disalbe Right click

Sunday, August 6, 2017

வீட்டில் இருந்து கொண்டே காவல்துறையில் புகார் அளிக்கலாம்

வீட்டில் இருந்து கொண்டே காவல்துறையில் புகார் அளிக்கலாம்!
காவல்துறை இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) இலவசமாகப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு இ-சேவை மையங்களில் ரூ.10 கட்டணம் செலுத்தியும் முதல் தகவல் அறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
குற்றம் மற்றும் குற்றவாளி களைக் கண்காணிக்கும் வலைப் பின்னல் திட்டம் மூலம் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யும் 1,913 காவல்நிலையங்கள் மற்றும் காவல் சிறப்புப் பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணைய வழி (http://eservices.tnpolice.gov.in) சேவை மூலம் பொதுமக்களுக்கு சேவைகள் இலவசமாக வழங்கப் படுகின்றன.
பொதுமக்கள் வீட்டில் இருந்த படியே இணையதளம் மூலமாக காவல் நிலையத்துக்கு புகார் அனுப்பி பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் அளிக்கப்படும் புகார் பதிவு செய்யப்படும். முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பார்ப்பதுடன், பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.
இணையதள புகார், முதல் தகவல் அறிக்கை, சமுதாய பணிப் பதிவேட்டின் (சிஎஸ்ஆர்) நிலையை அறிய முடியும். வாகனங்கள் தேடல், காணாமல் போனவர்கள், உயிரிழந்து அடையாளம் கண்டு பிடிக்கப்படாதவர்கள் உள்ளிட்ட விவரங்களை அறியலாம். இத்தகவல்கள் புகார்தாரர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். சாலை விபத்து தொடர்பான ஆவணங்களையும் காணலாம்.
முதல் தகவல் அறிக்கை
காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தீவிர வாதம், இளம் சிறார், சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகள் நீங்கலாக அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளும் 24 மணி நேரத்துக்குள் காவல்துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதன்படி, 2016 நவம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மேற்குறிப்பிட்ட தடை செய்யப் பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையையும் தமிழ்நாடு காவல்துறை வலைதளத்தில் பொதுமக்கள் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
பொதுமக்கள் பழைய வாகனங்களை வாங்கும்போது, அவை விபத்தில் சிக்கியவையா, திருடப்பட்ட வாகனங்களா என்பதைக் கண்டறியவும் முடியும். சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரைவில் இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட நபரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் உதவியுடன் விபத்துகள் தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அதற்கான பணத்தை இணையதளத்திலேயே செலுத்தவும் இயலும்.
காவல்துறை வழங்கும் இணையதள சேவைகளை அரசு இ-சேவை மையங்களில் கட்டணம் செலுத்தியும் பொதுமக்கள் பெறலாம். சிஎஸ்ஆர், முதல் தகவல் அறிக்கை நிலை அறிதல், வாகனத் தேடலுக்கு தலா ரூ.10, இணையதள புகார் பதிவு நிலை அறிய ரூ.20 செலுத்தி தகவல் பெற்றுக் கொள்ளலாம்.
புகாரின் முடிவு பற்றி புகார் தாரரின் செல்போனுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 06.08.2017 

No comments:

Post a Comment