுங்கள். ஆனால், விற்பனை ஆகும் நிமிடங்களுக்கு மட்டுமே நான் பணம் தருவேன்” என்பாராம். அவருடைய இந்த ‘மினிட்ஸ் ஃபேக்டரி’ பிசினஸ் மாடல்தான் சர்வதேச டெலிகாம் துறைக்கே முன்மாதிரியாக மாறியது.

   உலகின் நான்காவது பெரிய நிறுவனம்!

இன்று 35 கோடி வாடிக்கையாளர்களுடன் உலகின் மூன்றாவது பெரிய டெலிகாம் கம்பெனியாக இருக்கிறது ஏர்டெல்.  அவருடைய சொத்து மதிப்பு சுமார் 39,000 கோடி ரூபாய்க்கு மேல். பார்தி நிறுவனத்தின் நிகர வருமானம் சுமார் 91,000 கோடி ரூபாய்க்கு மேல். 
சுனில் மிட்டல் டெலிகாம் துறைக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். 

பிசினஸில் வெற்றி பெற முதலீடு முக்கியமில்லை, வித்தியாசமான அணுகுமுறைதான் அவசியம் என்கிற பாடத்தை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

**************************************************ஜெ.சரவணன்
 நன்றி : நாணயம் விகடன் - 15.01.2017

No comments:

Post a Comment