disalbe Right click

Friday, April 21, 2017

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கல்வி பெற

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கல்வி பெற.....

தனியார் பள்ளிகளில் கட்டணமில்லாமல் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு சேர்ப்பது எப்படி?
தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு, மிகப்பெரிய அளவில் போட்டிபோட வேண்டியிருக்கிறது. கல்லூரிகளில் மட்டுமே வசூலிக்கப்பட்ட நன்கொடை, இப்போது எல்.கே.ஜி-யில் சேர்ப்பதற்கும் வசூலிக்கிறார்கள். இதைத் தவிர, பெற்றோரின் வருமானத்தில் பெரும்பகுதியைக் கட்டணமாகச் செலவுசெய்ய வேண்டியுள்ளது. 
பெருநகரங்களில் உள்ள ஒருசில பள்ளிகளில் சேருவதற்கான விண்ணப்பத்தைப் பெறுவதற்கு, இரவு நேரத்திலிருந்தே வரிசை நிற்கிறது. அடுத்த ஆண்டில் சேர, இந்த ஆண்டே விண்ணப்பம் வழங்கும் பள்ளிகளும் உள்ளன. இவர்களுக்கு மத்தியில் `நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்கு வாய்ப்பு இல்லையா?’ என ஏக்கத்துடன் காத்திருக்கும் பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவினருக்கு உதவக் காத்திருக்கிறது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.
இந்தச் சட்டத்தின் மூலம், சிறுமைபான்மையினர் நடத்தும் பள்ளிகளைத் தவிர மற்ற அனைத்து நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் கட்டணம் இல்லாமல் பிள்ளைகளைச் சேர்க்கலாம். ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவிகிதம் அளவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்க்கப்படும் குழந்தைகளிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசு, கல்விக் கட்டணத்தைப் பள்ளிக்கு நேரடியாகச் செலுத்திவிடும்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சட்டம் இருந்தாலும், `சரியான விண்ணப்பங்கள் வரவில்லைஎன்று தனியார் பள்ளிகள் சாக்குபோக்குச் சொல்லி வந்தன. `விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில்லைஅல்லது `பிள்ளைகளைச் சேர்க்கும்போது பெரிய அளவில் அலைக்கழிக்கவைக்கிறார்கள்என்று பெற்றோர்கள் புகார் தெரிவிக்க, அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக விண்ணப்பத்தை இணையதளத்தின் வழியாகவே பெற ஆரம்பித்திருக்கிறது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது தமிழகக் கல்வித் துறை. மே 18-ம் தேதி வரை www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  இணையதள வசதி இல்லாதவர்கள், அருகில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், தொடக்கக் கல்வி உதவி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகம், அரசு இ-சேவை மையங்கள் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுடைய பதிவு, உங்களுடைய மொபைலில் எஸ்.எம்.எஸ்-ஆகத் தகவல் கிடைத்துவிடும்.
இணையத்தில் பதிவுசெய்யும்போது, கீழ்க்காணும் சான்றிதழ்களை இணைக்க வேண்டும். 
1. குழந்தையின் புகைப்படம்.  
2. பிறப்புச் சான்றிதழ் (பிறப்புச் சான்று, மருத்துவமனை உதவியாளர் மற்றும் மருத்துவப் பதிவேட்டின் நகல், அங்கன்வாடிப் பதிவேடு நகல், பெற்றோர் அல்லது பாதுகாவலர், குழந்தை பிறந்த தேதி குறித்து வழங்கிய உறுதிமொழி. இவற்றில் ஏதேனும் ஒன்று சமர்பிக்க வேண்டும்).
3. இருப்பிட அடையாள அட்டை (குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக்கணக்குப் புத்தகம், தொலைபேசிக் கட்டண ரசீது, வருமானவரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, இருப்பிடம் சார்ந்து கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சான்று, மாநில/மத்திய அரசு/பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும்).
விண்ணப்பப் படிவத்தில் `நலிவடைந்த பிரிவினர்’, `வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் (சிறப்புப் பிரிவு)’, `வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்என்று மூன்று வகை இருக்கும். நலிவடைந்த பிரிவினர் என்பது, ஆண்டு வருமான அடிப்படையில் முடிவெடுக்கிறார்கள். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவில், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினம், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள், ஹெச்.ஐ.வி-யினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தை போன்றோரையும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் மற்றும் மற்ற மதத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர் போன்றோரும் விண்ணப்பிக்கலாம்.
4. நலிவடைந்த பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர், வருமான சான்றிதழையும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர் சாதிச் சான்றிதழையும், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதரவற்றவர்/ ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்/ மூன்றாம் பாலினத்தவர்/ மாற்றுத்திறனாளிகள்/ துப்புரவுத் தொழிலாளியின் குழந்தையெனில் அதற்கான சான்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். 
பதிவுசெய்த விவரங்களை அச்சிட்டு, உங்களது குழந்தை எந்தப் பள்ளியில் சேர்க்க விரும்புகிறீர்களோ அந்தப் பள்ளியில் சமர்பிக்க வேண்டும், விண்ணப்பத்தில், உங்களுக்கு அருகில் உள்ள ஐந்து பள்ளிகளை நீங்கள் தேர்வுசெய்யலாம்
உங்கள் வீட்டுக்கு அருகில் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எவ்வளவு பிரிவுகள் இருக்கின்றன, எவ்வளவு மாணவர்களுக்கு எந்த வகுப்பு அனுமதி வழங்கப்படுகின்றன போன்ற அனைத்து விவரங்களும் இணையதளத்தில் உள்ளன. 
பள்ளியில் சேர்க்கைக்காக விவரங்களை மே - 23க்குள் வெளியிட வேண்டும். இந்த விவரங்களைப் பள்ளியின் நோட்டீஸ் போர்டில் வெளியிட வேண்டும்.  பின்பு 'சேர்க்கைக்கான விவரங்களை இணையத்திலும் வெளியிடப்படும்என்று அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு வாரமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அதிக அளவில் விண்ணப்பம் வரும்போது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, மே-23 தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது அரசு. 
வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுங்கள். 
 SAKTHIVEL MURUGAN G

நன்றி : விகடன் செய்திகள் -22.04.2017


No comments:

Post a Comment