disalbe Right click

Wednesday, August 9, 2017

பத்திரத்தில் இருக்கின்ற வார்த்தைகளின் அர்த்தங்கள்

பத்திரத்தில் இருக்கின்ற வார்த்தைகளின் அர்த்தங்கள்
சொத்து மற்றும் பொருள் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு அந்தக்காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை  கல்வெட்டுகளில் தொடங்கி, செம்புத் தகட்டினால் ஆன பட்டயங்கள், ஓலைச் சுவடிகள்  என்று பல முறைகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். நாம் இப்போது அதற்கு காகிதத்தை பயன்படுத்தி வருகின்றோம். இதற்காக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வார்த்தைகள் காலப்போக்கில் மாறிமாறி வந்தாலும், இன்னும் சில பழைய வார்த்தைகள் நம்மிடையே புழக்கத்திலேயே உள்ளன. இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள்,  அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் காண வேண்டுமென்றால் பழைய ஆட்கள் யாரையாவது தேட வேண்டியதிருக்கிறது. 
பொதுவாக ஒரு வீடோ அல்லது காலிமனையோ வாங்குபவர்கள் அது சம்பந்தமான பத்திரங்களை அடுத்தவர்களிடம் கொடுத்தே சரி பார்த்துக் கொள்கின்றனர். ஆனால், அது தவறு. அதில் உள்ள வார்த்தைகள் அனைத்திற்கும் அர்த்தம் தெரிந்து கொள்வது நாம் ஒவ்வொருவருக்கும் நல்லதாகும்.
பதிவுத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற பத்திரங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அதற்குண்டான அர்த்தங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.தெரிந்து பயனடையுங்கள்.
பட்டா
ஒரு நிலமானது இன்னாருடைய பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கின்ற சான்றிதழ் பட்டா ஆகும்.
சிட்டா
ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு என்ன? அதன் பயன்பாடு என்ன? அது யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம் சிட்டா ஆகும்.
10(1) அடங்கல்
ஒரு நிலத்தின் பரப்பு, அதன் பயன்பாடு,  அந்த நிலம் இருக்கின்ற கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது போன்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணத்தை நாம் 10(1) அடங்கல் என்கிறோம்..
கிராம நத்தம்
ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்ற குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம் கிராம நத்தம் என்றழைக்கப்படுகிறது.
கிராம தானம்
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக பகுதி நிலத்தை ஒதுக்குவார்கள். அதனை கிராமதானம் என்பார்கள்.
தேவதானம்
கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக சிலர் அளித்திருப்பார்கள்.அதனை தேவதானம் என்பார்கள். 
விஸ்தீரணம்
ஒரு நிலத்தின் பரப்பளவு, மற்றும் எல்லைகளை குறிப்பது விஸ்தீரணம் ஆகும்.
கிரையம்
பிறருக்கு சொந்தமான நிலத்தை தனக்கு விற்பனை செய்வதை கிரையம் என்கிறோம்.
வில்லங்க சான்று
ஒருநிலமானது யாருடைய பெயரில் இருக்கிறது? அவர் அதன் பெயரில் கடன் பெற்றுள்ளாரா? அல்லது வேறு யாருக்கும் விற்றுள்ளாரா?   என்ற விவரத்தை அறிந்து கொள்ள பதிவுத்துறை வழங்கும் ஆவணம் வில்லங்கச் சான்று ஆகும்.
புல எண் 
ஒரு நிலத்திற்கு வருவாய்த்துறை வழங்கியுள்ள நில அளவை எண் புல எண் ஆகும்.
புல வரைபடம்
ஒரு குறிப்பிட்ட நிலத்தின் நீளம், அகலம், குறுக்களவு மற்றும் அதில் உள்ள கிணறு, கட்டிடங்களின் தோற்றம் ஆகியவற்றை குறிக்கின்ற படம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் Field Measurement Book (சுருக்கமாக FMB) என்று சொல்வார்கள்
இறங்குரிமை 
ஒரு சொத்தானது அதற்கு உரியவர் இறந்தவுடன், அவருக்கு இரத்த சம்பந்தமான மகன், மகள், பேரன், பேத்தி ஆகியோருக்கு வாரிசு அடிப்படையில் மாறும் உரிமை இறங்குரிமை  ஆகும்.   .
தாய்பத்திரம்
ஒரு குறிப்பிட்ட நிலமானது தற்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவுகின்ற முந்தைய பரிவர்த்தன ஆவணம் தாய்பத்திரம் ஆகும்.
ஏற்றது ஆற்றுதல்
ஒரு ஆவணத்தில் குறித்த வகையில் பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல் ஏற்றது ஆற்றுதல் ஆகும்.
அனுபவ பாத்தியதை
ஒரு நிலத்தை பயன்படுத்திக்  கொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு
ஒரு நிலத்தின் மீதான உரிமையை வேறொருவருக்கு ஒப்படைத்தல்.
ஜமாபந்தி
வருவாய்த்துறை மூலமாக நிலசம்பந்தமான குறைகளை தீர்க்கும் தீர்வாயம்.
நன்செய்நிலம்  (நஞ்சை) 
மழையை எதிர்பார்க்காமல், அதிக தண்ணீர் வசதி கொண்ட நிலம்.
புன்செய்நிலம் (புஞ்சை)
பாசன தேவைக்கு மழையை மட்டுமே நம்பியுள்ள நிலம். சுருக்கமாக வானம் பார்த்த பூமி என்பார்கள்.
குத்தகை
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை அதன் உரிமையாளர் குறிப்பிட்ட காலத்துக்கு வேறு ஒருவருக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது குத்தகை ஆகும்..
*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment