disalbe Right click

Saturday, February 11, 2017

Image may contain: text

முருத் ஜைஞ்சிரா கோட்டை
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கடற்கரை கிராமமான முருத்தில் இருந்து சற்று தொலைவில் அரபிக்கடலுக்குள் இருக்கும் சிறிய தனித்தீவு ஒன்றில் மேல் கட்டப்பட்டிருக்கும் 'முருத்-ஜைஞ்சிரா' கோட்டையானது இந்தியாவிலிருக்கும் மிகவலிமையான கடல் கோட்டைகளுள் ஒன்றாகும்.
அக்காலத்தில் உலகின் மிக வலிமையான கடற்படைகளை கொண்டிருந்த போர்த்துகீசியர்களுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் மராத்தியர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய இக்கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். 

தீவுக்கோட்டை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையிலிருந்து 165கி.மீ தெற்கே ரைகாத் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான முருத்தில் இருந்து சற்றே தொலைவில் அரபிக்கடலுள் முட்டை வடிவ பாறையின் மேல் கட்டப்பட்டிருக்கிறது 'முருத் ஜைஞ்சிரா' என்னும் தீவுக்கோட்டை. 

தீவுக்கோட்டை - பெயர் காரணம்:
அரபி மொழியில் தீவு என்று பொருள்படும் 'ஜசேரா' மற்றும் இக்கோட்டையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களான சித்திக்களை குறிக்கும் 'முருத்' என்ற மராத்திய சொல்லின் கலவையே 'முருத் ஜைஞ்சிரா' ஆகும். 

முருத் ஜைஞ்சிராவின் அமைப்பு :
முருத் ஜைஞ்சிரா கோட்டையின் முக்கிய வாயில் கரையிலிருக்கும் ராஜாபுரியை நோக்கியபடி அமைந்துள்ளது. இந்த நுழைவுவாயிலின் சிறப்பம்சமே கரையிலிருந்து வருகையில் இவ்வாயிலுக்கு 12.மீ அருகில் வருகையில் தான் தெளிவாக புலப்படும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. 
எதிரிப்படைகள் கோட்டை வாயிலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கவே இந்த ஏற்பாடாகும்.

மேலும் இக்கோட்டையை சுற்றிலும் 21கோட்டை கொத்தளங்கள் இருக்கின்றன. இன்றும் உறுதியாக நிற்கும் இக்கொத்தளங்களின் மேல் இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் தயாரிக்கப்பட்ட நெருப்பை உமிழும் மிகப்பெரிய பீரங்கிகள் நிறுவப்பட்டிருக்கின்றது.

முருத் ஜைஞ்சிராவினுள் இயங்கிய குட்டி நகரம்:
தனித்தீவாக அமைந்திருக்கும் இந்த கோட்டையினுள் கிட்டத்தட்ட ஒரு குட்டி நகரமே இயங்கிவந்திருக்கிறது. மாளிகைகள், அரசு அலுவலர்கள் தங்குவதற்கான விடுதிகள், மசூதி, 60அடி ஆழமுடைய இரண்டு நன்நீர் குளங்கள் போன்றவை இருந்திருகின்றன.

இக்கோட்டையினுள் சித்தி நவாப்புகள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகைகள் இன்றும் பொலிவுடன் இருக்கின்றன. இக்கோட்டையில் இருக்கும் சவ்ரி, லண்ட கசம், கலால் பங்க்டி என்ற பெயர்கொண்ட மூன்று பீரங்கிகள் நெடுந்தொலைவில் இருக்கும் இலக்குகளையும் கூட துல்லியமாக தாக்கும் வல்லமையுடன் இருந்திருக்கின்றன. 

முருத் ஜைஞ்சிராவின் வரலாறு:

முதன்முதலில் 15ஆம் நூற்றாண்டில் மராத்திய மீனவ தலைவராக இருந்த ராஜாராம் பாட்டில் என்பவரால் இக்கோட்டை சிறிய அளவில் கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் 17ஆம் நூற்றாண்டில் அஹமத் நகர் சுல்தானிடம் அமைச்சராக இருந்த சித்தி இனத்தவரான மாலிக் அம்பர் என்பவரின் கட்டுப்பாட்டில் இக்கோட்டை வந்திருக்கிறது. 
இவரைத்தொடர்ந்து வந்த புர்ஹன் கான் என்பவர் இக்கோட்டையை மிகப்பெரியதாகவும், தகர்க்கமுடியாத வலிமை கொண்டதாகவும் மாற்றியிருக்கிறார்.

கைப்பற்றமுடியாத இரும்புக்கோட்டை :

கடந்த 350 ஆண்டுகளாக யாராலும் கைப்பற்ற முடியாத கோட்டை என்ற சிறப்பை முருத் ஜைஞ்சிரா பெற்றுள்ளது. மாராத்திய மன்னன் சிவாஜி பலமுறை இக்கோட்டையை கைப்பற்ற முனைந்து தோல்வியடைந்திருக்கிறார். 
சிவாஜியின் மகனான மன்னன் ஷாம்பாஜியும், போர்த்துகீசியர்களும், பிரிட்டிஷ் படைகளும் கூட இக்கோட்டையை கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்திருக்கின்றன. 

இன்றைய நிலை:

இந்தியாவில் இருக்கும் அரிய வரலாற்று சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழும் இக்கோட்டையை சுற்றிப்பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
முருட் ஜஞ்சிரா கடல் கோட்டையை ராஜபுரி ஜெட்டியிலிருந்து அடையலாம்.

தொன்மை வாய்ந்த கோட்டையை தவிர இந்த முருட் நகரம் அற்புதமான விடுமுறை ஸ்தலமாகவும் உள்ளது. இங்குள்ள கடற்கரை தூய்மையான வெண்ணிற மணலுடன் வரிசையாக பாக்கு மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் அணிவகுத்திருக்க இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது. சுற்றிலும் பசுமையுடன் ஸ்படிகம் போல் சூரிய வெளிச்சத்தில் மின்னும் கடல்நீர் சுற்றுலா பயணிகளை காந்தம் போன்று வெகுவாக கவர்ந்து ஈர்க்கிறது. 

நன்றி : Nativeplanet » Tamil » Travel Guide - 29.02.2016

No comments:

Post a Comment