disalbe Right click

Sunday, August 27, 2017

வாகன ,ஓட்டுனர்கள், 'ஒரிஜினல் ,லைசென்ஸ்' வைத்திருப்பது,கட்டாயம்

வாகன ,ஓட்டுனர்கள், 'ஒரிஜினல் ,லைசென்ஸ்வைத்திருப்பது,கட்டாயம்
வாகனம் ஓட்டுவோர், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும்' என்ற அரசின்உத்த ரவு, செப்டம்பர், 1-ம் தேதி முதல் கட்டாயமாகிறது. மீறுவோர் மீது, சட்ட நடவடிக்கை பாயும் என, காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாகன ,ஓட்டுனர்கள், 'ஒரிஜினல் ,லைசென்ஸ்' வைத்திருப்பது,கட்டாயம்
தமிழகத்தில், டூ - வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு என, தனித்தனி லைசென்ஸ் வழங்கப்படுகிறது. அவை, ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. லைசென்ஸ் பெறுவதற்கு முன், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், எல்.எல்.ஆர்., என்ற, பழகுனர் உரிமம் பெற வேண்டும்.
பின், ஒரு மாதம் கழித்து, லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம். அப்போது, விண்ணப்பதாரர் வாகனம் இயக்குவதை, மோட்டார் வாகன ஆய்வாளர் பரிசோதித்து, லைசென்ஸ் வழங்க, ஆர்.டி.ஓ.,க்கு பரிந்துரைப்பார். இவ்வாறு, லைசென்ஸ் பெற, பல படிகள் உள்ளன.
இதனால், வாகன ஓட்டுனர்கள், ஒரிஜினல் லைசென்சை, பாதுகாப்பாக வீட்டில் வைத்து விட்டு, அதன் நகலை மட்டும் வைத்திருப்பர்.
போலீசார், வாகன சோதனையில் ஈடுபடும் போது, நகல் லைசென்சை காட்டி செல்வர். மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ அல்லது விதிகளை மீறி ஓட்டினாலோ, வண்டியின் சாவியை, போலீசார் எடுத்துக் கொள்வர்; ஒரிஜினல் லைசென்ஸ் எடுத்து வரும்படி கூறுவர். ஒரிஜினல் லைசென்ஸ் வந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
ஆட்டோ, வேன், பஸ் போன்ற வர்த்தக வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்களை நியமித்து, அவற்றை வாடகைக்கு விடுகின்றனர். வாகனங்களை, சொந்த வண்டி போல் பராமரிக்கவும், வாடகையை ஒழுங்காக தரவும், டிரைவர்களின், ஒரிஜினல் லைசென்சை வாங்கி வைத்துக் கொள்வர்.
இந்நிலையில், வாகன விபத்துக்களால், உயிர் இழப்பு அதிகரிப்பதை அடுத்து, வாகனம் ஓட்டுவோர், ஒரிஜினல் லைசென்சை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஆணைப்படி, 'செப்., 1 முதல்வாகன ஓட்டுனர்கள்ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, காவல் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:
வாகனத்தை ஒழுங்காக ஓட்ட தெரிந்தாலும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்,அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, லஞ்சம் தந்தால் மட்டுமே லைசென்ஸ் கிடைக்கிறது. வாகனத்தை ஒழுங்காக ஓட்டினாலும், பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், போலீசார், வண்டி சாவியை பறித்து, அலைய வைப்பர்.
தற்போது, கட்டாயம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் தவறே செய்யவில்லை என்றாலும், அதை வைத்து, பணம் வசூலில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொலைந்து போனால் பெரிய தொல்லை!
ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கை குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாகன  சட்டப்படி, அசல் ஆவணங்கள் வைத்திருப்பது கட்டாயம். இந்திய மனபான்மை படி, அனைத்திலும் நகல் வைத்திருப்பது, வாடிக்கையாகி விட்டது. இதற்கு, இதுவரை அனுமதி அளித்தோம்; இனிமேலும் முடியாது.
வாகன ஓட்டுனர், ஒரிஜினல் லைசென்சை தொலைந்து விட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என, சான்றிதழ் வாங்கி வர வேண்டும். அந்த சான்றிதழை, அவரது பகுதியை சேர்ந்த, ஆர்.டி.ஓ.,விடம் கொடுத்தால், அவர் அனைத்து, ஆர்.டி.ஓ.,க்களுக்கும், அந்த நபரின் லைசென்ஸ் எண்ணை அனுப்பி, 'இவரது லைசென்சை, யாராவது பறிமுதல் செய்து உள்ளீர்களா?'  என கேட்டு,  கடிதம் எழுதுவர்.
அதற்கு, பதில் வராத பட்சத்தில், எல்.எல்.டி., படிவம் மற்றும் 20 ரூபாய் பத்திரத்தில், 'தற்போது, நான் வாங்கும் லைசென்சை தவறாக பயன்படுத்த மாட்டேன். இதில், நடக்கும் தவறுக்கு நானே பொறுப்பு' என்று எழுதி கொடுக்க வேண்டும். பின், 10 நாட்களில், புதிய டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர், சடகோபன் கூறுகையில், ''ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், தொலைந்து விடும் பட்சத்தில், இணைய தளத்தில் எளிதாக பெற, அரசு வழிவகை செய்ய வேண்டும். இல்லை யென்றால், வாகன ஓட்டிகள் அனைவரும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், பல நாட்கள் காத்திருக்கும் நிலையும், அவர்கள், 'கேட்பதை' கொடுக்க வேண்டிய நிலையும் வரும்,'' என்றார்.
போக்குவரத்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'போக்குவரத்து போலீசார், ஒரிஜினல் லைசென்சை பறிமுதல் செய்து, அதிகளவில் பணம் கேட்பர் என, பொது மக்கள் அச்சப்பட வேண்டாம். அதுபோன்ற செயல் களில் ஈடுபடும் போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்' என்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் -26.08.2017
அசல் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்! அல்லது ரூ500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. 
நன்றி : தினமலர் நாளிதழ் -29.08.2017

No comments:

Post a Comment