disalbe Right click

Sunday, May 7, 2017

மறைந்த போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு ஓய்வூதிய பலன் வழங்க தடை

மறைந்த போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு ஓய்வூதிய பலன் வழங்க தடை

சென்னை: மறைந்த கூடுதல், டி.ஜி.பி.,யின் மனைவி மற்றும் மகளுக்கு, ஓய்வூதிய பலன்கள் வழங்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில், கூடுதல், டி.ஜி.பி.,யாக பணியாற்றி, 2016 ஜனவரியில் ஓய்வு பெற்றவர், எஸ்.ராஜேந்திரன்; அதே ஆண்டு செப்டம்பரில் மரணமடைந்து விட்டார்.
இவரது மகள் பிரியதர்ஷினி தாக்கல் செய்த மனு:
விவாகரத்து :
என் தாயார் அனிதாவை, 1985ல், ராஜேந்திரன் திருமணம் செய்தார். அவர்களுக்கு மகளாக, 1986ல், பிறந்தேன். இருவருக்கும், 1991ல், விவாகரத்து ஏற்பட்டது. பின், என் தந்தை, பாக்யதேவி என்பவரை மணந்தார். அவர்களுக்கு, காவ்யா என்ற மகள் உள்ளார். ஓய்வு பெற்ற பின், 2016 செப்டம்பரில், என் தந்தை இறந்தார். அப்போது, அவருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை.
வாரிசு உரிமை சட்டப்படி, சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு, சொத்திலும், ஓய்வூதிய பலன்களிலும் பங்கு உண்டு.
வாரிசு சான்றிதழ் கேட்டு, சோழிங்கநல்லுார் தாசில்தாரை அணுகினேன். அப்போது, தந்தையின் இரண்டாவது மனைவியின் மகள் காவ்யாவும், வாரிசு சான்றிதழ் கேட்டிருப்பதாக, தகவல் தெரிந்தது.. என் பெயரை மறைத்துள்ளனர். 'என் பெயரை சேர்க்காமல், வாரிசு சான்றிதழ் வழங்க கூடாது' என, தாசில்தாருக்கு கடிதம் அளித்தேன். இருந்தும், என் பெயரை சேர்க்காமல், வாரிசு சான்றிதழ் அளித்துள்ளார்.
விசாரணை :
எனவே, அதை ரத்து செய்யும்படி, தாம்பரம் வருவாய் கோட்ட அதிகாரிக்கு, விரிவான மனு அளித்தேன். விசாரணை இன்னும் முடியவில்லை; அடுத்தகட்ட விசாரணை நாளை வருகிறது.
இதற்கிடையில், ஓய்வூதிய பலன்களை வழங்கும்படி, உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யை, இரண்டாவது மனைவி நிர்ப்பந்திக்கிறார். என் பெயரையும் பரிசீலிக்கும்படி, டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பினேன்; மனுவும் அனுப்பினேன்.
எனவே, குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணையை முடிக்கும்படி, தாம்பரம் ஆர்.டி.ஓ.,க்கு உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, ஓய்வூதிய பலன்கள் வழங்க தடை விதிக்க வேண்டும், இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
மறைந்த கூடுதல் டி.ஜி.பி.,யின் இரண்டாவது மனைவி மற்றும் மகளுக்கு, ஓய்வூதிய பலன்கள் வழங்க, தமிழக அரசுக்கு, நீதிபதி தடை விதித்தார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 07.05.2017



No comments:

Post a Comment