disalbe Right click

Tuesday, July 4, 2017

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரத்தை பறித்த மத்திய அரசு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரத்தை பறித்த மத்திய அரசு
புதுடில்லி: மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக அவ்வப்போது பரபரப்பு உத்தரவுகளை பிறப்பித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.
நீதிமன்றத்திற்கு இணையாக அதிகாரம்
தேசிய பசுமை தீர்ப்பாயம், 2010 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் முதன்மை பெஞ்ச் டில்லியில் உள்ளது. இதுதவிர சென்னை உட்பட நாட்டின் நான்கு இடங்களில் இதன் மண்டல பெஞ்ச்கள் உள்ளன. இத்துடன் சிம்லா, ஷில்லாங், ஜோத்பூர் மற்றும் கொச்சியில் சர்க்கியூட் பெஞ்ச்கள் உள்ளன. இந்த தீர்ப்பாயத்திற்கு நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவைகளை நிறுத்தி வைப்பது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவது போன்றவற்றை இந்த தீர்ப்பாயத்தால மேற்கொள்ள முடியும். தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும். இந்த தீர்ப்பாயத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமன விதிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.
மாற்றப்பட்ட விதிகள்
  1.  தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தான் பொறுப்பு ஏற்க முடியும் என முந்தைய விதிகளில் இருந்தது. இது, ஓய்வு பெற்ற நீதிபதிகள் அல்லது 25 ஆண்டுகள் சட்ட அனுபவம் உள்ளவர் இந்த பதவியை ஏற்கலாம் எனக்கூறி விதி திருத்தப்பட்டுள்ளது.
  2. . தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு தான் இறுதியானது என முந்தைய விதியில் இருந்து. இது, ஐந்து பேர் கொண்ட குழு, தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் என விதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோரை மத்திய அரசு நியமிக்கும்.
  3.  தீர்ப்பாயத்தின் தலைவரை நீக்க வேண்டும் என்றால், தலைமை நீதிபதியின் கருத்தை கேட்ட பிறகு தான் முடிவு எடுக்க முடியும் என முந்தைய விதிகளில் இருந்தது. இது, தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினரை, விசாரணை நடத்திய மத்திய அமைச்சரவை நீக்க முடியும் என விதி மாற்றப்பட்டுள்ளது. 
  4.  தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள்; அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என முந்தைய விதிகளில் கூறப்பட்டு இருந்தது. இது, தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள் மட்டுமே; கிரேடு 1 அதிகாரிக்கு இணையான சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என, விதிகள் மாற்றப்பட்டுள்ளது.
  5.  தீர்ப்பாயத்தின் தலைவர் நியமனம், தலைமை நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி இடம் பெறும், ஐந்து பேர் கொண்ட குழுவால் தான் மேற்கொள்ளப்படும். இந்த குழுவின் பிற நான்கு உறுப்பினர்களை மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் நியமிக்கும். 
இவ்வாறு பல்வேறு விதிகளை மாற்றி அமைத்து ஜூன், 1ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.07.2017

No comments:

Post a Comment