disalbe Right click

Friday, April 21, 2017

தோப்புக்கரணம் போடுவதால் உண்டாகும் பலன்கள்

தோப்புக்கரணம் போடுவதால் உண்டாகும் பலன்கள்

உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்கும் தோப்புக்கரணம்!
நாமெல்லாம் பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுதப் போகும்போது முச்சந்தி பிள்ளையாருக்கு ஒன்பது தோப்புக்கரணம் போட்டுவிட்டு போனோமே...உங்களுக்கு ஞாபகம் வருகிறதா..?

இன்றும் "பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுடா... நல்லா படிப்பு வரும்''னு சில தாத்தாக்கள் பேரன்களுக்கு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த காலத்தில் பள்ளிக்கூடங்களில்கூட 'தூக்கம்' என்பதை 'துக்கம்' என எழுதும் மக்கு மாணவர்களை தண்டிக்கவும், தப்புக் கணக்குப் போடும் மாணவர்களை திருத்தவும் வாத்தியார்கள் தோப்புக்கரணம் போட வைப்பார்கள். பெரியவர்கள் உட்பட அனைவருமே பிள்ளையார் கோயிலுக்கு போனால் முறையாக அமர்ந்து எழுந்து தோப்புக்கரணம் போடுவது வழக்கம்.

ஆனால் இன்று 'ஃபாஸ்ட் ஃபுட்' சாப்பிடுவது போல சாமி கும்பிடுவதும் சுருங்கிப் போனதால் தோப்புக்கரணம் போடுவதை பலரும் விட்டுவிட்டார்கள்.

நம் பெரியவர்கள் கற்றுத் தந்த இந்த தோப்புக்கரணத்தை இன்றைக்கு வெளிநாட்டுக்காரன் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான்.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர், எரிக் ராபின்ஸ் தோப்புக்கரணத்தை பற்றிச் சொல்லும்போது, "இந்த உடற்பயிற்சி மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் தூண்டப்பட்டு சக்தி பெறுகின்றன.'' என்கிறார். 

அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். மேலும், தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் இந்த உடற்பயிற்சியை சில நாட்கள் தொடர்ந்து செய்தபிறகு, நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாகவும் அவர் கூறுகிறார்.

அதேபோல யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர், ''தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன'' என்று சொல்கிறார்.

''இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன, மூளையின் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது.'' எனவும் அவர் சொல்கிறார்.

அட, நாம் தப்பு செய்யும்போது நம் வாத்தியார்கள் நம் காதுகளைப் பிடித்து ஏன் திருகினார்கள், ஏன் தோப்புக்கரணம் போட வைத்தார்கள் என இப்போதுதான் புரிகிறது. எப்போதுமே நாம் அம்மா அப்பா செல்வைதைவிட அடுத்தவர்கள் சொல்வதைத்தானே கேட்டு பழக்கப்பட்டிருக்கிறோம்.

'சரி, இனிமேலாவது விநாயகர் கோயிலுக்கு போகும்போதும், ஏன் வீட்டிலேயும்கூட தோப்புக்கரணத்தை போட முடிவு செய்துவிட்டேன். ஆனால் எப்படி போடுவது?' என்கிறீர்களா..? உங்களுக்காக சின்ன டிப்ஸ்...

* தினந்தோறும் அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டாலேகூட போதும்.

* உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்றுகொள்ளுங்கள்.

* உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும்.

* வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* அதேபோல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* பிடித்துக் கொள்ளும்போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும்
இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

* மூச்சை நன்றாக வெளியே விட்டபடி, அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள்.

* ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து செய்வது கடினமாக இருப்பவர்கள் ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடங்கள் என படிப்படியாக அதிகரித்துக்கொள்ளுங்கள்.

நம் குழந்தைகளை புத்திசாலியாக்க அபாகஸ் பயிற்சி அளிக்கும் நாம், இனியாவது தோப்புக்கரணத்தை சொல்லிக்கொடுப்போம்.

-கா.முத்துசூரியா 

விகடன் செய்திகள் - 21.04.2016

No comments:

Post a Comment