disalbe Right click

Monday, May 8, 2017

நீதிபதி கர்ணனுக்கு சிறை... ஊடகங்களுக்குத் தடை! உச்சநீதிமன்றம் அடுத்தடுத்த அதிரடி


நீதிபதி கர்ணனுக்கு சிறை... ஊடகங்களுக்குத் தடை! உச்சநீதிமன்றம் அடுத்தடுத்த அதிரடி

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீதிபதி கர்ணனின் உத்தரவுகளை வெளியிடவும் ஊடகங்களுக்குத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர், சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். கடந்த ஆண்டு, இவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம்செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்தார் கர்ணன். அதுமட்டுமன்றி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் செய்வதாக கடிதம் ஒன்றை எழுதி, பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பிவைத்தார்.
நீதிபதி கர்ணன் இவ்வாறு செய்தது நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது. எனவே, உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இதற்கிடையே, நீதிபதி கர்ணனின் மனநலம்குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. மனநலப் பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், கர்ணனுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கர்ணனின் உத்தரவுகளை வெளியிட, ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பல உத்தரவுகளை கர்ணன் பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2017

No comments:

Post a Comment