disalbe Right click

Thursday, August 10, 2017

வெளிநாடு வாழ் இந்தியர் இங்குள்ள வங்கியில் கடன் பெற

வெளிநாடு வாழ் இந்தியர் இங்குள்ள வங்கியில் கடன் பெற
வெளிநாட்டுக்குப் போய்ச் சம்பாதித்து, பின்னர் சொந்த ஊருக்கு வந்து வீடு, வாசல் கட்டும் காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டே, வீட்டுக் கடன் வாங்கி சொந்த ஊரில் வீடு கட்டிவிடலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) வீட்டுக் கடன் வழங்க வங்கிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. என்.ஆர்.ஐகள் வீட்டுக் கடன் வாங்குவது மிகவும் கஷ்டம் என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால், அவர்கள் வீட்டுக் கடன் வாங்குவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது.
வங்கிகள் தாராளம்வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வீட்டுக் கடன் வழங்க ரிசர்வ் வங்கி பொது அனுமதி வழங்கிய பிறகு, வங்கிகளும் தேசிய வீட்டு வசதி வங்கியால் (National Housing Bank) அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களும் கடன் அளிக்கத் தாராளம் காட்டுகின்றன. வீட்டுக்கடன் வழங்க உள் நாட்டு இந்தியர்களுக்கு ஒரு விதிமுறையும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஒரு விதிமுறையும் பின்பற்றப்பட்ட காலம் உண்டு.
ஆனால், வீட்டுக் கடன் தொடர்பான பெரும்பான்மையான விதிமுறைகள் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இதன் காரணமாகவே என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் வழங்குவது அதிகரித்து வருகிறது என்கிறார்கள் வங்கியாளர்கள்.
ஒரே விதிமுறைகள்“உள்நாட்டில் ஒருவருக்கு எப்படி வீட்டுக் கடன் அளிக்கப்படுகிறதோ, அதேபோல்தான் வெளிநாடுவாழ் இந்தியருக்கும் வழங்கப்படுகிறது. உதாரணமாக மார்ஜின் தொகை (அதாவது வீட்டு மதிப்பில் 15 முதல் 20 சதவீதம் வரையிலான தொகை), எவ்வளவு காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்துவது (சாதாரணமாக 5 முதல் 25 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவது) மற்றும் வட்டி விகிதம் ஆகியவை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியாகவே பின்பற்றப்படுகின்றன.
அவ்வப்போது ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி விகிதத்துக்குத் தகுந்தபடி கடனுக்கான வட்டி விகிதம் மாறும். என்.ஆர்.ஐ.கள் இந்தியாவுக்கு விடுப்பில் வரும்போது, வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்” என்கிறார் முன்னாள் வங்கி அதிகாரி எஸ்.ஜி.கிருஷ்ணன்.
ஆவணங்கள் என்ன?உள்நாட்டில் வீட்டுக் கடன் வாங்கவே பல சான்றிதழ்களை வங்கிகள் கேட்கும். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வீட்டுக் கடன் வழங்க என்னென்ன சான்றிதழ்களை வங்கிகள் கேட்கும்? என்.ஆர்.ஐ.கள் தங்களுடைய பாஸ்போர்ட்டின் நகல், எந்த நாட்டில், எந்தப் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்றிதழ், சம்பளச் சான்றிதழ், இந்தியாவில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு (என்.ஆர்.இ./எஃப்.சி.என்.ஆர்./என்.ஆர்.ஓ.) விவரங்களைக் கூடுதலாகக் கேட்பார்கள். இவை தவிர்த்து உள்நாட்டு வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்க என்னென்ன ஆவணங்களைக் கேட்பார்களோ அவற்றையெல்லாம் எ.ஆர்.ஐ.களிடமும் கேட்பார்கள்
திருப்பிச் செலுத்துவது எப்படி?உள்நாட்டில் வீட்டுக் கடன் வாங்கினால், ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ.யை வங்கிக்கு நேரடியாகச் சென்றோ, இணையம் மூலமோ செலுத்திவிடுவோம். வெளி நாட்டில் இருந்துகொண்டு வீட்டுக் கடனை எப்படி அடைப்பார்கள் என்ற கேள்வி எழலாம். அதற்கெல்லாம் நிறைய வழி இருக்கிறது.
“வெளிநாட்டில் இருந்தபடியே இ.எம்.ஐ. செலுத்த முடியும். கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்குச் சில வழிமுறைகளைச் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து அந்நியச் செலாவணி, வங்கிகள் வாயிலாகவே இந்தத் தொகை வங்கிக்கு வர வேண்டும். அல்லது கடன் பெற்ற வெளிநாடுவாழ் இந்தியரின் என்.ஆர்.இ. அல்லது எஃப்.சி.என்.ஆர். அல்லது என்.ஆர்.ஓ. கணக்கிலிருந்து செலுத்தலாம்.
இந்தக் கணக்குக்கு அடமானமாக வைக்கப்பட்ட வீட்டின் மூலம் வாடகை வருமானம் வருமேயானால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அந்த வாடகைப் பணத்தைப் பயன்படுத்தலாம். கடனைத் திருப்பிச் செலுத்துபவருக்கு இதில் எது எளிதாக இருக்கும் என்று கருதுகிறாரோ அதைத் தாராளமாகப் பின்பற்றலாம்” என்கிறார் எஸ்.ஜி. கிருஷ்ணன்.
விரிவாக்கத்துக்கும் கடன்என்.ஆர்.ஐ.கள் வீடு கட்டவோ, வாங்கவோ மட்டுமே வங்கிகள் கடன் அளிக்கும் என்று கருத வேண்டாம். அவர் களுக்கு ஏற்கனவே உள்ள சொந்த வீட்டைப் பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும்கூட வங்கிகளிட மிருந்தும் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களிடமிருந்தும் கடனுதவி கிடைக்கின்றன. இப்படி என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் வழங்குவது எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
எனவேதான் சென்னை போன்ற பெரு நகரங்களில் நடைபெறும் வீடு, மனைக் கண்காட்சிகளில் என்.ஆர்.ஐ.களைக் குறி வைத்தே நிறைய அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
நன்றி : தி இந்து நாளிதழ் - 10.01.2015

No comments:

Post a Comment